PUBLISHED ON : ஜன 27, 2025 12:00 AM


தேவி சண்முகம், பாக்கியலட்சுமி ஆகியோருக்கு மகளாக மதுரையில் பிறந்தவர்.
தந்தையின் ஊக்குவிப்பால் மேடைகளில் பேசத்துவங்கியவர் இன்று ஆன்மீக பேச்சாளராக உலகம் முழுவதும் வலம் வருகிறார்.
தாய்மைக்கு மரியாதை என்ற தலைப்பில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்திய சென்னை நிகழ்வில் தாய் பாக்கியலட்சுமியுடன் கலந்து கொண்டவர் தன் தாயைப் போற்றி உணர்ச்சிகரமாக பேசினார்.
மராட்டிய மாமன்னர் சிவாஜி கருவில் இருக்கும் போதே தன் தாயார் சொன்ன வீரக்கதைகள் பல கேட்டு வளர்ந்தவர் என்பர் அது போல தமிழில் பெரிதும் ஈடுபாடு கொண்ட என் தாய் பாக்கியலட்சுமி நான் கருவுற்றிருந்த காலத்திலேயே எனக்காக திருக்குறள் சொல்லியிருக்கிறார், அதனால் எனக்கு திருக்குறள் மிகப்பரிச்சயம்.
சிறு வயதில் ஒரு முறை பெரிய பேச்சாளர்கள் பலர் கலந்து கொண்டனர்,பேச்சாளர் பட்டியலில் எனது பெயரும் இருந்தது இதன் காரணமாக பள்ளியில் உள்ள தோழியர் பலரிடமும் சொல்லி விழாவிற்கு வரச்சொல்லிவிட்டேன்.
பலரும் பேசினர் என் முறை வரும் வரும் என்று காத்திருந்தேன் ஆனால் நேரமின்மை காரணமாக என்னை பேச அழைக்கவேயில்லை ரொம்பவே உடைந்து போய்விட்டேன் ஆனால் என் தாயார்தான் கொஞ்சமும் மனம் தளராமல் இதே மேடையில் அடுத்த வருடம் நீதான் சிறப்பு பேச்சாளர் என்று சொல்லி தைரியம் சொன்னார்.அதன்படியே நடக்கவும் செய்தது.
வெறுமனே தைரியம் சொன்னதுடன் நிற்காமல் அதற்காக நிறைய உழைத்தார் என்னையும் உழைக்கவைத்தார்,மதுரை மீனாட்சி கோவிலில் கிருபானந்த வாரியார் பேசும் போது நீங்கள் மீனாட்சியை பார்த்திருப்பீர்கள் ஆனால் பேசக்கேட்டிருக்கமாட்டீர்கள்! இப்போது கேளுங்கள் என்று சொல்லி என்னை மேடையேற்றி பேசவிட்டார்.
இதற்கு எல்லாம் முக்கிய காரணமாக இருந்தவர் இருப்பவர் என் தாய் பாக்கியலட்சுமிதான் அவர் இப்போதும் என்ன சொல்வார் என்றால் நீ ஆயிரக்கணக்கான மேடைகள் ஏறியிருந்தாலும் எப்போது மேடையேறினாலும் அதுதான் உன் முதல் மேடையாக கருது என்பார் இப்படி மேடைக்கான பயபக்தியை உருவாக்கித் தந்த தாய்க்கு எப்போதுமே நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
-எல்.முருகராஜ்

