அமெரிக்கர்களின் பசிப்பிணி போக்கும் எல்மண்ட்ஸ் புட் பேங்க்
அமெரிக்கர்களின் பசிப்பிணி போக்கும் எல்மண்ட்ஸ் புட் பேங்க்
PUBLISHED ON : அக் 07, 2025 12:00 AM

அமெரிக்காவின் எட்மண்ட்ஸ் நகரின் வீதியில் ஒரு வாகனம் நிற்கிறது,அந்த வாகனத்தில் 'எட்மண்ட்ஸ் ஃபுட் பேங்க்'(எட்மண்ட்ஸ் உணவு உதவி மையம்) என எழுதப்பட்டுள்ளது அதன் பின்னாலிருந்து இறக்கப்படும் ஒவ்வொரு ரொட்டித் துண்டிலும், பால் பாக்கெட்டிலும், பழக் கூடையிலும், பசியின் தீரா வலியைச் சுமந்த பல நூறு கண்கள் நம்பிக்கையுடன் நிலைத்திருக்கின்றன.
உலகத்திற்கே வளத்தின் அடையாளமாகத் திகழும் அமெரிக்காவில்கூட, வேலை இழப்பு, விண்ணை முட்டும் விலைவாசி, குடும்பத் தலைவரின் திடீர் மறைவு, நோய்மையின் தாக்கம், குறைந்த வருமானம் போன்ற எண்ணற்ற காரணங்களால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒருவேளை உணவிற்காகப் போராடுகின்றன. 'அம்மா, பசிக்கிறது' என்று வாய்விட்டுக் கேட்க தன்மானம் தடுக்கிறது; ஆனால், பசியோ வயிற்றைப் புரட்டுகிறது.
இந்த அவலத்தைக் கண்ட சில நல்ல உள்ளங்கள், வீடுகளில் மீதமான உணவுகளைச் சேகரித்து வந்து பசியால் வாடுவோருக்கு வழங்க ஆரம்பித்தனர். அன்று சிறியதாகத் தொடங்கிய அந்த சேவைதான், இன்று 'எட்மண்ட்ஸ் ஃபுட் பேங்க்' என்ற பெயரில் பெரிதாக வளர்ந்து நிற்கிறது.'எட்மண்ட்ஸ் ஃபுட் பேங்க்' என்ற பெயருக்குக் காரணம், அது அமைந்துள்ள இடம்தான்.இந்த உணவு வங்கி அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள 'எட்மண்ட்ஸ்' என்ற நகரத்தில் அமைந்துள்ளது
ஆனால், வேதனை என்னவென்றால், காலம் மாறினாலும் காட்சி மாறவில்லை. உதவி பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, ஆனால் கொடுக்கும் கரங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இந்த இக்கட்டான சூழலில், அரசாங்கம் இந்த மக்களின் பசிப்பிணி துயர் துடைக்க முன்வர வேண்டும் என்ற ஏக்கத்துடன் இந்த தொண்டு நிறுவனத்தினர் தங்கள் சேவையைத் தொடர்கின்றனர்.
-எல்.முருகராஜ்