PUBLISHED ON : ஆக 09, 2015

குழந்தைகளின் முக்கிய உணவாக மாறி விட்டன நொறுக்குத் தீனிகள். குழந்தைகளின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் நொறுக்கு தீனிகளை பள்ளிகளில் விற்க தடை விதிக்க வேண்டும் என்று, உலக சுகாதார மையம் வலியுறுத்தி உள்ளது.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்கு தீனிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை குழந்தைகள் அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால், பலவித நோய்களால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.
உலகம் முழுவதும் சுமார் 4 கோடியே 50 லட்சம் பள்ளி குழந்தைகள் அதிக எடை மற்றும் குண்டானவர்களாக உள் ளனர். இது, நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளாக கருதப்படுகிறது. அவற்றில் உள்ள அளவுக்கு அதிகமான இனிப்பு, உப்பு, மற்றும் கொழுப்பு படிவங்களால் தான், இதுபோன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
எனவே, பள்ளிகள், விளையாட்டு மைதானங்களில் இது போன்ற நொறுக்கு தீனிக்கு தடை விதிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. குறிப்பாக, நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள், பள்ளிகளின் விளையாட்டு மைதானங்கள், குழந்தைகள் ஆஸ்பத்திரிகள், குழந்தைகள் நல மையங்கள் மற்றும் குழந்தைகள் கூடும் இடங்களில் இவற்றின் விற்பனைக்கு, அந்தந்த நாடுகளின் அரசுகள் கடுமையான தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஆரோக்கியமான உலக சமுதாயத்தை உருவாக்க முடியும் என அந்த அமைப்பு கருதுகிறது.
