PUBLISHED ON : ஜூலை 27, 2016

ஆண்டுதோறும் ஜூலை 28ம் தேதி உலக ஹெபடைடிஸ் பி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஹெபடைடிஸ் 'பி, சி' என்பது என்ன?
கல்லீரலை நிரந்தரமாக செயலிழக்கச் செய்யும் உயிர்க்கொல்லி வைரஸ், ஹெபடைடிஸ் 'பி' மற்றும் 'சி' வைரஸ்.
இப்பாதிப்பு எவ்வாறு பரவுகிறது?
உயிரணுக்கள், பெண் பிறப்புறுப்புத் திரவம் வழியாக இக்கிருமிகள் பரவும்.
மேற்சொன்ன காரணங்களால் மட்டுமே இந்நோய் பரவுகிறதா?
இப்பாதிப்புள்ளவரின் ரத்தத்தை பரிசோதனை செய்யாமல் மற்றவருக்கு செலுத்துவதாலும், ஊசியை சரியாக தொற்று நீக்கம் செய்யாமல் பயன்படுத்துவதாலும் பரவும்.
நோயாளியின் சவரக்கத்தி, ரேசர் பிளேடு போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்துவதாலும் பரவும்.அறிகுறிகள் என்ன?
வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம், பசியின்மை, வயிற்றுப்போக்கு, அதீத களைப்பு. இவற்றோடு உடல் உறுப்புகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். கல்லீரல் 70 சதவீதம் முழுமையாக செயலிழக்கும் நிலை ஏற்படும்போது, மூட்டுகளிலும், தசைகளிலும் கடுமையான வலி ஏற்படும்.
பாதிப்பிற்குரிய சிகிச்சைக்கு அதிகம் செலவாகுமா?
இல்லை. எல்லா மாவட்டங்களிலும் இதற்குண்டான மருந்து கிடைக்கும். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இது கிடைக்கும்.
ஹெபடைடிஸ் 'பி, சி'க்கு தடுப்பூசி உள்ளதா?
ஹெபடைடிஸ் 'பி' நோய்க்கு, முழு நிவாரணம் தருகிற சிகிச்சை இதுவரை இல்லை. ஆனால், தடுப்பூசி உள்ளது. இது கல்லீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரலில் சுருக்கம் வருவதை தடுக்கிறது. ஆனால் ஹெபடைடிஸ் 'சி'க்கு தடுப்பூசி இல்லை; மருந்துகள் உள்ளன.
கர்ப்பிணிக்கு இப்பாதிப்பு இருந்தால்?
கர்ப்பிணிக்கு இருந்தால், பிறக்கப்போகும் குழந்தைக்கும் இது பரவும். இதற்கு ஹெபடைடிஸ் 'பி' இம்மியுனோகுலோபுலின் எனும் தடுப்பு மருந்தை ஏழு நாட்களுக்குள் போட வேண்டும். அதோடு ஹெபடைடிஸ் 'பி' தடுப்பூசியையும் போட வேண்டும்.
ஹெபடைடிஸ் 'பி' தடுப்பூசியை, எவ்வளவு கால இடைவெளியில் போட்டுக் கொள்ள வேண்டும்?
குழந்தை பிறந்தவுடன் முதல் முறையும், ஒரு மாத இடைவெளியில் இரண்டாம் முறையும், ஆறு மாதங்கள் கழித்து மூன்றாம் முறையும் என, மூன்று முறை போட வேண்டும். பெரியவர்களுக்கு ஒரு மாத இடைவெளியிலும், ஆறு மாதங்கள் கழித்தும் போட வேண்டும்.
ஹெபடைடிஸ் 'பி' பாதிப்பை தடுப்பது எப்படி?
ரத்த தானம் பெறும்போது, நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது; தொற்று நீக்கம் செய்யப்பட்ட மருத்துவக் கருவிகளை பயன்படுத்துவது; தொற்று பாதித்தவர்களோடு தாம்பத்ய உறவு கொள்ளாமல் இருப்பது, பாதுகாப்புத் தரும்.
ஹெபடைடிஸ் 'பி' க்கு சிகிச்சைகள் என்னென்ன?
ஹெபடைடிஸ் 'ஏ'வைப் போலவே, இதற்கும் சிகிச்சைகள் உண்டு. வாழ்நாள் முழுதும் எடுத்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசி மட்டுமே உண்டு. இதில் விசேஷம் என்னவென்றால், வாழ்நாளில் ஒரு முறை இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டாலே போதுமானது.
செ. ஜாய் வர்கீஸ்
கல்லீரல் சிறப்பு நிபுணர்.
குளோபல் ஹெல்த் சிட்டி
சென்னை.
95660 62200
