PUBLISHED ON : மார் 15, 2020

மதுரையில் இருக்கும் என் அம்மாவோடு பேசிய போது, 'அடிக்கிற வெயிலுக்கு, 'கொரோனா' சுக்கு நுாறாகி போயிடும்' என்று சொன்னார். அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், 'ஏப்ரல் வந்தால், கொரோனா அழிந்து விடும்' என்று தான் சொல்கிறார். அம்மாவும், அதிபரும் சொல்லும் இந்த அனுபவ ஆராய்ச்சிக்கு, எந்த மருத்துவ ஆதாரமும் கிடையாது.
வெயில் அதிகமானால், கொரோனா வைரசின் வீரியம் வேண்டுமானால் குறையலாமே தவிர, அடிக்கிற வெயிலால், அதை அழிக்க முடியாது. சிங்கப்பூரில், 33 டிகிரி செல்ஷியஸ் வெயில் அடிக்கும் நேரத்தில் தான், 33 பேருக்கு அதன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அப்படி எனில், தமிழகத்திற்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது; ஆனால், அதற்காக பயப்பட தேவையில்லை; எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டியது தான் முக்கியம்.
கொரோனா வைரஸ் தானாகவே நம் உடம்பிற்குள் வரப் போவதில்லை; நாமாகத் தான் வரவழைத்துக் கொள்கிறோம். வைரஸ் தொற்று இருக்கும் ஒருவர் இருமுகிறார். அவர் இருமும் போது, அவரிடம் இருந்து, ஆறடி தொலைவிற்குள் நாம் இருந்தால், கிருமி நம்மையும் தாக்கலாம். ஆறடியை எப்படி அளப்பது எனில், நம் கையை முன் பக்கமாக நீட்டினால் வரும் துாரத்தை போல, மூன்று மடங்கு துாரம் தள்ளி நின்றால், ஆறடி துாரம்.தொற்று ஏற்படும் காலங்களில், கோவில், கல்யாணம், 'ஷாப்பிங்' என்று கூட்டம் அதிகம் சேரும் இடங்களுக்கு, செல்வதை தவிர்க்க வேண்டியது அவசியம்.
தொற்று பாதித்தவர் பயன்படுத்திய கம்ப்யூட்டர், லேப் டாப், மவுஸ், கீ - போர்டு, பாத்ரூம் பொருட்கள், கதவு, ஜன்னல், படிக்கட்டு, தட்டு, டம்ளர் என்று எதிலும், கிருமிகள் இருக்கும். அந்த இடத்தை தொட்டு விட்டு, உடனடியாக கண்களை தேய்ப்பது, வாயில் விரல்களை வைப்பது, மூக்கினுள் விரலை விடுவது, நகம் கடிப்பது போன்றவற்றால், கிருமிகள் உடலுக்குள் சென்று விடும். வெளிப்புறங்களில் இருக்கும் வைரஸ், ஆறு மணி நேரம் வரை உயிருடன் இருக்கலாம். அந்த இடங்களைத் தொட்டவுடன், வாய், கண், மூக்கைத் தொட்டால், நம் உடலுக்குள் வைரஸ் வந்து விடும்.
ராகுல் டிராவிட்
அதனால் தான், கைகளை அடிக்கடி நன்கு கழுவச் சொல்கிறோம். கை கழுவுவது என்றால், குழாயை திறந்து, பெயருக்கு கழுவி விட்டு செல்லக் கூடாது. ராகுல் டிராவிட் கிரிக்கெட் விளையாடுவதைப் போல, நின்று நிதானமாக கழுவ வேண்டும். கையின் முன், பின் பக்கம். விரல் இடுக்குகள், நகங்கள் என்று, 20 வினாடிகள் கழுவ வேண்டும். இருபது வினாடிகளை எப்படி எண்ணுவது என்று கேட்பவர்களும் இருக்கின்றனர். 'ஹேப்பி பர்த்டே டூ யூ...' பாட்டை இரண்டு முறையோ, 'ஒய் திஸ் கொலை வெறி...' பாடலை மூன்று முறையோ பாடினால், 20 வினாடிகள் முடிந்து விடும்; கொரோனா வைரஸ் கையை விட்டு ஓடிவிடும்.
முகத்தை, கைகளால் தொடவே கூடாது. அயர்ச்சியாக உணரும் சமயங்களில், கைகளால், கண்களை கசக்க முயற்சி செய்வோம். கைகளில் வைரஸ் இருந்தால், கண்களுக்குள் போய் விடும். நகம் கடிப்பது, மூக்கை நோண்டுவது, பணம் அல்லது பேப்பர் கட்டுகளை எண்ணும் போது, அவ்வப்போது, விரல்களில் எச்சில் தொடுவது கூடாது.திருமணம், விசேஷ வீடுகள், கோவில் செல்லும் போது, பந்தியில் இடம் பிடிக்கும் அவசரத்தில், கைகளை கழுவாமல் சாப்பிட உட்கார்ந்து விடுவோம். அப்படியே கைகளை கழுவச் சென்றாலும், சோப்பு இருக்காது; வெறும் தண்ணீரில் தான் கழுவ வேண்டியிருக்கும். சோப்பு, தண்ணீர் சேர்த்து கழுவினால் மட்டுமே, கிருமிகள் அழியும். கை கழுவுவதற்கும், சாப்பிடுவதற்கும் நடுவில், எந்த பொருளையும் குறிப்பாக, மொபைல் போனை தொடவே கூடாது; அதில் இருக்கும் கிருமிகள், உடலுக்குள் சென்று விடும்.
