/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வேலை கொடுக்கும் முதலாளியாக மாறியுள்ளேன்!
/
வேலை கொடுக்கும் முதலாளியாக மாறியுள்ளேன்!
PUBLISHED ON : ஆக 17, 2025 12:00 AM

'கவி ஹனி இண்டஸ்ட்ரீஸ்' என்ற பெயரில், தேன் சம்பந்தமான உணவு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வரும், கன்னியாகுமரி மாவட்டம், சியோன்புரத்தைச் சேர்ந்த கவிதா:
திருமணத்திற்கு முன், சுயஉதவிக் குழுக்களை வழிநடத்தும் வேலையில் மூன்று ஆண்டுகளும், பின், விடுதி வார்டனாகவும் வேலை பார்த்தேன். அதன்பின், திருமணமாகியதும் குடும்பம், பிள்ளைகளை கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது.
அதனால், வீட்டிலிருந்தே ஏதாவது தொழில் செய்யலாமா என்ற தேடலில் இறங்கினேன். கணவர், மரப்பெட்டிகளை தோட்டங்களில் வைத்து, தேனீக்கள் வளர்த்து, தேன் உற்பத்தி செய்து, 'ஜி ஹனி' என்ற பெயரில் விற்பனை செய்தார். அதில் குறைவான லாபமே கிடைத்தது. ஆனால், தேனில் மதிப்பு கூட்டிய உணவு பொருட்களின் விலை மிக அதிகமாக இருந்தது.
உதாரணத்திற்கு தேன் கிலோ, 300 ரூபாய் என்றால், தேன் அத்தி கிலோ, 1,100 ரூபாய்க்கும், ரோஜா பூ குல்கந்து கிலோ, 600க்கும், தேன் நெல்லி கிலோ, 500 ரூபாய்க்கும் விற்பனையாவது தெரிந்தது.
அதனால், நானும் அந்த தொழிலையே செய்ய முடிவெடுத்தேன். கோவை வேளாண் பல்கலையில், தேனில் மதிப்பு கூட்டும், 10 நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று, வீட்டிலேயே தயாரிக்க துவங்கினேன். உணவு பொருள் தயாரிப்பு நிறுவனம் என்பதால், அதற்குரிய தர சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தையும் முறையாக வாங்கினேன்.
தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் போன்றவை, உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த உணவுகள் என்பதால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. என் தயாரிப்புகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மெடிக்கல் கடைகளுக்கு மொத்த விற்பனையாக அனுப்பி வைக்கிறேன்.
சமூக வலைதளங்கள் வாயிலாகவும் விற்பனை செய்கிறேன். இந்த தொழிலை ஆரம்பித்து, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. முதல் ஆண்டு, 30 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்தேன். இரண்டாவது ஆண்டு, 35 லட்சமும், கடந்தாண்டு, 40 லட்சம் ரூபாய்க்கு மேல், 'டர்ன் ஓவர்' ஆனது.
மூலப்பொருட்கள், பாட்டில்கள், வேலை செய்வோருக்கு சம்பளம் போன்ற எல்லா செலவுகளும் போக, 25 சதவீதம் தொகை லாபமாக நிற்கிறது.
வேலைக்கு செல்ல முடியவில்லையே என்று கவலைப்பட்ட நான், இன்று சிலருக்கு வேலை கொடுக்கும் முதலாளி ஆகி இருக்கிறேன்.
என் மகள்கள், 'எங்கம்மா மாதிரி சூப்பரா ஒரு பிசினஸ் செய்ய வேண்டும்' என்று சொல்வதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
தொடர்புக்கு:
94433 23819