PUBLISHED ON : அக் 16, 2024 12:00 AM

குணாநிதி
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் பூக்கொல்லை கிராமத்தைச் சார்ந்த விவசாய கூலி வேலை செய்பவரின் மகன்.
அவன் படித்த காலத்தில் வீட்டில் மின்சாரம் கிடையாது தெருவிளக்கில்தான் படிக்கவேண்டும் அப்படித்தான் படித்தான்.
மழை பெய்தால் ஒழுகும் கூரை வீடு,மழை பெய்யும் போதெல்லாம் வீட்டின் ஒரு மூலையில் ஒண்டி உட்கார்ந்து கொண்டு மழை விட்டதும் துாங்கிப் போய் பழகிய குடும்பம் அது.
அவனுக்கு தெரிந்ததெல்லாம் படிப்பு மட்டும்தான் நன்றாக படித்தான்,பிளஸ் டூவில் நல்ல மார்க்குகள் எடுத்தான்.
அப்பாவிற்கு ரொம்ப சந்தோஷம், தான் கூலி வேலை செய்யும் வயல் முதலாளியும் ஊர் பிரமுகருமானவரிடம் மகனை அழைத்துப் போய் காண்பித்து அவன் மார்க் எடுத்த விவரத்தைக்கூறி சந்தோஷப்பட்டார்.
ஆனால் அந்த விவசாயி எங்கே தனது கணவர் எதிரே உட்கார்ந்துவிடுவோரோ? என நினைத்த பிரமுகரின் மனைவி, வீட்டின் கூடத்தில் இருந்த நாற்காலியை எடுத்துக் கொண்டு உள்ளே போய்விட்டார்.
'வந்துங்கய்யா, மகன் மேற்கொண்டு படிக்கணும்கிறான்.. கொஞ்சம் செலவாகும் போல' என்று எண்சாண் உடம்பை ஒரு சாணுக்கு குறுக்கிக்கொண்டு விவசாயி பேசுகிறார்.
'அப்பே படிச்சு ஒண்ணும் ஆகப்போறதில்லை, நம்ம வயல்லே ஏதாவது வேலை செய்யச் சொல்லு உனக்கும் பிரயோசனமா இருக்கும்' என்று சொல்லி விரட்டாத குறையாக வெறும் கையோடு அனுப்பிவிட்டார்.
வயலில் வேலை செய்வது ஒன்றும் கவுரக்குறைவான விஷயம் இல்லைதான், ஆனால் இரவு பகலாக மகன் இதற்கு ஆசைப்பட்டு படிக்கவில்லையே என்ற ஆதங்கத்துடனும் மகனின் மேற்படிப்பு கனவாகிவிடுமோ என்ற கவலையோடும் வீடு திரும்பிய விவசாயிக்கு, யாரோ சில நல்ல உள்ளத்தின் உதவியால் சென்னையில் உள்ள 'ஆனந்தம்' அறக்கட்டளையின் விலாசம் கிடைத்தது.
'ஆனந்தம்' பணம் இல்லாத காரணத்தால் உயர்கல்வியை கைவிடக்கூடிய மாணவ,மாணவியவரை படிக்கவைக்கும் ஒரு தொண்டு நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தின் மூலம் பைசா காசு செலவில்லாமல் உயர்கல்வியை முடித்த குணாநிதி குரூப் தேர்வு எழுதியதன் மூலம் அசிஸ்டெண்ட் ஜெயிலர் பதவியும் கிடைக்கப்பெற்றார்.இப்போது குணாநிதி சென்னை புழல் சிறைச்சாலையின் அசிஸ்டெண்ட் ஜெயிலராவார்.
வேலைக்கான அரசு ஆணையை முதல்வர் ஸ்டாலின் குணாநிதியின் கையில் கொடுத்து பாராட்டினார்.இந்த செய்தியும்,படமும் மறுநாள் நாளிதழ்களில் வெளியாகிய போது குணாநிதி தனது சொந்த கிராமமான பூக்கொல்லையில் இருந்தார்.
குணாநிதியின் வீடு தேடி வந்த பழைய பிரமுகர், 'குணாநிதி நீ பெரிய ஆளுப்பா! கிராமத்துக்கே பெருமை தேடித்தந்துட்டே,நாங்ல்லாம் பேப்பர்ல பார்க்கிற முதல் அமசை்சரை நேரில் போய் பார்த்து பேசிவிட்டு வந்துட்ட' என்று பலபட பராட்டி பேசினார்,
'எல்லாம் இருக்கட்டும் முதல்ல நாற்காலியில் உட்காருங்க வீட்டிற்கு வந்தவங்களை உட்காரவைத்து பேசுவதுதான் முறை என்று சொல்லி அவருக்கு நாற்காலி கொடுத்து உட்கார வைத்த குணாநிதி பக்கத்தில் இன்னோரு நாற்காலியில் தனது தந்தையை அமரவைத்து அழகு பார்த்தார்.
பழைய சம்பவங்கள் மனதில் ஒடியதோ என்னவோ பிரமுகருக்கு அதன்பிறகு பேச்சு எதுவும் எழவில்லை.
இந்த சம்பவத்தை கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற ஆனந்தம் நம்பிக்கை திருவிழாவில் குணாநிதி பகிர்ந்து கொண்டு, வாழ்க்கையில் ஒரு தலைமுறையையே மாற்றும் சக்தி ஒன்றுக்கு உண்டு என்றால் அது கல்வியால் மட்டுமே முடியும் என்பதை நான் உணர்ந்தது போலவே நீங்களும் உணருங்கள் என்று சொல்லிமுடித்தார்.
அரங்கம் ஆரவாரமாக அவரது பேச்சை உள்வாங்கிக்கொண்டது.
-எல்.முருகராஜ்