தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/ஆனந்தராவ் அ.ஆ.இ.ஈ.,

ஆனந்தராவ் அ.ஆ.இ.ஈ.,

ஆனந்தராவ் அ.ஆ.இ.ஈ.,


PUBLISHED ON : ஆக 03, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 03, 2016 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வயதில் மூத்தவர்களின் மனதை சந்தோஷப்படுத்த எதுவும் செய்யவேண்டியது இல்லை, அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்டாலே போதும்,அப்படி ஒரு ஆனந்தம் அவர்கள் மனதிலும் அதன் மூலம் நம் மனதிலும் ஏற்படும்.

அப்படி ஒரு இனிய அனுபவம் இன்று ஏற்பட்டது.இவரைப் பொறுத்தவரை பேசுவதைவிட பாடுவதே அதிகம்.



'ஸ்வாகத்' சி.கே.ஆனந்தராவ் அ.ஆ.இ.ஈ.,வயது 72

அதென்ன பெயருக்கு பின்னால் அ.ஆ.இ.ஈ.,என்பதற்கான விளக்கத்தை கடைசியில் சொல்கிறேன்

இவர் சென்னை வளசரவாக்கம் அன்புநகரில் இருக்கிறார் அடிக்கடி போன் போட்டு ஒரு முறை உங்களை பார்க்கவேண்டுமே என்பார், இவர் போன் பேசும்பேதெல்லாம் இந்த பாட்டை கேளுங்களேன் என்று சொல்லிவிட்டு பழைய சினிமா பாடல் மெட்டில் தொழிலாளர் நலன் பேணும் கருத்தை வலியுறுத்தி பாடிவிட்டுத்தான் போனை வைப்பார்.



அவரைப் பார்க்க வருகிறேன் என்று சொன்னதும் மனிதருக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

அவருக்கான அறையில் பழைய மிகப்பழைய புத்தகங்கள், ஜெராக்ஸ் காப்பிகள், துண்டு பிரசுரங்கள் என்று நிறைய துணிப்பைகளில் அடுக்கிவைத்திருந்தார்.



கர்நாடகத்தை பூர்விகமாகக்கொண்டவர் ஆந்திராவில் பிறந்தவர் பிழைப்பு தேடி சென்னை வந்தவர்.எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் அதுவும் தெலுங்கில்.

சென்னை ஸ்வாகத் ஒட்டலில் சப்ளையர் வேலை கிடைத்தது இருபது வயதில் இருந்து ஐம்பது வரை அங்கேதான் வேலை. அதன்பிறகு திருமணவீடுகளில் உணவு பரிமாறுபவராக எழுபது வயது வரை சென்று வந்தவர்,கடந்த இரண்டு வருடங்களாக கண் மற்றும் இதய பிரச்னை காரணமாக அதிகம் வௌியில் போவதில்லை.



ஒட்டலில் வேலை பார்க்கும் போது கிடைத்த ஒய்வு நேரத்தில் நிறைய பாட்டு கேட்பது இவரது வழக்கம், கேட்ட பாடலை அதே மெட்டில் வேறு கருத்தை புகுத்தி சக கலைஞர்களிடம் பாடியும் காட்டுவார். அவரது இந்த முயற்சிக்கு நிறைய பாராட்டு கிடைக்கவே இது போலவே நிறைய பாடல்கள் பாட ஆரம்பித்தார்.பாடிய பாடல்களை எழுதிவைக்கவேண்டும் என்பதற்காக தமிழ் கற்றுக்கொண்டவர் பின்னர் 'உழைக்கும் வர்க்கப் பாடல்கள்' உள்ளீட்ட மூன்று புத்தகங்கள் போடுமளவிற்கு தமிழ் புலமை பெற்றார்.

உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால்



கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்...

என்ற பாடல் மெட்டை எடுத்துக்கொண்டு



நாம் ஒன்று படுவதெப்போ?

