நாங்க இப்படித்தானுங்க! - சர்க்கரையை விற்பவர்கள் கொலைகாரர்கள்!
நாங்க இப்படித்தானுங்க! - சர்க்கரையை விற்பவர்கள் கொலைகாரர்கள்!
PUBLISHED ON : ஏப் 28, 2019

நான் நடுத்தர குடும்பப் பின்னணியில் இருந்து, மாடலிங் வழியாக சினிமாவிற்குள் நுழைந்தேன். வசதியான வாழ்க்கை வாழ்ந்தாலும், என் சிந்தனை எல்லாம், நடுத்தர குடும்பத்தினரைப் போல, யதார்த்தமானதாகவே இருக்கும்; அதில் மாற்றமே வரவில்லை. உணவுப் பழக்கமும் அப்படித்தான்; பாரம்பரிய, பழக்கத்தில் உள்ள உணவுகளையே சாப்பிடுவேன்.
துரித உணவுகளை நினைத்தாலோ, யாராவது சாப்பிடுவதைப் பார்த்தாலோ, எனக்கு மன அழுத்தம், படபடப்பு வந்து விடுகிறது. வெள்ளைச் சர்க்கரை பயன்படுத்தியது தெரிந்தாலும், இதே உணர்வு வரும்; தடை செய்யப்பட வேண்டிய, இதை விற்பவர்கள் அனைவரும், கொலைகாரர்கள்.
குழந்தைகளின் மீது பாசத்தைக் காட்ட, எத்தனையோ ஆரோக்கியமான வழிகள் இருக்க, சாக்லெட், கேக், பிஸ்கட், ஸ்வீட், ஐஸ்கிரீம் விற்பனை நிலையங்களுக்கு, குதுாகலமாக குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோரைப் பார்க்கும் போதே, குழந்தைகளின் நலனை சிந்திக்காமல், கண்மூடித்தனமாக இருக்க, இவர்களால் எப்படி முடிகிறது என்று, எனக்குப் புரியவே இல்லை.
எதை சாப்பிடுகிறோம், அது நமக்குள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும், என்ற அடிப்படை சிந்தனையே இல்லாமல் போவது வருத்தமாக உள்ளது.
நாம் சாப்பிடும் மொத்த உணவில், பாதி புரதம், மீதி பாதியில், ஒரு பங்கு கார்போஹைட்ரேட் மற்றது வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற நுண்ணுாட்டச் சத்துக்கள் இருக்க வேண்டும்.
நல்ல உணவு, நல்ல உடற்பயிற்சி, நல்ல துாக்கம்... இந்த மூன்றால் மட்டுமே, நம்மை ஆரோக்கியமாக வைக்க முடியும்.
- ஜான் ஆப்ரகாம்
பாலிவுட் நடிகர்.
