PUBLISHED ON : ஜன 22, 2026 03:12 PM

ஆன்மீகத்தின் தலைநகராகவும், காலத்தால் அழியாத தொன்மை நகராகவும் விளங்கும் வாரணாசியின் புனிதக் கங்கை நதிக்கரையில், கண்டங்கள் கடந்த ஒரு காதல் காவியம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த காதலர்கள், பாரதத்தின் கலாச்சார வேர்களில் தங்களை இணைத்துக்கொண்ட இந்தச் சம்பவம் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த 35 வயதான கான்ஸ்டான்டின் மெரிங், ஒரு தேர்ந்த இசைக்கலைஞர். அவரது இணையாகியுள்ள 30 வயதான மெரினா, அந்நாட்டில் வழக்கறிஞராகப் பணியாற்றுபவர். இவர்கள் இருவரும் நீண்ட காலமாகக் காதலித்து வந்த நிலையில், இவர்களின் இதயங்களை இணைக்கும் பாலமாக அமைந்தது இந்தியக் கலாச்சாரம் மற்றும் நம் பண்பாட்டின் மீது அவர்கள் கொண்டிருந்த தீராத ஈடுபாடாகும்.
தங்கள் விருப்பப்படியே, வாரணாசியில் தங்கியிருந்த இவர்களுக்கு, உள்ளூர் பண்டிதர்கள் முன்னிலையில் சாஸ்திர விதிகளின்படி இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.திருமணக் கோலத்தில் மணமகன் கான்ஸ்டான்டின் பட்டு வேட்டி, குர்தா அணிந்து கம்பீரமாகத் திகழ, மணமகள் மெரினா தென்னிந்தியப் பட்டுச் சேலை, நெற்றிச் சுட்டி மற்றும் மலர் மாலைகளுடன் அசல் இந்தியப் பெண்ணாகவே உருமாறித் திகழ்ந்தார்.
ஓம குண்டத்தில் அக்னி வளர்க்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க, தீயை வலம் வந்து (சப்தபதி) இருவரும் தங்களின் வாழ்நாள் உறுதிமொழிகளை ஏற்றனர். அதன் உச்சகட்டமாக, மணமகன் கான்ஸ்டான்டின், மணமகள் மெரினாவிற்கு மங்கல நாண் (தாலி) அணிவித்து, அவர் நெற்றியில் குங்குமம் சூட்டி, தனது காதலியை மனைவியாக்கிக் கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு, புதுமணத் தம்பதியினர் வாரணாசியின் புகழ்பெற்ற கங்கை ஆரத்தியில் பங்கேற்றனர். கங்கைத் தாயின் ஆசிர்வாதத்துடன் தங்கள் வாழ்வைத் தொடங்கியது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய அவர்கள், 'இந்தத் திருமண முறை எங்களுக்கு அளவற்ற மன அமைதியையும், ஆன்மீக ரீதியான ஒரு பிணைப்பையும் வழங்கியுள்ளது' எனத் தெரிவித்தனர்.
விசா உள்ளீட்ட பிரச்னை காரணமாக இருவரின் பெற்றோர்கள் உள்ளீட்ட குடும்பத்தால் உறவினர் யாரும் திருமணத்திற்கு வரஇயலவில்லை வெகு சில நண்பர்கள் மட்டுமே வந்திருந்தனர் கானொளிக்காட்சியின் மூலம் அனைவரின் ஆசியைப் பெற்றவர்கள் விரைவில் தாயகம் திரும்பியதும் நேரில் ஆசி பெறஉள்ளனர்.
கண்டங்கள் தாண்டி வந்து, கலாச்சாரங்களை உள்வாங்கி, கங்கை கரையில் கைகோர்த்துள்ள இந்த ரஷ்யத் தம்பதியினர், இந்தியப் பண்பாடு உலக நாடுகளை எந்த அளவிற்குத் தன்வசம் ஈர்க்கிறது என்பதற்கு ஒரு கண்கூடான சான்றாகத் திகழ்கிறார்கள்.
-எல்.முருகராஜ்

