முதியோர்களின் வாழ்வை முடக்கிய மயிலாப்பூர் நிதி நிறுவன வீழ்ச்சி
முதியோர்களின் வாழ்வை முடக்கிய மயிலாப்பூர் நிதி நிறுவன வீழ்ச்சி
PUBLISHED ON : செப் 25, 2026 04:42 PM

10 லட்சம், 20 லட்சம், என வாழ்நாள் முழுக்க உழைத்துச் சேர்த்த பணம் மொத்தமும் போச்சு... மருந்து வாங்கக்கூடப் பணமில்லாமல் வீதியில் நின்று அழுகிறோம்' என்ற முதியோர்களின் கதறல், சென்னை மைலாப்பூரில் பெரும் சோகக் குரலாக கேட்டது.
ஆயிரக்கணக்கான முதியோர்கள் கொளுத்தும் வெயிலில் அரசே எங்கள் பணத்தை மீட்டுக் கொடு என்று உருக்கமான குரலில் கோஷமிட்டுக் கொண்டு இருந்தனர்.அதற்கேற்ப பாததைகளைப் பிடித்துக் கொண்டு இருந்தனர்,தங்கள் முகத்தில் கரி பூசப்பட்டுவிட்டதை காட்டும் விதத்தில் சிலர் முகத்தில் சேற்றையும் கரியையும் பூசிக்கொண்டு கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்றிருப்பதாக சொல்லி நின்றிருந்தனர்.
பணமிழந்த அவர்களது நிகழ்கால வாழ்க்கையும் அதனால் பாதிக்கப்பட்ட அவர்களின் வார்த்தையும் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.கேட்பவர் நெஞ்சை ரணமாக்கியது.
வயதான காலத்தில், யாரையும் எதிர்பார்க்காமல் தங்களின் மருத்துவச் செலவுகளுக்கும், தினசரி வாழ்க்கைக்கும் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஒரே உயரிய எண்ணத்தில்தான் பெரும்பாலான ஓய்வூதியதாரர்களும், மூத்த குடிமக்களும் தங்களின் ஆயுள் முழுதும் சிறுகச் சிறுகச் சேர்த்தப் பணத்தை வங்கிகளில் சேமிக்கின்றனர்.
வங்கிகள் வழங்கும் வழக்கமான வட்டியை விட கூடுதலாக 2% வட்டி கிடைக்குமே என்ற எளிய எதிர்பார்ப்பும், 150 ஆண்டுகால பாரம்பரியத்தின் மீதிருந்த அளப்பரிய நம்பிக்கையும்தான், இன்று ஆயிரக்கணக்கான முதியோர்களின் வாழ்க்கையை வீதியில் நிறுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் 1870-களிலிருந்து இயங்கி வந்த 'மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் பண்ட்' நிறுவனம், அப்பகுதி மக்களுக்கு வெறும் நிதி நிறுவனம் மட்டுமல்ல; தலைமுறை தலைமுறையாகத் தங்கள் பணத்தைப் பாதுகாக்கும் ஒரு குடும்ப அங்கம் போலத் திகழ்ந்தது.
வங்கிகளில் 6% முதல் 7% வரை வட்டி தரப்பட்ட நிலையில், இந்நிறுவனத்தில் 8% முதல் 12% வரை வட்டி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. 'கூடுதலாகக் கிடைக்கும் அந்த 2% வட்டிப் பணம், மாதாந்திர மருத்துவச் செலவுக்கும், பேரன்- பேத்திகளுக்குப் பலகாரம் வாங்கித் தரவும் உதவுமே' என்ற முதியோர்களின் நியாயமான ஆசையே, அவர்களது வாழ்க்கையை நிலைகுலைய வைக்கும் என அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.
