PUBLISHED ON : ஜன 23, 2022

வைரஸ் நம்மை விட்டு என்று போகும், பழைய நிலை எப்போது திரும்பும் என்று சொல்லவே முடியாது. இன்னும் சொல்லப் போனால், 2019க்கு முன் இருந்த நிலைக்கு முழுமையாக நம்மால் போக முடியுமா அல்லது உருமாறிய வைரசுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டிய நிலைமை கூட இருக்கலாம்.
முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, நம் தினசரி வழக்கமாக இருக்க வேண்டும். இது எத்தனை காலத்திற்கு என்பதை, மனிதர்களாகிய நம்மால் கணிக்கவே முடியாது; இதுதான் நிதர்சனமான உண்மை. புதிய வைரஸ் உருவாவது, என்றைக்கு முடிவுக்கு வரும் என்பதை கணிப்பதும் சிரமம்.
தற்போது பரவுவது, 'சார்ஸ்' வகை வைரஸ்; இது, ஆர்.என்.ஏ., வகை. இதில் மரபணு மாற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்று. புதிது புதிதாக வைரஸ் உருவானதற்கு காரணம், இயற்கையை மிக அதிகமாக மனிதன் சீண்டியது தான்.
மரபணு மாற்றம் ஏற்பட்டு, 'ஒமைக்ரான்' என்ற ஒன்று வரப் போவது 2020ல் நமக்கு தெரியாது; சார்ஸ் கொரோனா வைரசின் மரபணு மாற்றம் அடைந்த, 15வது வைரஸ் இது. வைரசை பொறுத்தவரை அது பரவினால் தான் அதனால் வாழ முடியும். அதனால் தான், ஒமைக்ரான் தன் வீரியத்தைக் குறைத்து, பரவுவதற்கு வழி செய்து கொள்கிறது.
குறுகிய காலத்தில் அதிகம் பேருக்கு பரவும். இதிலும் ஒரு நன்மை, எவ்வளவு வேகத்தில் பரவுகிறதோ, அதே வேகத்தில் குறையும். கடல் அலைகள் போல தான் கொரோனா அலையும். அலைகள் வருவதை தவிர்க்கவே முடியாது. அலை வீரியமாக இருக்கிறதா, சிறிய அலையா, பெரிதா என்பது தான் கேள்வியே!
அலை சிறிதாக, வீரியம் குறைவாக இருக்க வேண்டும் என்றால், சமூக இடைவெளி அதிகமாக, மற்றவர்களுடன் நம் தொடர்புகள் குறைவாக இருக்க வேண்டும். சமூக இடைவெளியை நாம் சரியாக பின்பற்றினால், வருகின்ற அலை நம் காலை நனைக்காமல் போய்விடும்.
டாக்டர் சுதா சேஷய்யன்,
துணை வேந்தர்,
தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை கழகம்.
