தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/'ஆன்லைன்' வகுப்புக்கு பின் உருளை கிழங்கு மசியல்!

'ஆன்லைன்' வகுப்புக்கு பின் உருளை கிழங்கு மசியல்!

'ஆன்லைன்' வகுப்புக்கு பின் உருளை கிழங்கு மசியல்!


PUBLISHED ON : ஜூலை 15, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 15, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொரோனா காலத்தில் நாம் சந்தித்து வரும் மாற்றங்களில் பல நன்மைகளும், சில தீமைகளும் உள்ளன. இதில், குறிப்பாக நான் பார்க்கும் ஒரு ஆரோக்கியமற்ற மாற்றம் என்பது, குழந்தைகளுக்கு தொலை தொடர்பு வாயிலாக நடத்தப்படும், 'ஆன்லைன்' வகுப்புகள்.

இன்றைய சூழலில் இதை தவிர்க்க முடியாது என, சிலர் வாதிடலாம்; ஆனால், இது குழந்தைகளின் ஆரோக்கியம், குறிப்பாக கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. ஆன்லைன் வகுப்பு என்பது, கடந்த இரண்டு மாதங்களாகத் தானே இருக்கிறது? அதற்கு முன்பும் அவர்கள், 'மொபைல் போன், டேப்' போன்றவற்றில் தானே பொழுதை கழித்தனர் என்று சொல்லலாம்.

உண்மை தான். ஆனால், மொபைல் போனை பாட்டு கேட்பதற்கும், விளையாடுவதற்கும், 'வீடியோ' பார்ப்பதற்கும் பயன்படுத்தினர். இது, அவர்களுக்கு பிடித்த விஷயங்கள் என்பதால், மனரீதியான உற்சாகத்தை தந்தது. ஆனால், ஆன்லைன் மூலம் பாடங்களை ஆசிரியர் நடத்தும் போது, மனதை ஒரு நிலைப்படுத்தி கவனிப்பது, ஒருவித இறுக்கமான சூழலை உருவாக்குகிறது.

இருந்தாலும், இந்த ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டதால், குறைந்த பட்சம் கண்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று பார்க்கலாம். சித்த மருத்துவத்தின் அடிப்படை தத்துவமே, மனித உடலானது, பஞ்ச பூதங்களால் ஆனது. எனவே, பூமியில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் நம் உடம்பிலும் ஏற்படும்.

நீர், நெருப்பு, வாயு, ஆகாயம், பூமி ஆகிய பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றும், நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பின் இயக்கத்திற்கு காரணமாக அமைகிறது. கண்களின் செயல்பாட்டுக்கு காரணமாக சொல்லப்படும் பூதம் நெருப்பு. இதை பித்தத்துடன் தொடர்புபடுத்தி கொள்ளலாம்.

உடலில் பித்தத்தால் ஏற்படும் மாற்றங்கள் அதிகமானாலும், குறைந்தாலும், அது நம் கண்களை பாதிப்படையச் செய்யும். பித்தத்தை சமநிலையில் வைத்துக் கொள்வது, கண்களின் ஆரோக்கியத்திற்கு அவசியம். அதிக நேரம் மின்னணு சாதனங்களை உபயோகிக்கும் போது, உடல்சூடு அதிகமாகி, பித்தம் அதிகரிக்கும். இதனால், கண்கள், மலம், சிறுநீர் ஆகியவை மஞ்சள் நிறம் அடையும். உடல் முழுதும் எரிச்சல், தலை சுற்றல், மயக்கம் வரும்; துாக்கம் தடைபடும்.

மூட்டுகளில் உள்ள பசை தன்மை குறைய ஆரம்பிக்கும். இதனால், இளம் வயதிலேயே கை, கால் வலி, மலச்சிக்கல் ஏற்படும். இது போன்ற உபாதைகள் தொடர்ந்து ஏற்பட ஆரம்பிக்கும். அதுபோல பித்தம் அதிகரிக்கும் பொது, கல்லீரலின் செயல்பாட்டையும் வலுவிழக்கச் செய்யும்.

இதற்கான தீர்வு என்ன?

மருந்து, மாத்திரை சாப்பிடுவதால் சரியாகக் கூடிய விஷயம் இல்லை இது. உணவு, பழக்க வழக்கம் போன்றவற்றில் ஏற்படுத்தும் வாழ்வியல் மாற்றங்கள், கண்களையும், உடலையும் வலுவடையச் செய்யும்.

இஞ்சி, தேன்

காலையில் வெறும் வயிற்றில், தேனில் ஊறிய சிறு இஞ்சி துண்டு சாப்பிடுவது நல்லது. இது, உடலின் உஷ்ண அளவை குறைக்கும். மேலும் சீரான ரத்த ஓட்டம், ரத்த உற்பத்திக்கு இன்றியமையாதது. கண்களை சுற்றியுள்ள ரத்த ஓட்டத்துக்கும், நரம்புகளின் வலிமைக்கும் உறுதுணையாக அமையும்.

கண்களை கழுவுதல்

துாங்கி எழுந்தவுடன் நம் கைகள் முதலில் தேடுவது மொபைல் போனைத் தான். கண் விழித்ததும் மொபைல் போன் பார்ப்பது, கண்களுக்கு நல்லதல்ல; கண்களை சுற்றியுள்ள நரம்புகளுக்கு பாதுகாப்பை தராது.

துாங்கி விழித்ததும் கண்களை தண்ணீர் ஊற்றி கழுவுவது நல்லது. அதிக சூடு அல்லது குளிர்ச்சியான நீரில் கழுவக் கூடாது.

