PUBLISHED ON : அக் 31, 2010

சர்க்கரை நோய் கால்களில் புண் மற்றும் பாதிப்பு உண்டாகும் வாய்ப்பு யாருக்கு அதிகம் என்பதை முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கால்களை இழக்கும் வாய்ப்பு மற்றவர்களை விட 20 மடங்கு அதிகம். இந்தியாவில் விபத்தினால் கால்களை இழப்பவர்களை தவிர கட்டுப்படுத்தப்படாத சர்க்கரையால் கால் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கால் பாதிப்பை 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டுபிடிக்கலாம்.
கால் பாதிப்பு அறிகுறிகள்
கால் எரிச்சல், மதமதப்பு, பஞ்சு மேல் நடப்பது போன்ற உணர்வு, ஊசி குத்துவது போன்ற உணர்வு, நடந்தால் கணுக்கால் வலி, கால் வீக்கம், ஆறாத புண்கள், காலில் கொப்பளங்கள் ஆகியவை கால் பாதிப்பின் அறிகுறிகள்.
கால் பாதிப்பு எப்படி அறிவது?
காலில் தோல் நிறம் மாற்றம், நகம் நிறம் மாற்றம், தோல் மினுமினுப்பு, காலில் முடி உதிர்தல், கால் ஆணி, செருப்பில் கால் விரல்களின் அழுத்தத்தால் ஆங்காங்கே குழி விழுதல், கால் விரல் நகங்கள் உள்நோக்கி வளர்வது. கால் வெடிப்பு, கால் விரல் இடுக்குகளில் புண், கால் விரல்கள் உருமாறுதல், கால் விரலுக்கு அடியில் தோல் தடிமன் குதிங்கால் வலி, காலை தாங்கி எழுந்த பின் தரையில் ஊன்ற முடியாமல் வலி.
யாருக்கு கால் பாதிப்பு ஏற்படுகிறது?
அதிக எடை உள்ளவர்கள். நீண்ட கால சர்க்கரை நோய், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாதவர்கள், புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.
கால் பாதிப்பை அறிந்து கொள்ளவும், தடுக்கவும் என்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்?
* டாப்ளர் காலில் ரத்த குழாய் அடைப்பை கண்டறிய உதவும் பரிசோதனை.
* கால் நரம்பு அதிர்வு பரிசோதனை.
* காலில் வெப்ப நிலை மற்றும் குளிர்ந்த தன்மைகளை அறியும் பரிசோதனை.
* காலில் புண் வர வாய்ப்புள்ளதா என்று அறியும், பாத அழுத்த பரிசோதனை.
* வெறும் வயிற்றில் மற்றும் சாப்பிட்ட பின் சர்க்கரை பரிசோதனை.
* மூன்று மாத கால சர்க்கரை கட்டுப்பாடு பரிசோதனை.
* மருத்துவ ஆலோசனை, உடற்பயிற்சி ஆலோசனை மற்றும் உணவு ஆலோசனை அவசியம்.
கால் பாதிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
* சர்க்கரை கட்டுப்பாடு, ரத்த அழுத்தம் கட்டுப்பாடு, கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு அவசியம்.
* தினமும் கால்களை இரண்டு வேளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
* பொருத்தமான காலணிகளை அணிய வேண்டும்.
* வாங்கிங் செல்லும் போது கேன்வாஸ் ஷூ அணிந்து செல்ல வேண்டும்.
* கால் அமைப்பு மாறியுள்ளவர்கள், ஆணிகள், குதிகால் வலி உள்ளவர்களுக்கு பிரத்யேக செருப்புகள் செய்யப்பட வேண்டும்.
காலணிகள்:
பாதிப்பு உள்ளவர்கள் காலணிகளை நுட்பமாக கவனிக்க வேண்டும். சிலருக்கு ஒரு செருப்பு தேய்ந்திருக்கும். விரல் அழுத்தத்தினால் குழி விழுந்திருக்கும். கால் விரல்கள் வெளியே நீண்டுக் கொண்டிருக்கும். காலணியை பார்த்தாலே பாதிப்பு எவ்வளவு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். கால் பாதிப்பினால் உணர்ச்சி குறைவு இல்லாமல் இருப்பவர்களுக்கு வலி தெரியாது. அவர்கள் பின்பக்கம் வார் வைத்த செருப்பு அணிய வேண்டும். அதிக சர்க்கரையால் நோய் எதிர்ப்பு தன்மை குறைதல், நோய் கிருமிகள் ஓரிரு நாளில் கோடி கணக்கில் பல்கி பெருகி விடும். இதனால் உடல் முழுவதும் நோய் தாங்கும் திறன் குறையும். கால் பாதுகாப்பு சிறப்பு முழு உடல் பரிசோதனை முகாம் நடக்கிறது. முன்பதிவு அவசியம்.
விவரங்களுக்கு, கோயமுத்தூர் டயபடிஸ் பவுண்டேஷன், 93676-44723, 93610-22731 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். - டாக்டர் சேகர்.

