PUBLISHED ON : மார் 06, 2016

இலந்தை பழம் உடல் சூட்டை தணித்து, குளிர்ச்சியை தரக் கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள், மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். பொதுவாக பருவக் காலங்களில் விளையும் பழங்களை, அவ்வப்போது உண்டு வந்தால், அதன் பயன்களை
முழுமையாகப் பெறலாம்.
100 கிராம் இலந்தை பழத்தில், 74 கலோரியும், 17 சதவீதம் மாவுப் பொருளும், 0.8 சதவீதம் புரதமும், வைட்டமின்கள் ஏ, பி2 மற்றும் சி, கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகள் மற்றும் இரும்பு சத்தும் அடங்கியுள்ளது. இலந்தை இலையிலும் அதிக மருத்துவப் பயன்கள் உள்ளன. இலந்தை இலைகளை மை போல் அரைத்து, வெட்டுக்காயம் மீது கட்டினால், விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும், கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வந்தால், விரைவில் குணமடையும்.
இலந்தை இலை தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், இதன் வேர், பட்டை, பசி தூண்டியாகவும், பழம், சளி நீக்கி, பசியை பெருக்கவும் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதய நோய், ஆஸ்துமா, கழுத்து நோய், ரத்த அழுத்தம், தலைவலி, மன உளைச்சல் என, அனைத்துக்கும் அருமருந்தாக உள்ளது. இலந்தை பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து, வெயிலில் காய வைத்து, இலந்தை வடையாக பயன்படுத்துகிறார்கள்.
இலந்தை இலை, 1 பிடி, மிளகு, 6, பூண்டுப்பல், 4 அரைத்து மாதவிலக்கான முதல், 2 நாட்கள் கொடுத்து வந்தால், கருப்பை குற்றங்கள் நீங்கி, புத்திர பாக்கியம் கிட்டும். இலந்தைப் பட்டை, 40 கிராம், மாதுளம் பட்டை, 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து, 125 மி.லி., அளவு காய்ச்ச வேண்டும். தினம் இதனை, நான்கு வேளை குடித்து வந்தால், நாள்பட்ட பெரும்பாடு நீங்கும்.
இலந்தை வேர்பட்டை சூரணம், 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கலந்து குடித்தால், பசியின்மை நீங்கும். துளிர் இலையையாவது, பட்டையையாவது, 5 கிராம் எடுத்து நன்கு அரைத்து, தயிரில் கலந்து காலையும் மாலையும் கொடுத்தால், வயிற்றுக் கடுப்பு, ரத்தப்பேதி தீரும்.
இலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால், எலும்புகள் வலுப்பெற்று உடல் பலம்பெறும். பித்தத்தை சமநிலைப்படுத்தும் தன்மை, இலந்தை பழத்துக்கு உண்டு.