
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தின் புஷ்கர் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் ஒட்டகத்திருவிழா உலகப் புகழ் பெற்ற விழாவாகும். இங்கு ஒட்டகங்கள் மட்டுமின்றி குதிரைகள், ஆடுகள், பசுக்கள் என நூற்றுக்கணக்கான மிருகங்கள் வணிகத்திற்கும் காட்சிக்காகவும் நிறுத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டின் திருவிழாவில் எல்லோரின் பார்வையும் ஈர்த்தது ஒரு சிறிய பசுவே!அந்தப்பசுதான் புங்கனுார் பசு.
“புங்கனூர் பசு” — உலகின் மிகச் சிறிய இந்தியப் பசு இனமாகும்.
ஆந்திரா பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமமான புங்கனூரில் உலகின் மிகச் சிறிய பசு இனம் ஒன்று உள்ளது இந்த இனம்தான் 'புங்கனுார் பசு' என்றழைக்கப்டுகிறது.
சிறிய அளவில் இருந்தாலும், தினமும் 3 முதல் 5 லிட்டர் வரை பால் கொடுக்கும்.அந்த பாலும் சாதாரண பால் அல்ல அதில் உள்ள புரதம் மனித உடலுக்குச் செரிமானமாகவும், ஆரோக்கியமாகவும் கருதப்படுகிறது. பால் அதிக கொழுப்புச் சத்து கொண்டது, அதனால் நெய் தயாரிக்க மிகச் சிறந்ததாகும்.
இந்த பசுக்கள் மிகக் குறைந்த தீவனம் மற்றும் குறைந்த அளவு தண்ணீர் இருந்தாலே வாழக்கூடியது.உலர்ந்த, வெப்பமான பகுதிகளிலும் தன்னைச் சமர்த்தமாக தக்கவைத்து வளரக்கூடியது.இதனால் விவசாயிகளுக்குப் பெரிய சுமை இல்லாமல் பராமரிக்க முடியும்.
இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் இந்த இனத்தின் எண்ணிக்கை மிகக் குறைந்து கொண்டே வந்தது,அரசு விவசாயிகளுடன் இணைந்து “புங்கனூர் இனப் பாதுகாப்பு திட்டம்” ஒன்றை உருவாக்கி அழிவின் விளிம்பில் இருந்த இந்தப்பசுவை மீட்டு, மீண்டும் பெருக்கி வருகின்றனர்.
பல்வேறு பசுக்களை வழக்கும் ஜெய்ப்பூரின் பக்ரூ பகுதியசை் சேர்ந்த அபினவ் திவாரி இந்த இனத்து பசுக்களையும் வளர்த்து வருகிறார்,இவர் வளர்க்கும் இந்த குட்டையின பசு ஈன்ற ஒரு கன்று அந்த குட்டையினத்திற்கான வளர்ச்சி கூட இல்லாமல் அதாவது 90 செமீ கூட இல்லாமல் வெறுமனே 40 செமீ உயரமே வளர்ந்துள்ளது.அங்குலத்தில் சொல்வதானால் 16 அங்குலம் மட்டுமே! பிறந்த கன்றுக்குட்டி போலிருக்கும் ஆனால் வளர்ந்த பசு இது.
இந்தச் சிறிய பசுவை ஒட்டக திருவிழாவிற்கு கொண்டு வந்துள்ளார் அபினவ் திவாரி. இந்தச் சிறிய பசு அவருக்கு பெரும் செல்லம் குடும்பத்தின் ஒரு அங்கம். “இது பிறந்த நாளிலிருந்தே சிறியதுதான். ஆனால் முழுமையாக ஆரோக்கியமாக உள்ளது. வழக்கமான பசுவின் அனைத்து குணாதிசயங்களையும் கொண்டதுதான்.
இந்த சிறிய பசுவின் பெயர் லில்லி. புஷ்கர் திருவிழாவிற்கு வந்த மக்கள் அனைவரும் நின்று அதனுடன் புகைப்படங்களை எடுக்கின்றனர். குழந்தைகள் அதனை பார்க்கும் போது மகிழ்ச்சியில் குதிக்கிறார்கள். இதனை “புஷ்கரின் அதிசயம்” என்றும் புகழ்கிறார்கள்.
விலங்கு மருத்துவர்கள் இதை ஒரு “ஜெனெடிக் ட்வார்ஃபிசம்” (genetic dwarfism) என்கின்றனர் அதாவது குறைப்பிரசவத்தில் பிறந்ததன் காரணமாக சிறியதாக இருக்கலாம் என்று கூறினாலும், அதற்கான எந்த சுகாதாரப் பிரச்சனையும் இதுவரை இல்லை. இதற்கு திவாரியின் அன்பும், பராமரிப்பும் முக்கிய காரணமாகும்.
அபினவ் திவாரி கூறுகையில்“எங்கள் வீட்டில் மற்ற சாதாரண பசுக்களும் இருக்கின்றன. ஆனால் லில்லி தான் எங்கள் குடும்பத்தின் செல்லம். இதை என்ன விலை கொடுத்தும் வாங்கிச் செல்ல பலரும் விரும்புகிறார்கள், ஆனால் நான் கோடி கொடுத்தாலும் கொடுக்கமாட்டேன் இது எங்கள் வீட்டின் அதிர்ஷ்ட தேவதை எனப் புகழ்கிறார். “மிகக் குறைந்த உயரம் கொண்ட பசு” என்று சாதனைப் புத்தகப் பதிவில் சேர்க்கும் முயற்சியும் உள்ளது.
வண்ணமயமான புஷ்கர் திருவிழாவின் மத்தியில், இந்த லில்லி பசு ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் இதயம் கவர்ந்த 'அன்பின் அதிசயமாக' உலா வருகிறது.
-எல்.முருகராஜ்

