PUBLISHED ON : டிச 07, 2024 12:00 AM

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - செல்லம்மாதன்னையே சகியென்று சரணம் எய்தினேன்
பொன்னையே நிகர்த்த மேனிமின்னையே நிகர்த்த சாயல்பின்னையே நித்ய கன்னியேசெல்லம்மா
மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீச -நீகண் பாராயோ வந்து சேராயோசெல்லம்மா
யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்மேவுமே இங்கு யாவுமேசெல்லம்மா செல்லம்மா செல்லம்மா ..என்ற பாடல்..
இது போல அதன்பின்னும் சில பாடல்கள் என்னை முன்னிறுத்திப்பாடினார்.
பின்னர் அதனை அச்சிற்கு கொண்டு செல்லும் போது என் சகோதரர் பொதுப்பாடல் குடும்பப்பாடலாகிவிடும் ஆகவே உங்கள் மனைவி பெயர் வேண்டாமே?எனக் கேட்டுக்கொண்டார்,பாரதியும் அதற்கு உடன்பட்டார்
பாரதியின் பிறந்த நாள் வருகின்ற 11 ஆம் தேதி வருகின்றது.இதனை கடந்த 30 ஆண்டுகளாக கொண்டாடிவரும் வானவில் பண்பாட்டு மையம் 31 வது ஆண்டாக நான்கு நாட்கள் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
முதல் நாளான நேற்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் விழாவினை துவக்கினர்.
துவக்கவிழாவில் வித்தியாசமான நிகழ்ச்சியாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவரான சுதா சேஷய்யனின் 'செல்லம்மா பேசுகிறேன்' என்ற நிகழ்ச்சி நடந்தது.
பாரதியின் மனைவியாக வாழ்ந்து அவரது கவிதைகளை எல்லாம் பாதுகாத்து பிற்காலத்தில் நாட்டிற்கு வழங்கிய வணக்கத்திர்குரிய செல்லம்மா பாரதி தற்போது உயிர்பெற்று வந்து பேசினால் எப்படி இருக்கும் என்பதுதான் நிகழ்சியின் கரு.
இதனை மிகச் சரியாகவே சுதா சேஷய்யன் செய்திருந்தார்.
ஆனால் அவர் மறையவில்லை இதோ இங்கே பாடிய குழந்தைகளின் பாடல்களில், இந்த இல்லத்தில், உங்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
பாரதியைப் பற்றி பலரும் எழுதி வருகின்றனர் பேசிவருகின்றனர் ஆனால் அவரைப்பற்றி என்னை விட அதிகம் யார் அறிந்திருக்கமுடியும் ஆகவே நான் பேசுவது இன்னும் சரியாகத்தானே இருக்கும்.
மனைவியை, மகள்களை அவரைப் போல நேசித்தவர் யாரும் இருக்கமுடியாது,இயற்கையை நேசிக்க மகள்களுக்கு கற்றுக்கொடுத்தவர், அவர் இருவரையும் அழைத்துக் கொண்டு புதுச்சேரி கடற்கரைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள கடல் அலைகளில் முழ்கவைத்து பயத்தை தெளிவித்தவர்
பெரிய அலை எதுவும் செய்யவில்லை, சிறிய அலை அவரைப் புரட்டிப் போட்டது இதைப்பற்றி மகள்களிடம் சொல்லும் போது உருவம் கண்டு எதையும் யாரையும் எடை போடக்கூடாது என்பதை இந்த சிறிய அலை நமக்கு உணர்தியிருக்கிறது என்பதைக்கூட கவிதையாகச் சொன்னவர்.
வறுமை காரணமாக கிழிந்த சட்டையை மறைக்கவே கோட் போட்டுக கொண்டு இருந்தார் என்றெல்லாம் எழுதுகின்றனர் அந்த அளவிற்கு எல்லாம் வறுமை வாட்டியது கிடையாது,கோட் மாட்டிக் கொண்டு அதில் ஒரு பின்னும் மாட்டியிருப்பார் தேசத்தின் வீர மகன் நான் இந்த பின்னில் ராணுவ வீரர்கள் தொங்கவிடுவது போல வீர மெடல்கள் தொங்கவிடுவேன் என்பார்.
அவர் எப்போதும் கோட்டுப் போட்டவர் இல்லை, இன்னும் சொல்லப்போனால் வெறும் நான்கு முழ வேட்டி உடுத்திக் கொள்ளப்பிரியப்பட்டவர், அதற்கும் ஒரு காரணம் உண்டு. கடையத்தில் ஒருமுறை தோட்டத்திற்கு சென்ற போது அங்குள்ள குடிசைப் பகுதிக் குழந்தைகள் வேப்பம் பழத்தை பொறுக்கி சாப்பிட்டு பசியாறுவதைப் பார்த்துவிட்டு, இனி வேம்பு கசக்கும் என்று சொல்மாட்டேன் நானும் வேப்பம் பழம் சாப்பிட்டு பழகிக் கொள்கிறேன் என்று அவர்களுடன் நெருங்கிப் பழகி அவர்களைப் போலவே மேலுடை இல்லாமல் வெறும் நான்கு முழ வேட்டி மட்டுமே சில காலம் உடுத்திக் கொண்டிருந்தவர்தான்.
எல்லா மனைவிகளைப் போல ஆரம்பத்தில் நானும் வெளியூர் போன கணவர் வீட்டிற்கு திரும்பும் போது ஏதாவது தனக்கென வாங்கி வருவாரா? என்று எதிர்பார்த்தவள்தான், ஒரு முறை சென்னை சென்று திரும்பினார், போன இடம் பெரிய இடம் என்பதால் நன்றாக கவனித்து அனுப்பியிருப்பர் என்றே கருதி அவரது வருகையை நானும் எதிர்பார்த்து காத்திருந்தேன், அவரும் வந்தார் ஒரு குதிரை வண்டி நிறைய பார்சல்களோடு வந்திறங்கினார்,அந்த பார்சல்களில் எத்தனை பொன்னும் மணியும் புடவைகளும் இருக்கிறதோ? என்று ஆவல் மிகக் கொண்டு பிரித்துப் பார்தால் அத்தனையும் இலக்கண, இலக்கிய புத்தகங்கள்.
என்ன செல்லம்மா என்ன தேடுகிறாய்?,'அழியும் பொக்கிஷத்தைக்(பணத்தை) கொடுத்து அழியா பொக்கிஷம் வாங்கி வந்துள்ளேன் சந்தோஷப்படு' என்றார் அப்போது அதன் அர்த்தம் புரியவில்லை ஆனால் பின்னர்தான் அவரது வார்த்தையில் எத்துணை அர்த்தம் இருந்தது என்பது புரிந்தது மனம் மகிழ்ந்தது.
சாதி என்ற பேச்சே அவருக்கு பிடிக்காத ஒன்றாகும் கடையத்தில் நாங்கள் குடியிருந்த போது சலவைத் தொழிலாளியின் வீட்டிற்கு சென்று அவர்கள் வீட்டு கழுதைக்குட்டியை துாக்கி தோளில் போட்டுக் கொண்டு கவிதை பாடிக்கொண்டு வந்ததால் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தனர், அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்பட்டதே இல்லை தன் மனசுக்கு பிடித்தபடிதான் இருந்தார். வாழ்ந்தார்.
கடையத்தில் இருந்த ஒரே ஒரு நண்பருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக இனி இந்த ஊரில் நமக்கு என்ன வேலை என்று சென்னை வந்துவிட்டார்,அதன் பிறகு நடந்தெல்லாம்தான் உங்களுக்கு தெரியுமே..
-எல்.முருகராஜ்