PUBLISHED ON : ஜூலை 17, 2016

உடலுக்கு போர்வையாக செயல்படுவது தோல்தான். இதை பாதுகாக்க, பராமரிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். பனிக்காலத்தில் வெடிப்பு, இக்காலத்தில், குளித்து முடித்ததும், வெள்ளை போல படர்ந்து விடும். தோலில் அரிப்பு ஏற்படும். ஈரப்பதம் இல்லாதபட்சத்தில், அரிப்பு ஏற்படும் பகுதியில், எரிச்சல், விறுவிறுவென இழுப்பது உள்ளிட்ட, பல்வேறு தோல் சம்மந்தமான பிரச்னைகள், பாடாய் படுத்திவிடும். இந்த தொந்தரவில் இருந்து விடுபட, சில எளிய குறிப்புகள் இதோ:
எண்ணெய் மற்றும் நீர்பசையுள்ள சோப்புகளை உபயோகிக்கலாம். வாஸலின், லோஷன் உள்ளிட்ட, களிம்புகளை தடவுவதால், தோலுக்கு நீண்ட நேரம் ஈரப்பதம் கிடைக்கும். பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டால், வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, காலை பத்து நிமிடங்கள் வரை, ஊற வைக்க வேண்டும். பின், ஸ்கிரப்பர் உள்ளிட்டவை வாயிலாக, தேய்த்து, அழுக்குகளை வெளியேற்றலாம். வெடிப்புகளில் மண், தூசி உள்ளிட்டவை தேங்கினால், பாத அரிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
தலையில் பொடுகு தொல்லை இருப்பவர்கள், குளிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். இக்காலத்தில், தலை குளித்து, வெயிலில் நடந்தால், வெப்பத்தின் காரணமாக அரிப்பு ஏற்பட்டு, வெள்ளை போல படர்ந்திருக்கும். சொரியாசிஸ் மற்றும் அரிப்பு போன்ற பிரச்னை உள்ளவர்கள், உடனடியாக தோல் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். பனிக்காலத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கொசுக்கடியால் தோலில் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி, கொசு தடுப்பு கிரீம்களை தடவலாம்.
கீரை சூப்: கீரை உடலுக்கு பல விட்டமின்களை தரவல்லது. வாரம் இருமுறையாவது கீரை சாப்பிட்டால், மருத்துவ செலவுகளை குறைக்கலாம். கீரைத்தண்டை உணவில் சேர்ப்பதால், முடி உதிர்வதை தடுக்க முடியும். தண்டுக் கீரை, முளைக் கீரை, முருங்கைக் கீரை ஆகியவற்றில், ஏதாவது ஒன்றுடன், சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு இரண்டு பல், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, சூப் தயாரிக்கலாம். இந்த சூப் மாலை நேரத்துக்கு ஏற்றது.
ஸ்பெஷல் தயிர்சாதம்: பனியால் ஏற்படும் தோல் வறட்சியைத் தடுக்க பால், தயிர் மற்றும் மோரை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். வழக்கமான தயிர் சாதத்தை குழந்தைகள் சாப்பிட மறுப்பர். இதற்கு பதிலாக, மாதுளை, ஆப்பிள், அன்னாசிப்பழ துண்டுகள், கருப்பு திராட்சை, முந்திரி ஆகியவற்றை, தயிர் சாதத்தில் கலந்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். தோலுக்குத் தேவையான பளபளப்பும் கிடைக்கும். பழங்களின் சத்துகளும் சேர்வது கூடுதல் சிறப்பு.
எலுமிச்சை ரசமும் பனிக்காலத்துக்கு மிகவும் நல்லது.
பனிக்காலத்தில், அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் சேர்ப்பதும் மிக முக்கியம். முடி உதிர்வு மற்றும் கூந்தல் பொலிவிழப்பதைத் தடுக்க, கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பார்லி கஞ்சியும் பனிக் காலத்துக்கு சிறந்தது. முளைக்கட்டிய பயறு வகைகள் சிறந்த உணவாக அமையும். பச்சைப்பயறு, சுண்டல், ராகி போன்றவற்றை, முளைக்கட்டிய பின் சாப்பிடலாம்.எலுமிச்சை சேர்ப்பது நல்லது.
