PUBLISHED ON : ஜூலை 07, 2013

* என் வயது 40. சில நாட்களுக்கு முன் நெஞ்சுவலி ஏற்பட்டது. இருதயத்தில் பிரச்னை இல்லை எனக் கூறிய டாக்டர், நுரையீரல் நிபுணரை ஆலோசிக்கும்படி கூறினார். எவ்வகை நுரையீரல் நோயால் நெஞ்சில் வலி ஏற்படும்?
நெஞ்சுவலிக்கு பல நுரையீரல் நோய்கள் காரணம். குறிப்பாக நிமோனியா, கேன்சர், நுரையீரலில் சீழ், நுரையீரலைச் சுற்றி நீர்கோர்த்தல், நுரையீரலை சுற்றிய ஜவ்வில் வீக்கம், நுரையீரலை சுற்றியுள்ள தசையில், நரம்புகளில், விலா எலும்புகளில் வலி ஏற்பட்டாலும் நெஞ்சுவலி ஏற்பட வாய்ப்பு உண்டு. இருமல், தும்மல் ஏற்பட்டால் இந்த வலி சற்று அதிகரிக்கும். நுரையீரல் பரிசோதனைகளை செய்து வலிக்கான காரணத்தை கண்டறிந்து, சிகிச்சை பெற்றால் வலி குறையும்.
* என் நண்பருக்கு முதுகு எலும்பில் டி.பி., கட்டி உள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. பொதுவாக டி.பி., நுரையீரலைத்தான் பாதிக்கும் என்று கேள்விப் பட்டுள்ளேன். டி.பி.,யால் வேறு எந்த உறுப்புகள் பாதிக்கும் என கூறமுடியுமா?
உடலில் நகம், முடி தவிர்த்து மற்ற அனைத்து உறுப்புகளிலும் டி.பி., கிருமியால் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளன. நுரையீரலுக்கு அடுத்தபடியாக எலும்புகள், வயிறு, மூளை, கண், தோல் போன்ற உறுப்புகளில் டி.பி., நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளன. இந்த உறுப்புகளில் ரத்தஓட்டம் குறைவாக இருப்பதால் 9 முதல் 12 மாதங்கள் வரை, டி.பி., மருந்துகள் தவறாமல் எடுக்க வேண்டும். நுரையீரலில் டி.பி., நோய் இருந்தால் அது எளிதில் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. நுரையீரலை தவிர்த்து மற்ற உறுப்புகளில் டி.பி., கிருமி ஏற்பட்டால் பரவுவது இல்லை.
* என் குழந்தையின் வயது 7. அவனுக்கு விளையாடி விட்டு வந்த பின்பு, இரவிலும் வறட்டு இருமல் ஏற்படுகிறது. அவனை பரிசோதிக்கும் டாக்டர், அதிக இருமல் ஏற்படும் போதெல்லாம் 'நெபுலைசர்' எடுத்துக் கொள்ளும்படி கூறுவார். இரவில் அதிகம் இருமல் ஏற்படுவதால், அதை சொந்தமாக வீட்டிலேயே வாங்கி வைத்துக் கொள்ளும்படி கூறுகிறார். நான் என்ன செய்வது?
உங்கள் குழந்தைக்கு ஏற்படும் வறட்டு இருமலுக்கு காரணம் 'ஹைபர் ரீயாக்டிவ் ஏர்வே டிஸீஸ்' (எச்.ஆர்.ஏ.டி.,) எனப்படும் நுரையீரல் நோய். இந்த நோய் அவன் வளர வளர சரியாகி விடும். ஏழு வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு மீட்டர் டோஸ் இன்ஹேலர்சை ஸ்பேசர் உடன் பயன்படுத்துவதால், நெபுலைசர் பயன் கிடைத்து விடுகிறது. ஏழு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு வாயில் வைத்து உறிஞ்சும் இன்ஹேலர்ஸ் நல்ல பலனளிக்கிறது. அவசர காலகட்டத்திலும், ஒரு வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே நெபுலைஸ் பயன்படுத்த வேண்டும்.
உங்கள் குழந்தைக்கு ஏற்ற இன்ஹேலர்ஸை பயன்படுத்துவதன் மூலம் மூச்சுக்குழாயில் ஏற்படும் வீக்கம் குறைகிறது. இருமல் மற்றும் மூச்சுத் திணறல் கட்டுப்படுத்தப்படுகிறது. நுரையீரல் திறன் மேம்படுகிறது. நெபுலைசருக்கு பதிலாக இன்ஹேலர் பயன்படுத்துவது சிறந்தது.
டாக்டர் எம். பழனியப்பன்,
மதுரை. 94425-24147