கடலில் வீணாகும் காவிரி தண்ணீர், விவசாயிகள் கண்ணீர்.
கடலில் வீணாகும் காவிரி தண்ணீர், விவசாயிகள் கண்ணீர்.
PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM

கடந்த மாதம் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடுமையான மழை.
வெகுவேகமாய் நிரம்பிய அணையில் இனியும் நீர் தேக்கிவைத்தால் பிரச்னை என்பதால் அணைக்கு வரும் நீரை அப்படியே உபரி நீராக வெளியேற்றியது கர்நாடக அரசு.
இதனால் நிரம்பியது மேட்டூர் அணை.
மேட்டூர் அணையை திறக்கப்போகிறோம், வரக்கூடிய தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமாய் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் நடந்தது என்ன?
விளைவு மேட்டூரில் இருந்து வெளியேறிய நீர் திருச்சி முக்கொம்பு வரை வந்து பின்னர் காவிரியாகவும்,கொள்ளிடமாகவும் பிரிகிறது.
காவிரியாக பிரியும் ஆற்றைவிட கொள்ளிடம் ஆறு அகலமானது,இதன் காரணமாக தண்ணீர் வரும் வேகத்தைப் பார்த்த அதிகாரிகள் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டனர்.
இப்படி கொள்ளிடத்தில் எப்போதாவது கரை புரண்டு வரும் தண்ணீரை குறிப்பிட்ட அளவு தடுத்து நிறுத்தி குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு பயன்படுத்த குமாரமங்கலம் என்ற இடத்தில் தடுப்பனையை 463 கோடி ரூபாய் செலவில் கட்டுகிறார்கள், கட்டுகிறார்கள், கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். 99 சதவீத வேலைகள் முடிந்துவிட்டது என்று சொன்னாலும் இன்னமும் செயல்பாட்டிற்கு வராததால் அந்த தடுப்பனையையும் தாண்டி கொள்ளிடம் பாலம் வழியாக கடந்து பழையாறு என்ற இடத்தில் கடலில் கலந்து வீணாகிவருகிறது.
இப்படி காவிரி கடை மடையில் உள்ள பல ஏரிகள் வறண்டு கிடக்க கண் எதிரே தண்ணீர் வீணாக கடலில் கலப்பதைப் பார்த்து விவசாயிகள் கண்கலங்குகின்றனர்.
இன்னும் எத்தனை வருடம்தான் இப்படி வராது வரும் அமுத நீர் போன்ற மழை நீரை வீணாக்கப்போகிறோம் என்பதே அவர்களது ஆதங்கம்.
எல்லா அரசியல் அதிகார கலச்சார நிகழ்வுகளையும் ஒத்திவைத்துவிட்டு விவசாயிகளின் கண்ணீரை துடைக்கும் வகையில் வீணாகும் தண்ணீரை சேமித்து வைக்கும் நடவடிக்கையில் அரசு முழுமூச்சாக இறங்குமா?இறங்கவேண்டும்.
-எல்.முருகராஜ்