PUBLISHED ON : ஜூலை 24, 2016

பழ வகைகளில், முலாம்பழத்துக்கு என்றுமே, தனிச்சிறப்பு உண்டு. பழத்தில் புரதச்சத்து, கார்போஹைட்டிரேட், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புசத்து, சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள் ஏ, பி, சி, ஆக்சாலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
கனிந்த பழத்தின் சதைப் பகுதியை, அப்படியே சாப்பிடலாம். இத்துடன் தேன், சர்க்கரை கலந்தும் உண்ணலாம். ஜூஸ் ஆகவும், பாலுடன் கலந்து மில்க் சேக்காகவும் பருகலாம்.
முலாம் பழத்தை உண்டு வர, மூலநோய் குணமாகும்; மலச்சிக்கல் நீங்கும். சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல், நீர்க்கடுப்பு நீங்கும்.
சீரான உணவுப் பழக்கமின்மை, கவலை, அதிகளவான மருந்துகளை உட்கொள்ளல் போன்ற காரணங்களால், வயிற்றுப்புண் ஏற்படுகிறது. இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்புண் பூரண குணமடையும் என, சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சிறுநீரகம், கல்லீரல் கோளாறுகளை போக்கும் தன்மையும், தோல் நோய்களையும் அண்டவிடாமல் காக்கும் எளிய இயற்கை மருத்துவக் குணங்களும் நிறைந்த பழம். உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் கலங்களை அழிக்கும் சக்தி, முதுமையால் வரும் தோல் சுருக்கங்கள் நீங்குதல் போன்ற பலன்களையும் வழங்கிறது.
இப்பழச் சதையுடன் தேன் கலந்து உண்டு வர, வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும் சக்தி அபரிமிதமாக உண்டு. உடலுக்கு வலுவைத் தரும். பழத்தில் சர்பத் செய்து குடித்து வர, குளிர்ச்சி கிடைக்கும்.