நான் சொல்வதிங்கு தப்போ?



நீ சிந்திப்பது எப்போ?

நாம் வெற்றி பெறுவது எப்போ!



உன் உழைப்பில் வந்தது மாடி

அதன் மதிப்போ ஒரு கோடி



நீ தினமும் உழைத்து வாடி

இங்கு தளர்ந்ததே உன் நாடி



என்று பாடுவார்.

இதே போல ராஜாவின் பார்வையில் ராணியின் பக்கம் பாடலை எடுத்துக்கொண்டு...



பல்லாண்டு வாழ்க பாட்டாளி வர்க்கம்

அது அமைக்கட்டும் சொர்க்கம்



அது கண்டு கொள்ளட்டும் இங்கு புதிய நன்மார்க்கம்

தலையில் குளிருக்கு கம்பளி யில்லை



தரையில் மிதிக்க கம்பளம் ஏனோ

தலைகுனிகிறதே வறுமையில் நாடு



ஆடம்பரங்கள் இதற்கொரு கேடு





ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் பாடலின் வரிகளை மாற்றி

உடல்களை சிறையில் அடைத்து விட்டாலே



உணர்ச்சிகள் அடங்கவில்லை

வாழ்க்கையென்றொன்று இருப்பதினாலே



உரிமைகள் ஒய்வதில்லை..

எழுந்து வா நடந்து வா ஒடிவா



பாட்டாளி வெற்றியென்று பாடி வா-உந்தன்

கூட்டாளி வெல்கவெனக் கூடிவா!



வியர்வைக்கு ஜாதிகள் மதமும் இல்லை

துாய உள்ளங்கள் என்றென்றும் தோற்றதில்லை



சுயநலக்கூட்டங்கள் வென்றதில்லை!

இங்குபயமென்ற சொல்லுக்கு இடமே இல்லை!

இப்படி ஆயிரக்கணக்கான பாடல்களை மனதிற்குள் பூட்டிவைத்துக்கொண்டுள்ளார்,உங்கள் பெயர் ஊர் மற்ற விவரத்தை சொல்லிவிட்டு அடுத்த முறை போன் செய்து பாருங்கள் உங்களுக்கும் ஒரு பாட்டு வைத்திருப்பார் மனிதருக்கு அந்த அளவிற்கு அபார ஞானம்.



சினிமா பாடல்கள் என்று இல்லாமல் தொழிலாளர் நலன் பேணும் மேலும் பல பாடல்களையும் பாடுவதில் வல்லவர் என்பதால் கிட்டத்தட்ட தமிழகத்தில் நடைபெறும் அனைத்து தொழிலாளர் நலக்கூட்டங்களிலும் இவரது பாடல்கள்தான் எழுச்சிநாதமாக முழங்கியிருக்கிறது.

இவரைப் பாடச்சொல்லி கேட்டவர்கள் பட்டியலில் கண்டசாலா,கே.பி.சுந்தரம்பாள்,பி.பி.சீனிவாஸ்,டி.எம்.எஸ்.,ஆகியோரும் உண்டு.இந்த பட்டியலில் நீங்களும் இடம் பெற வேண்டுமா?இவருடைய கைபேசியில் எண்(9865011963)நாலு வார்த்தை அன்பாக பேசிவிட்டு பிறகு உங்களால் முடிந்த அளவிற்கு நேரத்தையும் காதுகளையும் கொடுங்கள், நிறைய அனுபவமும் அன்பும் கிடைக்கும் அப்படி எதுவுமே இல்லை என்றாலும் அவரை சந்தோஷப்படுத்திய திருப்தி கிடைக்கும்.



அப்புறம் ஆனந்தராவ் அ.ஆ.இ.ஈ.,என்பதற்கான அர்த்தமாக அவரே சொல்வது இதுதான் அதிகம் படிக்காத ஆனந்தராவ் இயங்குவது ஈசனால்...

-எல்.முருகராஜ்





தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us