PUBLISHED ON : டிச 01, 2019

கழுத்து வலிக்கு காரணம் என்ன?
பொதுவாக மனித உடலில் நகரும் தன்மை கொண்ட அனைத்து பாகங்களிலும் வலி ஏற்படும் வாய்ப்பு உண்டு. அந்த வகையில் மணிக்கட்டு, இடுப்பு, கால் மூட்டு போன்றவற்றில் வீக்கம், தேய்மானம் காரணமாக வலி வரலாம். இவற்றுடன் உடல், தலையை இணைக்கும் கழுத்தையும் சேர்க்கலாம். கழுத்தில் ஜவ்வு, சிறிய எலும்புகளின் தொகுப்புகள் உள்ளன. இவற்றில் தேய்மானம், வீக்கம் ஏற்பட்டும்,சதை பிடிப்பு, ஜவ்வு பிரச்னை, வாதம் காரணமாகவும் கழுத்து வலி ஏற்படுகிறது.
இதற்கு அறுவை சிகிச்சை அவசியமா?
எல்லா நேரங்களிலும் அவசியம் அல்ல. ஆனால் 5 பிரச்னைகளின் போது நிச்சயம் அறுவை சிகிச்சை தேவை. கழுத்தில் ஜவ்வு விலகி தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்படுதல், தேய்மானத்தால் நரம்புகள் பாதித்தல், கழுத்தெலும்புகள் பலவீனமாகுதல்,கூன் விழுந்து கழுத்தின் நேர் தன்மை பாதிக்கப்படுதல், விபத்தில் முதுகெலும்புமுறிவு, கட்டி, தொற்று ஏற்படும் போது அறுவை சிகிச்சை அவசியம்.
* அறுவை சிகிச்சை தேவை என்பதை எப்படி அறிவது?
கூன், முதுகெலும்பு முறிவு தவிர எஞ்சிய 3 பாதிப்புகளை நாமே உணர்வது கடினம்.ஆனால் தீராத வலி இருந்தால் பாதிப்பு தீவிரமாகி விட்டதாக அர்த்தம். அப்போது டாக்டரை அணுக வேண்டும். எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மூலம் அறுவை சிகிச்சை அவசியமா என்பதை அவர் சொல்லி விடுவார். பரிசோதிப்பதை தாமதப்படுத்தக் கூடாது.
* கழுத்து வலியை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
கழுத்தை இயற்கையாக வைக்காமல் கீழ்நோக்கியோ, மேலே பார்த்தோ, பக்கவாட்டில் சாய்த்தோ நம் வசதிக்கேற்ப வைப்பது தான் பாதிப்பிற்குமுதல் காரணம். பழைய காலங்களில் கழுத்து வலி ஏற்படுவது அபூர்வமாக இருந்தது. அக்காலத்தினரிடம் உடல் உழைப்பு இருந்தது. ஆனால் இப்போது கணினி, அலைபேசியில் மூழ்கி கிடக்கிறோம். அச்சமயங்களில் கழுத்தை கோணலாகவே வைக்கிறோம். துாக்கத்திற்கு ஒன்றுக்கு இரண்டு தலையணை பயன்படுத்துகிறோம். சுகமாக இருப்பதாக கருதி கழுத்தை படாதபாடு படுத்துகிறோம். இப்போக்கை மாற்ற வேண்டும்.
தலையணை இன்றி துாங்குவது நலம். தேவையென்றால் உயரம் குறைந்த, மிருதுவான தலையணை பயன்படுத்தலாம். கணினியை நேராக உட்கார்ந்து பயன்படுத்த வேண்டும். படுத்துகிடந்தோ, முரணாக அமர்ந்தோ தொலைக்காட்சி பார்ப்பது, அலைபேசி உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் பாதிப்பு ஏற்பட்டு,ஒரு கட்டத்தில் கை, கால், உடம்பில் உணர்ச்சியின்மை வரும். எனவே கழுத்திற்கு ஓய்வு கொடுப்பதும், உடற்பயிற்சி செய்வதுமே வலியில் இருந்து தப்பும்வழி.
- டாக்டர் ஷியாம்
மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்
மதுரை
63802 71088.