முக கவசம்
சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் மட்டும் முக கவசம் அணிந்து கொள்ளலாம். இது நமக்கும், மற்றவர்களுக்கும் நல்லது. மறறவர்கள் போட வேண்டியதில்லை.வைரஸ் கிருமிகள், மிக நுண்ணிய துகள்கள் போன்றவை; முக கவசத்தால் இதைத் தடுக்க முடியாது; எளிதாக பரவும்.நம்மை, நம்மிடமிருந்தே காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், முக கவசம் உதவலாம். கைகளை முகத்திற்கு கொண்டு செல்வதைத் தவிர்க்க முடியாதவர்கள், முக கவசம் அணிந்தால், முகத்தில் கைகளை வைக்கும் நேரத்தில், பாதுகாப்பு இருக்கும். கொரோனாவைச் சாக்காக வைத்து, அதிக விலைக்கு முக கவசம் விற்கப்படுகிறது; முக கவசத்திற்கு தேவையில்லாமல் பணம் செலவு செய்ய வேண்டாம்.
புதிய வைரஸ்
கொரோனா என்றால், லத்தீன் மொழியில், தொப்பி என்று பொருள். இந்த வைரஸ், தன்னைச் சுற்றிலும் தொப்பி போன்ற அமைப்பை உருவாக்கி இருக்கும். இது, புதிய வகை வைரஸ் என்று சொல்வது தவறு.கடந்த, 2003ல் ஹாங்காங்கில் இருந்து, 'சார்ஸ்' என்ற வைரசும், 2012ல், அபுதாபியில் இருந்து, 'மெர்ஸ்' என்ற வைரசும் வந்தன. தற்போது, சீனாவில் இருந்து, கொரோனா வந்துள்ளது.சிவாஜி கணேசன், பிரபு, விக்ரம் பிரபு போல, ஒரே குடும்பத்தில் இருந்து வந்த மூன்று நடிகர்கள் போன்று, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, மூன்று வெவ்வேறு அமைப்புகள் உடைய வைரஸ்கள் இவை. 'பின் ஏன் இத்தனை பீதியடைய வேண்டும்?' என்று கேட்டால், தொற்று இருப்பவரின் அருகில் இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து வெளிப்படும் கொரோனா, சுற்றுப்புறத்தில் ஆறு மணி நேரம் வரை உயிர் வாழும் என்பதால், நம்மையும் அறியாமல், கிருமி இருக்கும் இடத்தை தொட்டாலே, நமக்கும் தொற்றிக் கொள்ளும். அதனால் தான், இது குறித்து இந்த அளவு பயப்பட வேண்டியுள்ளது.
உயிரிழப்பு
கொரோனாவால், 100 பேர் பாதிக்கப்பட்டு இருந்தால், 83 பேர், லேசான காய்ச்சல், தொண்டையில் புண், லேசான இருமல் போன்ற அறிகுறிகளுடன் இரண்டு, மூன்று நாட்களில், முழுமையாக குணம் அடைந்து விடுவர்; எந்தப் பிரச்னையும் இருக்காது.மீதி இருக்கும், 17 பேரில், 15 பேருக்கு, சிக்கலான உடல் பிரச்னைகளை, கொரோனா ஏற்படுத்தலாம். மூன்று நாட்களுக்கு மேல், உடலில் இருந்தால், நுரையீரலை பாதித்து, நிமோனியாவை ஏற்படுத்தும்; இதனால், சுவாசிப்பதில் சிரமம் உட்பட, பல பிரச்னைகள் வரலாம்.மீதி இருக்கும் இரண்டு பேருக்கு, அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தி, உயிரிழக்க நேரலாம்.இந்த, 2 சதவீதம் பேர், 70 வயதிற்குட்பட்ட ஆண்கள், நீண்ட காலமாக உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு இருப்பவர்கள், கேன்சர், சிறுநீரகங்கள், கல்லீரல் நோயாளிகள் போன்றவர்களாக, இருக்கலாம். இயல்பாகவே எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்ட வர்களாக இருக்கலாம். இவர்கள், வருமுன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; தொற்று ஏற்பட்டால், உயிரிழக்கும் அபாயம் ஏற்படும்.
டாக்டர் பழனியப்பன் மாணிக்கம்
குடல், இரைப்பை மருத்துவ ஆலோசகர்,
கலிபோர்னியா, அமெரிக்கா.
