PUBLISHED ON : டிச 14, 2016

நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
மாரடைப்பு, பக்கவாதம், கண், காது, நரம்புகள், சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும்.
காது கேளாமைக்கும் சர்க்கரை நோய்க்கும் என்ன தொடர்பு?
நரம்புகள் பாதிக்கப்படுவதால், உடலின் பிற பகுதிகள் பாதிப்பதைப் போன்று, காதுகளும் பாதிக்கப்படுகின்றன.
காதுகளில் எந்த மாதிரியான பாதிப்பு இருக்கும்?
நம்முடைய காதுகள் சிக்கலான அமைப்புடையது. ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை, காதுகளில் உள்ள நுண்ணிய ரத்தக் குழாய் சுவர்களை பாதிக்கிறது.
காது கேளாமைக்கான அறிகுறிகள்?
காது கேளாமை சிறிது சிறிதாக அறியக் கூடியது. எனவே, கேட்கும் திறன் குறைவதை படிப்படியாகத் தான் உணர முடியும்.
காது கேளாமையினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
காதுக்குள் ரத்தக் குழாய் பாதித்து, கேட்கும் திறன் குறையும்.
காது கேளாமையை எவ்வாறு கண்டறிவது?
காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். ஆடியாலஜிஸ்ட் எனப்படும் சிறப்பு நிபுணர், காது கேட்கும் திறன், பேச்சுத்திறனை மதிப்பீடுவார்.
காது கேளாமையை கண்டறிய ஏதேனும் சிறப்பு கருவிகள் உள்ளதா?
'ஒடோஸ்கோப்' என்ற கருவி மூலம் அறியலாம். இதன் மூலம் எந்த மாதிரியான பாதிப்பும், பாதிப்பின் தீவிரத்தையும் அறியலாம். செவியுணர்வு வரைபடம் என்ற ஆடியோகிராம் பரிசோதனை செய்தும் தேவையான சிகிச்சையை பெறலாம்.
ஒடோமைக்கோஸிஸ் பாதிப்பு என்பது என்ன?
நீரிழிவு நோயாளிகளுக்கு காதில், 'கேன்டிடா அல்பிகன்ஸ்' எனும் பூஞ்சைத் தொற்றால் ஏற்படக்கூடிய பாதிப்பு இது. மற்றவர்களைக் காட்டிலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகமிக அதிகம்.
'பட்ஸ்' பயன்படுத்தி காதுகளை சுத்தம் செய்யலாமா?
பட்ஸ் கொண்டு காதுகளை சுத்தம் செய்வது, காதில் எண்ணெய் விடுவது அல்லது கிடைக்கும் கூர்மையான பொருட்களை பயன்படுத்தி, சுத்தம் செய்வதும் பாதுகாப்பற்றது. காரணம், இதுபோன்ற செயல், காதின் உட்புறத்தில் உள்ள மெல்லிய சவ்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
தடுக்கும் வழிமுறைகள் என்ன?
ஆண்டிற்கு ஒருமுறை பாதம், கண், சிறுநீரகம், காது போன்ற உறுப்புகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். புகை, மது பழக்கத்தை தவிர்ப்பது; ரத்தத்தில் சர்க்கரை மற்றும் உப்பை கட்டுக்குள் வைப்பது; ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்வது இவற்றில் கவனம் தேவை.
தா.ரங்கபாஷ்யம்
பொது மற்றும் நீரிழிவு நிபுணர்.
கடயநல்லூர், திருநெல்வேலி.