மா இலைகளை போட்டு ஊற வைத்த நீரால் கண்களை கழுவுவது நன்மை அளிக்கும்.

அதுபோல, அரை டீஸ்பூன் சோம்பு ஊற வைத்த நீரிலும் கழுவலாம்.

இது, கண்களுக்கு குளிர்ச்சி தருவதோடு, கண்களில் ஏற்படும் சூடு, எரிச்சலை தணிக்கும்.

ஒத்தடம்

தொடர்ந்து பல மணி நேரம் மொபைல் போன் பார்ப்பதால், கண்களை சுற்றியுள்ள நரம்புகள் சோர்வடையும். ஒற்றை தலைவலி, தலையில் நீர் ஏற்றம் போன்ற உபாதைகளும் ஏற்படும். மனதின் உற்சாகத்தை வலுவிழக்கச் செய்யும்.

இதற்கு தீர்வாக, உள்ளங்கைகளை தேய்த்து, கண்களின் மேல் ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு நாளில், ஆறேழு முறை இதை செய்யலாம்.

பாசிப் பருப்பை வேக வைத்து, சுத்தமான துணியில் மூட்டை போல கட்டி, அதை கொண்டும் ஒத்தடம் கொடுக்கலாம்.

நந்தியாவட்டை பூவை துணியில் சுருட்டி வைத்தும் கொடுக்கலாம்.

பற்று போடுதல்

கண் வீக்கம், கண் வலி ஏற்படும்போது, சூட்டினால் ஏற்படும் கட்டிகளுக்கும் பற்று போடுதல், நல்ல நிவர்த்தி அளிக்கும்.

அதிமதுரம் வேரை பொடித்து, பசும் பால் அல்லது நெய்யில் குழைத்து, கண்களை சுற்றி பற்று போட்டு, 15 நிமிடங்கள் கழித்து, சுத்தமான நீரில் கழுவி விட வேண்டும்.

உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்து, இளஞ் சூட்டில் பற்று போட்டு, 15 நிமிடங்கள் வைத்திருந்து கழுவலாம்; குழந்தைகளுக்கும் இதைச் செய்யலாம்.

உணவு

இனிப்பு, கசப்பு, துவர்ப்பு... இந்த மூன்று உணவுகளும் கண்களுக்கு மிகவும் முக்கியமானவை. இவை மூன்றும், நம் உடலின் வெப்பநிலையை சமன் செய்வதிலும், ரத்த உற்பத்திக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும் இன்றியமையாதவை.

வெந்தய களி, உளுந்து களி, சுண்டைக்காய் சேர்த்த உணவுகள், வேப்பம் பூ துவையல், ரசம், தேனில் ஊறிய நெல்லி, இஞ்சி, மாதுளம் பழத்தின் உட்புற தோலுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

இறால் தவிர்த்து மற்ற மீன் வகைகள், பப்பாளி, அன்னாசி பழம், ஆட்டு ஈரல், முருங்கை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, தனியா விதைகளை ஊற வைத்த நீர், கருப்பட்டி இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது, கண்களுக்கு நல்லது.

தவிர்க்க வேண்டியவை

அதிக உப்பு, புளி, கத்தரிக்காய், முந்தின நாள் சமைத்த உணவுகள், ஊறுகாய் ஆகியவை உடல் சூட்டையும், வறட்சியையும் அதிகரிக்கும்.

நெய்

நெய் சாப்பிடுவது கண்களுக்கு நன்மை பயக்கும். நெய்யால் கொழுப்பு அதிகம் ஆகாது.

உருக்கிய நெய் பயன்படுத்த வேண்டும். திரிபலா நெய், பிராமி நெய் இவற்றை மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிட வேண்டும்.

தைலம்

கண்களை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெயின் பங்கு மிக முக்கியமானதாகும்.

தினமும் தலையில் தேங்காய் எண்ணெய் தேய்ப்பது, உடல் சூட்டை குறைக்கும்; கண்களுக்கு குளிர்ச்சி தரும்.

அதுபோல், துாங்கப் போகும் முன், உள்ளங்காலில் அரை டீஸ்பூன் எண்ணெய் தடவுவது; வாரம் மூன்று நாள், கண் இமைகளின் மேல் விளக்கெண்ணெய் தடவ வேண்டும்.

சீரக தைலம், கரிசாலை தைலம், பொன்னாங்கண்ணி தைலத்தை, மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.

பயிற்சி

முறையாக பயிற்சி பெற்ற யோகா பயிற்சியாளரிடம், கண்களுக்கான பயிற்சிகளை கற்று செய்யலாம். இணையதளத்தை பார்த்து பயிற்சி செய்வது கூடாது.

துாங்குவதற்கு ஒரு மணி நேரம் முன், 'மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டர்' பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

வெளிச்சம் குறைவான இடத்தில் வைத்து மொபைல் போன் பார்க்கக் கூடாது.

கண்களில் புகை ஓடுவதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து மொபைல் போன் பார்க்க வேண்டி இருந்தால், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, கண்களை மூடிக் கொள்ள வேண்டும்.

எல்லா வழிமுறைகளை பின்பற்றினாலும், ஓய்வு அவசியம். எட்டு மணி நேரம் இரவில் துாங்குவது, பகல் உறக்கத்தை தவிர்ப்பது, கண்களுக்கு ஓய்வு தரும்.

டாக்டர் மது கார்ததீஷ்,

சித்த மருத்துவர், சென்னை

99944 93687


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us