“அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம், அலங்காரம்… புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா…
“அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம், அலங்காரம்… புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா…
PUBLISHED ON : செப் 03, 2025 12:00 AM

இன்றைய காலத்தில் முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன. அங்கே வசிப்போர் யாரும் அந்நியர் அல்லர்; நம்மை பெற்றெடுத்து, வளர்த்து, மனிதனாக்கிய தாயும் தந்தையும் தான். அப்படிப்பட்ட பெற்றோரை புறக்கணிக்கத் தயங்காத இன்றைய உலகில், தன் தாயைத் தோளில் சுமந்து கோவிலுக்குக் கூட்டிச் சென்றுள்ளார் ஒருவர் — அவரைப்பற்றிய கதைதான் இது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம், ராய்பாக் தாலுகா, கெம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவ லக்ஷ்மண் பனே (55). ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவர், மஹாராஷ்டிராவின் பந்தர்பூரிலுள்ள ஸ்ரீ விட்டல்-ருக்மணி கோவிலுக்கு கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
அந்த உறுதியை நிறைவேற்ற சதாசிவன் ஒன்பது நாட்கள் தன் தாயைத் தோளில் சுமந்தபடி நடந்து, 220 கிலோமீட்டர் தூரத்தை கடந்தார்.பயணத்தின் போது தாயின் குளியல், உணவு, ஓய்வு — அனைத்தையும் பிள்ளையின் பாசத்தோடு,பரிவோடு செய்தார். வழியெங்கும் அவர்களபை் பார்த்தவர்கள் பிரமித்து புகைப்படம் எடுத்தனர், வீடியோ எடுத்தனர், பகிர்ந்தனர்.
“வண்டி, வாகனம் இருக்கும் காலத்தில் இப்படி ஒரு பைத்தியக்காரத் தனமா?” என்று உறவினர் கேட்டபோது, அவர் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் புன்னகையை பதிலாக தந்தார்.அந்த புன்னகையின் பின்னே,உண்மையில் நான் பைத்தியம் அல்ல, இது பாசத்தின் உச்சம்; பக்தியின் சின்னம் என்பது பதிலாக இருந்தது.
விட்டல் கோவிலை அடைந்த போது ,கோவில் நிர்வாகிகள் சதாசிவனை வரவேற்று, சிறப்பு தரிசனமும், மரியாதையும் செய்தனர்.அந்த தருணத்தில் தாய் சட்டெவ்வா மகிழ்ச்சியுடன்,“ இது எனது வாழ்வில் மறக்க முடியாத தருணம். என் மகன் ஆயுள் முழுவதும் நலமுடன் வாழ்வான்” என்று ஆசீர்வதித்தார்.
பயணத்தை வெற்றிகரமாக முடித்தபின், இறைவனை நோக்கி சதாசிவன் கைகளை உயர்த்திக் கும்பிட்டார்.வேடிக்கை பார்த்த மக்களோ அவர்களைப் பார்த்து கும்பிட்டனர்.
- எல். முருகராஜ்