PUBLISHED ON : மே 30, 2024 12:00 AM

![]() |
ஜெய்ஹிந்த் வேலுச்சாமி
மதுரை மக்கள் நன்கு அறிந்த பெயர்.
நமது இந்திய ராணுவத்தின் விமானப்படை வீரராக இருந்து ஒய்வு பெற்றவர்.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியுள்ளார்,பணியாற்றும் இடத்தில் எல்லாம் மரங்களை நடுவது இவரது பொழுபோக்கு.
நீங்கள் நடும் மரம் உங்களுக்கு சொந்தமாகப்போவது இல்லை,இதன் நிழலைக்கூட நீங்கள் அனுபவிக்கப் போவது இல்லை, பணி மாற்றலாகிப் போய்க் கொண்டே இருக்கப் போகிறீர்கள், இருந்தாலும் இவ்வளவு மரங்கள் நடுகிறீர்களே ஏன்? என்று உயரதிகாரிகள் கேட்கும் போது, 'இது இந்திய மண் எங்கு நட்டாலும் எது என் மண்தான் அது என் மரம்தான்' என்று பதில் தந்தவர்.
பணி ஒய்வு பெற்றாலும் தான் ஒய்வு பெறாமல் ஒய்வு பெற்ற முன்னாள் படை வீரர்கள் சங்க தலைவராக இருந்து அவர்கள் நலனிற்காக பாடுபட்டவர்,வேப்ப மரப்பிரியரான இவர் ஒவ்வொரு வருட சுதந்திர தினத்தின் போதும் வீட்டில் கொடியேற்றி பலருக்கும் வேப்பங்கன்றை பரிசாக வழங்குவார்.இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தயராகிவிடுவார்.வீடு முழுவதும் தாவரங்கள்தான், ஒவ்வொன்றிடமும் கனிவுடன் பேசியபடி நித்தமும் தண்ணீர் ஊற்றிய உத்தமர் .எப்போதும் இவரது முககத்தில் புன்னகை பூத்திருக்கும்,சட்டையில் தேசியக்கொடி வீற்றிருக்கும்.
பள்ளி,கல்லுாரிகளுக்கு தேசபக்தி உரை நிகழ்த்தப் போகும் போது பிரதிபலனாக தான் பேசப்போகும் கல்வி வளாகத்தில் மரங்கள் நடவேண்டுகோள் விடுபவர்.
ஒய்வு காலத்தில் பொழுது போகவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு மத்தியில் சமூக சேவை செய்ய எனக்கு பொழுது போதவில்லையே என்று கவலைப்பட்டவர்.யாரைப் பார்த்தாலும், போனில் பேசினாலும் முதல் வார்த்தை 'ஜெய்ஹிந்த்' என்று சொல்லிவிட்டே ஆரம்பிப்பார்.தனது இந்த தேசப்பற்றை மனைவி பஞ்சவர்ணத்திற்கும் மகன் நேதாஜி சுவாமிநாதனுக்கும் ஆழமாக சொல்லிக்கொடுத்தவர்.
மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் படிப்பதற்கு உடல் கிடைப்பது அரிதாக இருக்கிறது என ஒரு செய்தியில் படித்தவுடன் தனது உடலை தானமாக எழுதிக் கொடுத்தவர்.
82 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிவந்தவர் சில நாட்களுக்கு முன் உடல் நலிவுற்றார்,நான் நிறைவான வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன் மருந்து மாத்திரைகளுடன் எனது வாழ்நாளை சிரமத்துடன் நீடிக்க விருப்பமில்லை ஆகவே எனக்கு மருத்துவ செலவு எதுவும் செய்ய வேண்டாம் என்றவர்.,ஆனாலும் குடும்பத்தினர் அவரை இன்னுயிரைக்காப்பாற்ற மருத்துவமனையில் சேர்த்துப் பார்த்தனர் பிரயோசனமில்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.
![]() |
தனக்கு நினைவு தப்புகிறது என்பது தெரிந்ததும் மனைவியைக்கூப்பிட்டு,' நான் உடல் தானத்திற்கு பதிவு செய்த ரசீது எங்கே?' என்று கேட்டு அதனை மகன் நேதாஜி சுவாமிநாதனிடம் கொடுத்து 'தடையின்றி என் உடலை தானம் செய்யவும்' என்று சொல்லி தாமாகவே கண்களை மூடி தன்னை இறையிடம் ஒப்படைத்துக் கொண்டார்.
நேற்று அவரது மரணச் செய்தி கேட்டு குவிந்த கூட்டத்தைப் பார்த்தபோதுதான் தெரிந்தது எவ்வளவு மனிதர்களை இவர் சம்பாதித்து வைத்துள்ளார் என்பது.
இறுதிச் சடங்குகளை முடித்து மதுரை மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் படிக்க அவரது உடல் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது,மாணவர்கள் நிச்சயம் அவரது மனித நேயத்தையும், மர நேயத்தையும் சேர்த்தே படிப்பார்கள்...
-எல்.முருகராஜ்