PUBLISHED ON : ஜூன் 01, 2025

சாதாரணமாக மற்ற காலத்தை விட குளிர்காலத்தில், குறைவான வெப்ப நிலையால் வலி, செரிமானக் கோளாறு, உடல் இயக்கத்தில் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, உள்ளிட்ட பல விதமான உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம்.
குளிர்காலத்தில் திசுக்கள் விரிவடைவதால், அழற்சி மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படும். இதனால், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர். குளிர்காலத்தில் உடல் வெப்பத்தை சீராக வைக்க, கம்பளி ஆடைகள், கையுறைகள், காலுறைகள், தொப்பி, ஆகியவற்றை முதியவர்கள் அணிய வேண்டும்.
குளிரில் வெப்பமாக இருந்தால், நோய்வாய்ப்படாமல் பாதுகாக்க முடியும். குளிர்காலத்தில் நாள் முழுவதும் படுக்கையிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் இளமையாக இருப்பவர்கள் போலவே, முதியவர்களும் 'ஆக்டிவ்' ஆக இருக்க வேண்டும்.
நாள் முழுவதும் அமர்ந்து, படுத்திருந்தால், மூட்டுக்கள் இறுக்கமாகி வலி மற்றும் அழற்சியை ஏற்படுத்தும். வீட்டினுள் நடக்கலாம். எளிமையான வீட்டு வேலைகளை செய்யலாம். இவ்வாறு செய்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராகி, உடல் குளிர்ச்சியடைவதிலிருந்து பாதுகாக்கும், ஆற்றலையும் கொடுக்கும். குளிர்காலத்தில் சூடான நீரில் குளிப்பதால், சரும பாதிப்பு ஏற்படும். சருமம் வறட்சியாக காணப்படும். இதைத்தவிர்க்க, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
குளிர்காலத்தில் அதிக தாகம் எடுக்காது. ஆனால் தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தண்ணீர் குடிப்பது அவசியம். வைட்டமின் 'சி' நிறைந்த உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும் அவசியம் என்கின்றனர் டாக்டர்கள்.