PUBLISHED ON : அக் 05, 2014

'நான் ஆஸ்துமா நோயாளி. 60 ஆண்டுகளாக சிரமப்படுகிறேன். வயது, 82. கடந்த, 42 ஆண்டுகளாக மது அருந்தி வருகிறேன்; புகை பழக்கம் இல்லை. 12 ஆண்டுகளாக உடல் உறவு கொள்வது கிடையாது. 42 ஆண்டுகளாக தலை வலியால் சிரமப்படுகிறேன். 'தூக்க மாத்திரை சாப்பிட்டால், தலை சுற்றல் இருக்கிறது. தலைவலியை மறந்து தூங்க, தினமும், 'குவாட்டர்' பிராந்தி சாப்பிடுகிறேன். சிறுநீரகம், இதயம், நுரையீரல், கல்லீரலில் எந்த பாதிப்பும் இல்லை. மதுவைத் தவிர்த்து நல்ல தூக்கத்திற்கு ஆலோசனை கொடுங்கள்...' என, கோவையைச் சேர்ந்த, பாலசுப்ரமணியின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை டாக்டர் ஆனந்த் பிரதாப்பிடம், கேள்வியை முன் வைத்தோம். அவர் சொல்வது என்ன?
நீண்ட காலமாக மது பழக்கம் உள்ளதால், ஆல்கஹால் உடல் முழுவதும் பரவி இருக்கும்; பெரும்பாலான செல்கள் இறந்திருக்க வாய்ப்புள்ளது. தலைவலியைத் தவிர மற்ற நோய் பாதிப்புக்கள் இல்லை என்பது பெரிய ஆறுதல். குடிப்பழக்கம் எப்போது ஆரம்பித்தாரோ, அப்போதில் இருந்தே தலைவலியும் ஆரம்பமாகி இருக்கிறது.
மது பழக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பைக் கண்டறிந்து, தலைவலியைத் தடுக்க பொது மருத்துவரை சந்திப்பதைவிட, மனநல நிபுணரை சந்திப்பது நல்லது (அதற்காக மனநோய் என, கருத வேண்டாம்). ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில், போதை பாதிப்பில் இருந்து நீங்க, சிறப்பு மையங்கள் உள்ளன. மதுதான் பிரச்னையே தவிர, உடல் உறவு கொள்ளாததற்கும், தலைவலிக்கும் எந்த தொடர்பும் இல்லை. மதுவை படிப்படியாக குறைந்தால், இன்னும் நீண்ட காலம் வாழலாம்.
இவ்வாறு, அவர் விளக்கம் அளித்தார்.

