PUBLISHED ON : ஜன 23, 2026 05:19 PM

'இரத்தத்தைக் கொடுங்கள், சுதந்திரத்தைத் தருகிறேன்!' - இந்த ஒற்றை முழக்கத்தால் இந்தியத் துணைக் கண்டத்தையே அதிரச் செய்தவர் நேதாஜி. அகிம்சை வழியில் போராட்டம் நடந்த காலத்தில், 'அடிமைப்பட்டுக் கிடக்கும் தேசத்திற்கு ஆயுதமேந்திய புரட்சியே விடியல் தரும்' என்று முழங்கிய எரிமலை அவர்.
இந்திய ஆட்சிப் பணி எனும் உயரிய பதவியை ஒரு துரும்பாகக் கருதி உதறித் தள்ளியபோதே, அவரது தியாகப் பயணம் தொடங்கிவிட்டது. பிரிட்டிஷ் அரசு அவரை வீட்டுக் காவலில் வைத்தபோது, மாறுவேடத்தில் மகாசமுத்திரங்களைக் கடந்து, உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டிய அவரது துணிச்சல், எந்தவொரு தந்திரக் கதைகளுக்கும் சளைத்தது அல்ல.
அன்னிய மண்ணில் நின்றுகொண்டு, தாய்நாட்டின் விடுதலைக்காக 'ஆசாத் ஹிந்த் பவுஜ்' என்ற ராணுவத்தைக் கட்டியெழுப்பினார். சாதி, மதம், இனம் கடந்து இந்தியர்கள் அனைவரும் 'ஜெய் ஹிந்த்' என்ற முழக்கத்தின் கீழ் ஒன்றிணையக் காரணமானார். பெண்களுக்கென 'ஜான்சி ராணி படை'யை உருவாக்கி, பாரதப் பெண்களின் வீரத்தைப் உலகுக்குப் பறைசாற்றினார்.
நேதாஜி வெறும் மனிதரல்ல; அவர் ஒரு தீராத தாகம். இமயமலைச் சாரலில் இருந்து இந்தியப் பெருங்கடல் வரை ஒலித்த அவரது 'டெல்லி சலோ' முழக்கம், ஒவ்வொரு இந்தியனின் நரம்பிலும் மின்சாரத்தைப் பாய்ச்சியது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் 1897-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி பிறந்தார். அந்த கணக்கின்படி, இன்று அவருக்கு 129-வது பிறந்தநாள் ஆகும்.நம் இந்திய அரசு இவரது பிறந்தநாளை 'வீர தினம்' என்று நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது.இன்று நாடு முழுவதும் இளைஞர்களாலும் பொதுமக்களாலும் அவரது திருவுருவப் படங்கள் சுமந்து வீடுதோறும் வீதிதோறும் எடுத்துச் செல்லப்படுகிறது அவரது செயல்கள் எடுத்துச் சொல்லப்படுகிறது ,அந்த வீரத் திருமகனின் வழியில் நின்று, நமது தேசத்தை மேலும் வலிமையான நாடாக மாற்றுவதே அவருக்கு நாம் செய்யும், செலுத்தும் சிறந்த சமர்ப்பணமாகும்.5:14 PM 1/23/2026
ஜெய் ஹிந்த்!
-எல்.முருகராஜ்

