
திரைப்படங்களில் ஹீரோக்கள் விலங்குகளுடன் சண்டையிடுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள அர்சி கிராமத்தில், 18 வயது இளைஞன் ஒருவன் சீறும் சிறுத்தையுடன் 15 நிமிடங்கள் மரணப் போராட்டம் நடத்தி, அதை வெறும் கைகளால் கொன்று உயிர் பிழைத்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சோலன் மாவட்டம் மலைகள் மற்றும் அடர்ந்த புதர்கள் நிறைந்த பகுதி. இங்கே சிறுத்தைகள் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான மோதல் மிக அதிகம். ஊருக்குள் புகுந்து கால்நடைகளைத் தூக்கிச் செல்வது அங்கே சாதாரணமான ஒன்றுதான்.
சிறுத்தைகள் வழக்கமாகத் தனது இரையின் கழுத்துப் பகுதியைத் தாக்கி மூச்சுக்குழாயைச் சிதைக்கும். இதை உணர்ந்த பிரவேஷ், சிறுத்தையின் பற்கள் தன் கழுத்தில் பதியாதவாறு, தனது இரு கைகளையும் அதன் வாய்க்குள் திணித்து தாடை எலும்புகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.
சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த பயங்கரப் போராட்டத்தில், பிரவேஷ் தனது முழு பலத்தையும் திரட்டிச் முழங்காலால் அதன் விலா எலும்புகளை பலமாக மிதித்தார்,அதன் கழுத்திலும் தாக்கினார். இறுதியில் மூச்சுத்திணறிய அந்தச் சிறுத்தை அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தது.
பிரவேஷின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரவேஷையும், அவர் அருகே செத்துக் கிடந்த சிறுத்தையையும் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிரவேஷிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். உடலில் பல இடங்களில் ஆழமான கீறல்கள் மற்றும் காயங்கள் இருந்தாலும், அவர் இப்போது அபாயக் கட்டத்தைத் தாண்டி நலமுடன் உள்ளார்.
வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, இறந்த சிறுத்தையின் உடலைக் கைப்பற்றினர்.இறந்த சிறுத்தை 3 வயதுடையது அது அதன் வாலிப வயதுதான்,சுமார் 45 கிலோ எடை கொண்டது.பொதுவாக சிறுத்தையானது, புலி, சிங்கம் போல எடை அதிகம் இல்லை என்றாலும் அதன் உடல் முழுவதும் தசைநார்கள் என்பதால், தாக்கும் போது அதன் வேகம் மற்றும் பலம் ஒரு மனிதனை விட 10 மடங்கு அதிகம்.இதனாலயே தாக்கிய வேகத்தில் மனிதன் மரணத்தை தொட்டுவிடுவான்.
இந்த நிலையில் ஒரு மனிதன் வெறும் கைகளால் சிறுத்தையை வீழ்த்துவது என்பது மருத்துவ ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மிக அரிதான ஒன்று. இதற்கு அந்த இளைஞனின் அபாரமான துணிச்சல்தான் காரணம் இத்தனைக்கும் அந்த இளைஞன் தற்காப்பு கலை கற்றவனோ பெரும் பலசாலியோ இல்லை ஆனால் சாவை சந்திக்கப்போகும்போது வரக்கூடிய அசாத்திய துணிச்சல் இருந்தது அதுவே அவரைக் காப்பாற்றியது என்று வனத்துறையினர் பாராட்டிக்கூறினர்.
பிரவேஷ் சர்மா இன்று ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஒரு அடையாளமாக மாறியுள்ளார்.அவருக்கு உடனடியாக அரசு நிதி உதவி வழங்கியுள்ளது விரைவில் வீரதீரத்திற்கான விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.இந்த சம்பவம் நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான்: ஆபத்தான தருணங்களில் பயத்தை விடத் துணிச்சலே ஒரு மனிதனின் சிறந்த ஆயுதமாக இருக்கவேண்டும் என்பதுதான் அது.
-எல்.முருகராஜ்

