PUBLISHED ON : செப் 11, 2026 04:45 PM

'அன்புப் பெரியோர்களே... அருமைத் தாய்மார்களே...' என்ற அவரது காந்தக் குரலும், முகத்தில் தவழும் மாறாத புன்னகையும் இனி நம் தொலைக்காட்சித் திரைகளிலும், பட்டிமன்ற மேடைகளிலும் ஒலிக்கப்போவதில்லை என்பதை நினைக்கும்போதே நெஞ்சம் கனக்கிறது.
தமிழ் மொழியின் இனிமையையும், பட்டிமன்றக் கலையின் எளிமையையும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் வீடுகளுக்குக் கொண்டு சேர்த்த தமிழறிஞர், பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு, தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
பண்டிகை நாட்களில் அவரது பட்டிமன்றத்தைப் பார்க்கவும் கேட்கவும் குடும்பம் குடும்பமாய் தொலைக்காட்சி முன் அமர்ந்த நினைவுகள், ஒவ்வொரு தமிழனின் வாழ்க்கையிலும் நீங்காதவை. திருக்குறளுக்கு அவர் எழுதிய எளிய உரை, தலைமுறைகள் தாண்டித் தமிழர்களுக்கு அறநெறியைப் போதித்து வருகிறது.
இப்போது இருப்பது போல கூகுளோ, ஏஐ தொழில்நுட்பங்களோ இல்லாத காலம் அது. பேட்டியின்போது பல புத்தகங்களை உடனுக்குடன் எடுத்துப் புரட்டி, அவர் விளக்கம் கொடுத்த விதம் ஆச்சரியமளித்தது. அங்கிருந்த அத்தனை புத்தகங்களின் பக்கங்களும் அவருக்கு அத்துப்படியாகியிருந்தன.
எளிமையே உருவமாக அவர் வாழ்ந்திருந்தார். சிறுகச் சிறுகச் சம்பாதித்த பணத்தையெல்லாம் நல்ல காரியங்களுக்காகச் செலவிட்டார். தான் படித்த மதுரை ஆரப்பாளையம் பள்ளி நலிவுற்றிருப்பதை அறிந்து, அதற்கு 20 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கிய பெருந்தகை அவர்.
கடைசி வரை தமிழ் தமிழ் என்றே வாழ்ந்தவர், மகாகவி பாரதியார் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில் இருந்த வேளையில், அது நடக்காமலே பாரதி இறந்த நாளிலேயே அவரும் மறைந்துவிட்டார்.
இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, விநாயகர் சதுர்த்தி சிறப்பு பட்டிமன்றத்திற்காகச் சிவகாசி சென்று வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு முழுவதும் தூக்கம் வராமல் சிரமப்பட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
தமிழ்த்தாயின் மகனாய், நகைச்சுவை மேதையாய், பேரன்பு கொண்ட பெரியோராய் வாழ்ந்து மறைந்த சாலமன் பாப்பையா அவர்களின் குரல் தமிழர்களின் நினைவுகளில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்து, குடும்பத்தினருக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வோம்.தமிழ் உள்ளவரை சாலமன் பாப்பையாவின் புகழ் நீடித்திருக்கும், நிலைத்திருக்கும்...!
-எல்.முருகராஜ்
