PUBLISHED ON : ஜன 17, 2016

எதை செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார்கள். உதவியும் அப்படித்தான். என்ன நோய்க்கு, என்ன முதலுதவி செய்யலாம்? நீங்கள் தெரிந்து கொள்ள சில முதல் உதவி தகவல்கள்...!
ஆஸ்துமா: சுவற்றின் மீதோ அல்லது நாற்காலியின் மீதோ, முதுகு நேராக இருக்கும்படி உட்கார வைக்கவும். கொஞ்சம் முன்பாக சாய்ந்து இருந்தால் நல்லது. முன்னால் மேசை மீது கைகளை ஊன்றி உட்கார வைக்கவும். அவரிடம் உறிஞ்சும் மருந்து இருந்தால், ரசாயனக்கலவை வரும்படி அதனை திருகி வாயில் வைத்து, 3 அல்லது, 4 முறை உள்ளே உறியச் சொல்லவும்.
மின்சார தாக்குதல்: மரக்கட்டை போன்ற மின்சாரம் புகாத, பொருளால் மின் இணைப்பிலிருந்து நபரை அப்புறப்படுத்தவும். தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் ஈரத் துணியை, 10 நிமிடம் வைத்து பிறகு உலர்ந்த துணியால் மூடி கட்டுப் போடவும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.
நீரில் மூழ்குதல்: நீரில் மூழ்கியவரை தரையில் இரண்டு கால்களுக்கு இடையில், குப்புற படுக்க வைக்கவும். உங்கள் இரண்டு கைகளால் வயிற்றுப் பாகத்தில் தூக்கவும். இரண்டு, மூன்று தடவை அவ்வாறு தூக்கி, இறக்கினால் நீரும் தொண்டையில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.
எலும்பு முறிவு: அசையாமல் இருக்கச் செய்யவும். உடைந்த எலும்புக்கு மேலும், கீழும் உள்ள மூட்டுகள் அசையா வண்ணம், ஆதரவு கொடுத்து கட்டு போடவும். மேல்பாக எலும்புகள் முறிவு ஏற்பட்டால், தூக்குகள் மூலமாக அவர்களுக்கு அந்த எலும்புகளுக்கு ஆதரவு கொடுக்கவும். கீழ் பாக எலும்பு முறிவு ஏற்பட்டால், சிம்புகள் வைத்து கட்டு போடவும். முக்கியமாக இரு கால்களையும் பாதங்களையும் சேர்த்து வைத்து, 8 வடிவ கட்டு போடவும்.
சுளுக்கும், சதை பிடிப்பும்: ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றியோ அல்லது ஈரத் துணியையோ வீக்கத்தின் மீது வைத்து, இறுகக்கட்டு போடவும். அதிகமாக இறுக்க வேண்டாம். உயர்த்தி வைத்து ஆதரவு கொடுக்கவும். 20 நிமிடத்துக்கு ஒரு முறை சிறிது, தண்ணீர் ஊற்றி கட்டை ஈரமாக வைத்துக் கொள்ளவும்.
கை, கால் வலிப்பு (காக்காய் வலிப்பு): கீழே விழும் பொது தாங்கிப் பிடித்த தலையில், அடிபடாமல் படுக்க வைக்கவும். தலைக்கடியில், கை, கால்கள் அசையும் போது, தரையில் உராய்ந்து காயங்கள் ஏற்படாமல் இருக்க, துணிகளைப் போடவும். அருகில் உள்ள பொருட்கள் மீது கை, கால்கள் படும் போது காயம் ஏற்பட வாய்ப்பிருந்தால், அவற்றை அப்புறப்படுத்தவும். கை, கால்களை பிடித்துக் கொள்ள வேண்டாம். துணிகளை தளர்த்தவும். வலிப்பு நின்றவுடன் சுயநினைவு இழந்திருந்து, சுவாசமும் ரத்த ஓட்டமும் இருந்தால், மீட்பு நிலையில் படுக்க வைக்கவும். பற்களுக்கு இடையில் எதையும் வைக்க வேண்டாம்.
மூக்கில் ரத்தம் ஒழுகல்: உட்கார வைத்து தலையை முன்பக்கமாக, குனிந்தவாறு வைக்கவும். வாய் வழியாக சுவாசிக்க சொல்லவும். மூக்கெலும்பின் கீழ்பாகத்தை, கீழ்நோக்கி அழுத்தச் சொல்லவும். பத்து நிமிடத்துக்கு பிறகு, விட்டு விடவும். மீண்டும் ரத்தம் ஒழுகினால், மருத்துவரை நாடவும்.
சர்க்கரை குறைந்து விட்டால்: உடனே ஒரு டம்ளர் தண்ணீரில், 2 தேக்கரண்டி சர்க்கரை அல்லது ஜாம் கரைத்து, குடிக்கச் சொல்லவும். அல்லது தேனீரில் அதிக சர்க்கரை கலந்து, ஆரஞ்சு பழச்சாறு போன்றவற்றை சிறிது சிறிதாக விழுங்கச் சொல்லி கொடுக்கவும். வாயு நிறைந்த பானங்கள் கொடுக்க வேண்டாம்.

