தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/காசநோயை குணப்படுத்து என்ன செய்யவேண்டும்?

காசநோயை குணப்படுத்து என்ன செய்யவேண்டும்?

காசநோயை குணப்படுத்து என்ன செய்யவேண்டும்?


PUBLISHED ON : மார் 15, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 15, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த நோய் சில ஆண்டுகளுக்கு முன் வரை கொடூரமான ஆட்கொல்லி நோய் என்று கூறப்பட்டது. இப்போதெல்லாம் ஆட்களை கொல்வதில்லை. ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் மருந்துகளை விடாமல் சாப்பிட்டாலே விட்டு ஓடி விடுகிறது. இந்நோய், ஒரு பரம்பரை வியாதி அல்ல. இது ஒரு தொற்று வியாதி. காச நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், வாய் மூடாமல் தும்மினாலோ அல்லது இருமினாலோ காச நோய் ஏற்படுத்தும் கிருமிகள் காற்றில் வெளிப்படுகின்றன.

மூன்று வாரத்திற்கு மேல் தொடரும் இருமல், சளியுடன் கூடிய இருமல், காய்ச்சல், எடை குறைவு அல்லது பசியின்மை ஆகியவை அறிகுறிகள். இதில் ஏதாவது அறிகுறி, ஒருவருக்கு மூன்று வாரத்திற்கு மேல் நீடித்தால், அவர் அருகிலிருக்கும் டாட்ஸ் காச நோய் மையம், அல்லது சுகாதார மையத்தில் சளியை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். காச நோயை கண்டுபிடிக்க, சளியில் காச

நோய்க்கான கிருமி உள்ளதா என்று தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு பரிசோதிக்க வேண்டும். டாட்ஸ் மைய சேவைகள் இலவசம்.

நன்றாக இருமிய பின், வரும் சளியைதான் பரிசோதனைக்கு அளிக்க வேண்டும். காச நோய் எதிர்ப்பு மருந்துகளை, தொடர்ந்து முழு சிகிச்சை காலத்திற்கு எடுத்துகொண்டால், நோயை முழுமையாக குணப்படுத்தி விடலாம். பாதிக்கப்பட்ட நோயாளி, குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியாக மருந்து எடுத்துகொள்ள வேண்டும். சில நோயாளிகள், மருந்துகளை ஒரு வருடம் கூட தொடர வேண்டிய நிலை வரலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி தான் மருந்துகளை நிறுத்த வேண்டும். முழுமையான அல்லது தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நோயாளிகளுக்கு, இந்த நோய் உயிருக்கு ஆபத்தானதாகவோ அல்லது குணப்படுத்த முடியாததாகவோ மாறிவிடும்.

தேவையான காலங்களுக்கு, முறையாகவும் மற்றும் தொடர்ச்சியாகவும் சிகிச்சை எடுத்துக்கொண்டால் முழுமையாக குணப்படுத்தி விடலாம். காச நோயாளி வாயை மூடாமல் இருமினாலோ அல்லது தும்மினாலோ, அல்லது ஆங்காங்கே துப்பினாலோ, அவர்களின் எச்சில் மூலம் காச நோய் பரவுகிறது. அதனால் நோயாளிகள் இருமும்போதும், தும்மும்போதும் எப்போதும் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும்.

நோயாளிகள் கண்ட இடத்தில் துப்பக்கூடாது. இருமும் போது கைக்குள் ஸ்பிடூன் வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிலும் நோயாளிகள், மூடி உள்ள தொட்டியில் தான் துப்பவேண்டும். காச நோயின் அறிகுறிகள் ஒருவருக்கு தோன்றினால், அதை கண்டு பயப்படாமல் இருப்பதும், நோயை மறைக்காமல் இருப்பதும் மிக முக்கியம். குறிப்பிட்ட நபர் தன்னை பரிசோதித்துக் கொள்வதும், தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வதும் அவசியம்.

காச நோயாளிகள் தங்களுக்கு பிடித்த எந்த உணவையும் சாப்பிடலாம். காச நோயாளி, பீடி, சிகரெட், புகையிலை, மதுபானம் அல்லது மற்ற போதை தரக்கூடிய பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். குளிர்ச்சியான பொருட்களை தவிர்ப்பது நல்லது.

மார்ச், 24 சர்வதேச காசநோய் தினம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us