PUBLISHED ON : அக் 14, 2026 07:23 PM

- இரண்டு வயது மழலை யாஷிகாவின் இந்தச் சிறிய வார்த்தைகள், வெறும் ஆறுதல் சொற்கள் அல்ல; ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் உலுக்கி எடுத்த சோகத்தின் வெளிப்பாடு. வறுமையின் பிடியில் சிக்கி, விடியலைத் தேடிய ஒரு குடும்பத்தின் ஒளியை விஷவாயு பறித்துச் சென்ற கோரத்தின் உச்சம் இது.
சென்னை, கொடுங்கையூர் தென்றல் நகரில் மழைநீர் தேக்கத் தொட்டியில் ஏற்பட்ட மின் மோட்டார் பழுதைச் சரிசெய்யச் சென்ற வேலூரைச் சேர்ந்த அஸ்மத் பாஷா மற்றும் தாம்பரத்தைச் சேர்ந்த நவீன் குமார் ஆகிய இரு கூலித் தொழிலாளர்கள், விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். வறுமைத் துரத்த, வேறு வழியின்றி ஆழமான அந்தத் தொட்டிக்குள் இறங்கிய அவர்களுக்குக் காத்திருந்தது மரணம்.
நவீன் குமாரை நம்பி வாழ்ந்த அவரது மனைவி பிரீதியும், இரண்டே வயதான பச்சிளம் பெண் குழந்தை யாஷிகாவும் இன்று ஆதரவற்றவர்களாக நிற்கின்றனர். ஸ்டான்லி மருத்துவமனை பிணவறை முன்பு, தங்களின் உழைக்கும் உறவை இழந்துவிட்டு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நடத்திய போராட்டம், நம் சமூகத்தின் நீண்டகால அவலத்தின் வெளிப்பாடு.
இறந்தவர்களின் குடும்பத்தினரின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, வீட்டு வசதி வாரிய தலைவர் சிவா ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 30 லட்ச ரூபாய் நிவாரண உதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
இந்த விபத்து தொடர்பாக அலட்சியமாகச் செயல்பட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் சரவணன் மற்றும் மின்துறை உதவி பொறியாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். மேலும், உதவி பொறியாளர் சரவணன் மற்றும் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒப்பந்ததாரரின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடக்காத வகையில் கடுமையான பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டு, உறவினர்கள் சமாதானமடைந்து உடல்களைப் பெற்றுச் சென்றனர்.
சட்டங்கள் கடுமையாக்கப்படுவதும், நிவாரணங்கள் வழங்குவதும் அவசியம்தான்; ஆனால், பாதுகாப்பு உபகரணங்களின்றி மனிதர்களை சாக்கடைகளிலும், நீர்த்தொட்டிகளிலும் இறக்கும் அவலம் முற்றிலும் ஒழிய வேண்டும். வறுமையும் வேலையின்மையும் யாருடைய உயிரையும் விலைபேசக் கூடாது.
இனி எந்தக் குழந்தையும் தன் தாயின் கண்ணீரைத் துடைக்கும் நிலைக்குத் தள்ளப்படாத ஒரு பாதுகாப்பான சூழல் உருவாவதே, அஸ்மத் பாஷா மற்றும் நவீன் குமாருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்!
-எல்.முருகராஜ்
படங்கள்:லட்சுமணன்