நன்றாகப் போய்க்கொண்டு இருந்த அந்த நிதி நிறுவனம் இயங்கிய அதே கட்டிடத்தில் இயங்கிவந்த வின் டி.வி..நிறுவனர் தேவநாதன் யாதவ் என்பவர் கண்ணில் இங்கு புழங்கிக்கொண்டு இருந்த கோடிக்கணக்கான பணம் கண்ணை உறுத்தியது.
சாதி,அரசியல்,ஊடகத்தில் செல்வாக்கு மிக்கவர் என்ற பிம்பத்தை உருவாக்கி இந்த நிறுவனத்தின் மேலான் இயக்குனராகவும் தலைவராகவும் சர்வ சக்கதி மிக்கவரானார்.
2024 பிப்ரவரி மாதம் முதல், முதிர்வடைந்த டெபாசிட்களுக்குப் பணமும் தரப்படாமல், மாதாந்திர வட்டியும் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டபோதே இடி வீழ்ந்தது. முடங்கிய ஓய்வூதியப் பணம்: பணி ஓய்வுக்குப் பின் கிடைத்த பி.எஃப் , கிராஜுவிட்டி, ஆயுள் சேமிப்பு மற்றும் பிள்ளைகளின் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்த பணத்தை இதில் டெபாசிட் செய்த ஆயிரக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் இன்று நிர்கதியாக நடுத்தெருவில் நிற்கின்றனர்.
அன்றாடம் மாத்திரை, மருந்துகள் வாங்கவும், அவசர மருத்துவச் சிகிச்சைகளுக்கும் கூடப் பணமன்றி முதியோர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர். நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட முன் கூட்டிய காசோலைகளும் பணமின்றித் திரும்பி வந்ததால், முதலீட்டாளர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எங்கே போனது ₹700 கோடி:பொருளாதாரக் குற்றப்பிரிவு மற்றும் நீதிமன்ற விசாரணைகளின்படி, சுமார் 5,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ஏறத்தாழ ₹700 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
150 ஆண்டுக்கால பாரம்பரிய நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநராகப் பொறுப்பேற்ற தேவநாதன் யாதவ், 'போலித் தங்க நகைக் கடன்கள்' மூலம் ₹700 கோடி ரூபாயை மோசடி செய்திருப்பதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பு ஆய்வின்படி, பாதிக்கப்பட்ட முதியோர்களுக்குத் தர வேண்டிய ₹700 கோடி பணத்திற்கு ஈடாக தேவநாதனிடம் உள்ள சொத்துகளின் வழிகாட்டு மதிப்பு வெறும் ₹37 கோடி மட்டுமே உள்ளது என்பதாக நீதிமன்றத்தில் தெரவிக்கப்பட்டுள்ளது.
'அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாந்துவிட்டார்கள்' என எளிய வார்த்தைகளால் இதைக் கடந்து செல்ல முடியாது. ஏனெனில், இது நேற்று தொடங்கிய சீட்டு கம்பெனி அல்ல; 150 ஆண்டுகள் தடையின்றிச் செயல்பட்ட பாரம்பரிய நிறுவனம். காலம் முழுவதும் நேர்மையாக உழைத்து, முதிய வயதில் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்று நினைத்த மூத்த குடிமக்களின் '2 சதவீத கூடுதல் வட்டி' ஆசை என்பது பேராசை அல்ல; அது அவர்களின் அடிப்படை வாழ்க்கைத் தேவை.முதியோர்களின் கண்ணீருக்குப் பதிலும், அவர்களின் வாழ்நாள் சேமிப்பிற்கு உரிய நீதியும் விரைவில் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் ஒரே எதிர்பார்ப்பாகும்.
நிம்மதியாக கழிக்கவேண்டிய கடைசி காலத்தை இப்படி கண்ணீரும் கம்பலையுமாக கழிக்கும் இவர்களது கவலையை தீர்ப்பது சம்பந்தப்பட்டவர்களின் முதல் கடமையாக இருக்கட்டும்.
-எல்.முருகராஜ்.படங்கள்:யுவராஜ்
