PUBLISHED ON : டிச 16, 2015
1குடல் இறக்கம் என்றால் என்ன?
ஒரு மனிதனின் வயிற்றுப் பகுதியில், இயல்பற்ற குடல் இறக்கம் அல்லது வீக்கம் இருக்குமானால் அதுவே குடல் இறக்கம். ஆங்கிலத்தில், 'ஹெர்னியா' என்பர்.
2 குடல் இறக்கத்தில் வகைகள் உள்ளனவா?
'இங்வைனல்' குடல் இறக்கம் என்பது முதல் வகை. இதில் நேரடி மற்றும் மறைமுக குடல் இறக்கம் உள்ளது. இரண்டாவது தொப்புளில் ஏற்படும் குடல் இறக்கம். மூன்றாவது, 'இன்சிஷ்னல்' குடல் இறக்கம்; அதாவது, ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்திருந்தால், அந்த அறுவை சிகிச்சையின் போது போடப்பட்ட தையல் பிரிவதால் ஏற்படும் குடல் இறக்கம். நான்காவது, பெமோரல் குடல் இறக்கம். பொதுவாக, இவ்வகைக் குடல் இறக்கங்களே ஏற்படும்.
3 குடல் இறக்கம் வரக் காரணம்?
உடல் பருமன், அதிக எடை தூக்குதல், நாள்பட்ட இருமல், கர்ப்ப காலம், புகை, ஏற்கனவே, 'ஹெர்னியா' இருந்து அறுவை சிகிச்சை செய்திருந்தால், மறுபடியும் வர வாய்ப்பு உண்டு.
4 யாருக்கெல்லாம் குடல் இறக்கம் வரும் ஆபத்து அதிகம்?
உடற்பயிற்சிக் கூடங்களில் கடினமான உடற்பயிற்சி செய்வோர், அதிக எடை தூக்கும் பணி செய்வோர், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளோர், ஏற்கனவே ஏதாவது அறுவை சிகிச்சை செய்தோர், கர்ப்பிணிகள், நாள்பட்ட இருமல் உள்ளோர் போன்றோருக்கு, குடல் இறக்கம் வரும் ஆபத்து உண்டு.
5 குடல் இறக்கத்தை கண்டறிய பரிசோதனைகள் என்னென்ன?
பொது அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனை அவசியம். ரத்த பரிசோதனை மற்றும், 'ஸ்கேன்' எடுக்கலாம். பரிசோதனையின் முடிவில், குடல் இறக்கம் என, உறுதியானதும், அறுவை சிகிச்சை அவசியம் செய்ய வேண்டும்.
6 குடல் இறக்கம் ஆண்களையே அதிகம் பாதிப்பது ஏன்?
அதிக எடை தூக்குதல், உடற்பயிற்சி கூடத்தில் கடினமான பயிற்சிகள் மேற்கொள்வது, புகைப்பது போன்றவற்றை ஆண்கள் அதிகளவில் செய்கின்றனர். மேலும், உடற்கூறு அமைப்பிலேயே ஆண்களின் வயிற்றுப் பகுதி லகுவானது. எனவே குடல் இறக்கம் ஆண்களுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம்.
7 குடல் இறக்கத்திற்கான சிகிச்சைகள் என்னென்ன?
குடல் இறக்கத்திற்கு மருந்து, மாத்திரைகள் உண்பது மற்றும் பெல்ட் அணிவது போன்றவை பலன் தராது. அறுவை சிகிச்சை ஒன்று மட்டுமே நிரந்தர தீர்வு.
8 எவ்வகையான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்?
திறந்த நிலை அறுவை சிகிச்சை மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். உடல்நிலையை பொறுத்து, பொது அறுவை சிகிச்சை மருத்துவர் பரிந்துரைப்பார்.
9 எனில், அறுவை சிகிச்சைக்கு பின்னும், குடல் இறக்கம் ஏற்படுவது எப்படி?
முதன் முறை அறுவை சிகிச்சையின் போது போடப்படும் தையல், நோயாளியின் அஜாக்கிரதையாலோ அல்லது இயற்கையாகவோ பிரிந்துவிட்டால், மறுபடியும் குடல் இறக்கம் வரும். ஆனால், மருத்துவ முன்னேற்றத்தால், இந்த பிரச்னை குறைக்கப்பட்டு விட்டது.
10 அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்றால், பின் விளைவுகள் என்னென்ன வரும்?
ஆரம்ப கட்டத்தில் இருக்கும் குடல் இறக்கம் பெரியதாகி, தன் நிலையிலிருந்த சிறு குடல் மற்ற குடலின் வாய்ப்பகுதியில் மாட்டிக் கொண்டு, அடைப்பு ஏற்படும் அல்லது சீழ்பிடித்து அந்த குடல் பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைப்படும்.
இதில் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு பின், எடை தூக்குதல், கடின உடற்பயிற்சி செய்வது, புகைத்தல் போன்றவற்றை தவிர்க்க
வேண்டும்.
- ர.சபரீசன், பொது மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர்,சென்னை.
96597 77666

