PUBLISHED ON : மே 24, 2024 12:00 AM

இரண்டு மணி நேரம் உங்கள் போனை சைலண்ட் மோடில் அல்லது ஸ்விட்ச் ஆப் செய்து விடுங்கள். நிகழ்ச்சி ஆரம்பித்ததும் வாசல் கதவு மூடப்படும் யாரும் வெளியில் இருந்து வரமுடியாது, அதைவிட முக்கியம் அரங்கில் இருப்பவர்கள் எழுந்து வெளியே போகவும் கூடாது. போட்டோ, வீடியோ எடுப்பது அறவே கூடாது.
தன்னம்பிக்கை பேச்சை வழங்க, சிறப்பு விருந்தினர் வரும் போது அரங்கில் இருப்பவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்க வேண்டும். இவ்வளவு கட்டுப்பாடுகளுக்கு நடுவே சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அந்த சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?
![]() |
ஆத்ம தியானம் மற்றும் பிராண விருத்தி பற்றிய பயிற்சி வகுப்புகளை உலகம் முழுவதும் நடத்தி வரும் ஆத்ம யோகா அறக்கட்டளையின் (உள்-அறிவியல் மற்றும் சுய-மாற்றத்திற்கான நிறுவனம்) நிறுவனர் ஸ்ரீ ஆசான்ஜியே.
அவரைப் பற்றி நிறைய யூடியூப்கள் வழியாக அறிந்திருந்தாலும் நேரில் பார்ப்பதும் பேச்சைக் கேட்பதும் இதுவே முதல் முறை. சரளமான ஆங்கிலத்திற்கு நடுவே படு லோக்கலான தமிழில் அவர் பேச்சு இருந்தது, இரண்டு மணி நேரத்திற்கு பார்வையாளர்களை ஈர்ப்பதற்கான வார்த்தை பதமும், நகைச்சுவையும் காணப்பட்டது.
அவர் பேசியதில் இருந்து..
நீ நல்லவன் வேடம் போடத்தேவையில்லை அது அவசியமுமில்லை, உன் நெஞ்சு உன்னைக் குற்றம் சுமத்தாத அளவிற்கு நல்லபடியாயிரு அது போதும். உன் பாட்டன், முப்பாட்டனை நீ மறந்தது போல, உன்னையும் உன் குடும்பம் மறந்து போகும், ஆகவே பணம், புகழ், வேலை என்று ஒடிக் கொண்டே இருக்காதே, ஆரோக்கியமாக இருக்கும் போதே சந்தோஷமாக வாழக் கற்றுக்கொள்.
மனைவியைப் பார்த்து எப்போதாவது கண்ணடித்திருக்கிறாயா?ஆசையாக இரண்டு வார்த்தை பேசியிருக்கிறாயா? நீ வாங்கித்தரும் நகையை விட இதைத்தான் உன் மனைவி எதிர்பார்க்கிறாள் என்பதையாவது புரிந்திருக்கிறாயா?
இந்த குடும்பத்திற்காக ஓடாய் உழைக்கிறேன் என்று சும்மா புலம்பாதே, இதை உன் குடும்பத்திடம் சொல்லிப்பார், ஒற்றை வார்த்தையில், இந்த மனுஷனை யார் ஓடாய் உழைக்கச் சொன்னது மாடாய் ஓடச் சொன்னது' என்று அலட்சியமாகவே கேட்பர். நீ சம்பாதிக்கும் பணம் அவர்களுக்கு தேவையில்லை, நீதான் தேவை, நேரம் ஒதுக்கி குடும்பத்தாருடன் உட்கார்ந்து பேசு, இருப்பதை பகிர்ந்து கொள், எப்போதும் புன்னகை செய், புன்னகை ஒன்றே போதும், கடவுள் உன்னைக் காண.
பிடிக்காவிட்டால் வேலையை மாற்றிக் கொள்ளலாம், கம்பெனியை மாற்றிக் கொள்ளலாம் ஆனால் குடும்பத்தை மாற்ற முடியாது, மாற்றவும் கூடாது ஆகவே உன் வாழ்க்கை என்பது குடும்பத்தைச் சுற்றியே இருக்கட்டும்.
பிள்ளைகளின் படிப்பு, திருமணம் என்ற காரணங்களைக் காட்டி உன்னை மிகவும் வருத்திக் கொள்ளாதே. உனக்கு கிடைத்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து விடு, மாறாக தியாகியைப் போல வாழ்ந்தாலும் அற்ப காரணங்களுக்காக உன்னை உதாசீனப்படுத்திவிடுவர். இதற்கா இவ்வளவு பாடுபட்டோம் என்று அப்போது வருத்தப்படுவாய். ஆனால் அப்போது வாழ்வதற்கு வாழ்க்கை இருக்காது.
இதற்காக குடும்பத்திற்கு செலவழிக்கக்கூடாது என்று அர்த்தம் அல்ல. உனக்கு மிஞ்சித்தான் எல்லாம். உனக்கான பணப் பாதுகாப்பை எப்போதும் இழந்துவிடாதே.
உன்னால் யாருக்குக் கெடுதல் நடந்துவிடக்கூடாது. நீ செய்யும் காரியம் யாருக்கும் தீங்கு விளைவித்து விடக்கூடாது. அவ்வளவு தான் மற்றபடி பிறருக்கு நம்மால் உதவ முடியவில்லை என்றெல்லாம் வருத்தப்படாதே.
ஆணோ பெண்ணோ கணவரோ மனைவியோ அவரவருக்கான வாழ்க்கையை ஆனந்தமாக வருமானத்திற்கு உட்பட்டு வாழ்ந்து பாருங்கள், உங்களுக்குள் உள்ள சக்தியை உணர்ந்து கொள்ளுங்கள் வாழ்க்கை வசந்தமாகும், எல்லாம் சுகமாகும்., என்றளவில் அவரது பேச்சு இருந்தது.
-எல்.முருகராஜ்