PUBLISHED ON : டிச 20, 2015
சளி, இருமல், இளைப்பு போன்றவை, எல்லா வயதினருக்கும் வரக்கூடியதாகும். இதற்கு ஆங்கில மருந்துகளை விட, இயற்கையாக கிடைக்கும், மூலிகை வகை மருந்துகள், சிறந்த நிவாரணம் தரும். இதில், சளியை போக்கும் இயற்கை மருந்தாக, திப்பிலி பயன்படுகிறது.
திப்பிலி என்பது, அரிய வகை மூலிகை மருந்து. எல்லா நாட்டு மருந்து கடைகளிலும், எளிதாக கிடைக்கும். வெப்பமான பகுதிகளில் வளரும், இயல்புடைய தாவரமாகும். திப்பிலி, மூச்சு உறுப்புகளின் நோய்கள், வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள், பித்த நீர்ப்பை நோய்களை போக்க பயன்படுத்தப்படுகிறது.
திப்பிலி பொடியை சிறிதளவு எடுத்து, தேனில் கலந்து, இரு வேளை கொடுத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள, தொண்டை கட்டு, கோழை, குரல் கம்மல், உணவில் சுவையின்மை ஆகியவை தீரும். இதை சிறிதளவு எடுத்து, வெந்நீரில் போட்டு, காய்ச்சி வடித்து குடித்தாலும், அனைத்து வியாதிகளும் நீங்கும்.
தேனுடன் கலந்த திப்பிலி பொடி சளி, இருமல், ஆஸ்துமா, விக்கல் ஆகியவற்றை குணப்படுத்தும். திப்பிலி கனி, வேர் மற்றும் மிளகு, இஞ்சி ஆகியவை சமஅளவு கலந்த கலவை, குடல்வலி, உப்புசம், இருமல் மற்றும் தொண்டை கரகரப்பு போக்க வல்லது.
மிளகுடன் கலந்த திப்பிலி பொடி, மயக்கம் மற்றும் உணர்வின்மையின் போது உணர்வை தூண்டும் மருந்தாக பயன்படுகிறது. குழந்தை பெற்ற பெண்களுக்கு, இளம் சூடான நீரில், திப்பிலி பொடியை கலந்து கொடுப்பதால், ரத்தப்போக்கு மற்றும் காய்ச்சல் குணமாகும். குழந்தைகளின் குடலில் உண்டாகும் புழுக்களை அகற்ற, திப்பிலி பொடி சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தொடர்ந்து சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும், திப்பிலியை பயன்படுத்தினால், உடனே சளி நீங்கும்.

