PUBLISHED ON : மார் 08, 2024 12:00 AM
![]() |
1671 ஆம் ஆண்டில் அசாம் பகுதிகளை ஆண்ட பேரரசின் பெயர் அகோம் பேரரசாகும்.
இந்த அகோம் பேரரசின் சக்ரவர்த்தி சக்ரத்வாஜ் சிங்காவின் தலைமைப் படைத்தலைவராக இருந்தவர் லச்சித் பர்புகான்.
அவுரங்கசீப் ஒவ்வொரு பகுதியாக படையெடுத்து தன் ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்தார்.அவரது படையெடுப்பிற்கு பயந்து தாங்களே முன்வந்து வரிகளை கட்டி அடிமையாக இருந்த அரசர்களும் உண்டு.அவர்களைப் போலத்தான் இந்த அகோம் பேரரசும் என்று கருதிய அவுரங்கசீப், ஒழுங்காக வரியைக் கட்டு மேலும் இஸ்லாமிய உடைகளை பயன்படுத்து என்று கடிதம் எழுதி அனுப்பினார்.
![]() |
அகோம் பேரரசர், லச்சித் பர்புகானின் ஆலோசனைப்படி கடிதத்தை நிராகரித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவுரங்கசீப் 30 ஆயிரம் காலாட்படைகள்,18 ஆயிரம் குதிரைப்படைகள்,15 ஆயிரம் வில்லாளர்கள்,மற்றும் 40 கப்பல்கள் அடங்கிய படையை ரஷித்கான் தலைமையில் அனுப்பிவைத்தார்.
இந்த படையை முறியடிக்கும் பொறுப்பு தளபதி பர்புகானுக்கு தரப்பட்டது.
சராய்காட் என்ற பகுதியில் அவுரங்கசீப்பின் படைகளும்,பர்புகானின் படைகளும் சந்தித்தன.
முகாலயர்களின் போர்த்திறனையும்,அவர்களின் படைத்தந்திரத்தையும் அறிந்திட்ட பர்புகான் அவர்களை போரில் வெல்ல பல்வேறு யுத்த தந்திரங்களை மேற்கொண்டார்.
அவுரங்கசீப்பின் படைகள் வரும் பாதையில் அரண்களை மின்னல் வேகத்தில் அமைத்தார் இதற்காக ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாவே துாங்கினார் தனது படைவீரர்களை இதற்காக உற்சாப்பபடுத்தினார்.
பர்புகானின் படையில் இருந்த அவரது தாய்மாமன் மிகவும் சோம்பேறித்தனமாக இருந்தததுடன் தளபதியின் தாய்மாமன் என்ற அந்தஸ்தில் நிறைய சலுகைகளை எடுத்துக் கொண்டார்.
நாட்டு நலனிற்கு முன் சொந்தம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்பதை போர் முனையிலேயே அறிவித்த பர்புகான் தவறிழைத்த தாய் மாமனை கடுமையாக தண்டித்தார்.
அவுரங்கசீப்பின் படைக்கு பலமாக இருந்தது உணவை சுமந்து கொண்டிந்த கப்பல் படைதான் என்பதை அறிந்து நடுக்கடலில் அந்தக் கப்பல்களை குண்டு வீசி அழித்தார்.இதனால் கலகலத்துப் போன அவுரங்கசீப்பின் படை பின் வாங்கியது.
அவுரங்கசீப்பிற்கு இந்தத் தோல்வி பெருத்த அவமானத்தை தந்தது அது மட்டுமல்ல அவுரங்கசீப்பின் படை வெல்லமுடியாத படை அல்ல என்பதையும் பர்புகான் நிருபீத்ததால் பல சிற்றரசர்களும் கூட அவுரங்சீப்பிற்கு வரி கட்ட மறுத்து எதிர்க்கத்துணிந்தனர்.
இதனால் பெரும் கோபமடைந்த அவுரங்கசீல் மீண்டும் ஒரு பெரும் படையை பர்புகானின் படையை வெல்ல அனுப்பினார்,இம்முறை வேறு சில தந்திர உபாயங்களைக் கண்டு அவுரங்கசீப்பின் படையை பர்புகான் வென்றார்.
இந்தப் போரின் போது பர்புகான் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருந்தார் இருந்தாலும் தளபதியான தான் படையில் இல்லை என்றால் வீரர்கள் சோர்ந்துவிடுவர் என்று சொல்லிவிட்டு மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்தள்ளிவிட்டு நோயோடு எதிரியையும் சேர்ந்து பந்தாடினார் வெற்றி பெற்றார்.
இதன் காரணமாக அவுரங்கசீப்பால் நாட்டின் கிழக்கு பகுதியை தொடவே முடியவில்லை அதற்கு அரணாக இருந்து தடுத்தவர் தளபதி பர்புகான்.
தேசமே பெரிது என்று தேசத்தின் நலனிற்காக தேசத்தை பாதுகாப்பதற்காக போர்க்களத்திலேயே இருந்த பெரும் வீரரான் பர்புகான் போர்க்களத்திலேயே இறந்தும் போனார்.
அசாமின் 'பிரேவ்ஹார்ட்' லச்சித் பர்புகான் என்று அசாம் மக்களால் போற்றப்படும் பர்புகான் வரலாற்று ஆசிரியர்களால் அசாமின் சத்தரபதி சிவாஜி என்றழைக்கப்பட்டார் என்றாலும் அவரது பெயரும் புகழும் வீரமும் அசாமைத் தாண்டி வெளிவரவில்லை.
இந்தக் குறையை தீர்க்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் அவரது 400 வது பிறந்த நாள் டில்லியில் விமரிசயைாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் இன்று அசாம் சென்றுள்ள பிரதமர் மோடி பர்புகானின் 84 சிலையைத் திறந்துவைத்தார்.
-எல்.முருகராஜ்.



