தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன்...

மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன்...

மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன்...


PUBLISHED ON : நவ 05, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2016 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன்...



வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடாசலம் தெருவின் மையத்தில் உள்ள அந்த டாக்டர் வீட்டின் முன் அப்படியொரு நோயாளிகள் கூட்டம்.



கைக்குழந்தைகளுடன் கூடிய தாய்மார்களும்,வயதானவர்களும் அதிகம் காணப்படுகின்றனர்.தெருவில் காய்கறி பழம் விற்கும் மூதாட்டிகள்,குப்பை அள்ளுவோர்,செருப்பு தைப்பவர் என அங்கிருந்த பெரும்பாலோனார் ஏழை எளிய மக்கள் என்பது பார்த்தமாத்திரத்திலேயே தெரிகிறது.

அனைவரையும் தாண்டிக் கொண்டு சென்றால் வீட்டின் முன் அறையில் இன்னும் அதிககூட்டம்.அவர்களுக்கு நடுவே ஒரு ஜன்னலோரத்தில் ஒரு சின்ன ஸ்டூலில் தன்னை குறுக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார் டாக்டர் ஜெயச்சந்திரன்.



'என்ன குட்டி எவ்வளவு நாளா காய்ச்சல்? கவலைப்படாதே நான் இருக்ககேன்ல, மருந்து மாத்திரை தர்ரேன் உடனே சரியாயிடும்' என்று அன்பும் அக்கறையும் கலந்த வார்த்தைகள் அவரிடம் இருந்து அருவி போல வந்து விழுகிறது.அந்த வார்த்தைகளிலேயே பாதி குணமானது போல அவரிடம் வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்த சேயும் தாயும் மகிழ்கின்றனர்.

மருத்துவம் பார்த்தற்கு பிரதிபலனாக சுருக்கு பையில் இருந்து துளாவி எடுத்து ஒரு ஐந்து ரூபாயை நீட்டுகிறார் அந்த தாய்.



'வீட்டுக்கு எப்படிம்மா போவே முடியாத குழந்தையை வச்சுக்கிட்டு நடக்காத தாயி, இந்த ரூபாய்ல ஆட்டோவுல போயிரு என்று அந்த அம்மா கொடுத்த ஐந்து ரூபாயுடன் தன் பையில் இருந்து எடுத்த முப்பது ரூபாயையும் சேர்த்து முப்பத்தைந்து ரூபாயாக திருப்பிக்கொடுக்கிறார், பிறகு 'கொஞ்சம் இரும்மா' என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் போய் இரண்டு டானிக் பாட்டிலை எடுத்து வந்து கொடுத்து, 'இது சத்து டானிக் குழந்தைக்கு கொடு தெம்பா இருப்பான்' என்று சொல்லி இலவமாக டானிக் பாட்டிலையும் கொடுத்து வழியனுப்பிவைக்கிறார்.

இதுதான் டாக்டர் ஜெயச்சந்திரன்



இப்போது 68 வயதைத் தொட்டுள்ள டாக்டர் ஜெயச்சந்திரன் இன்னும் பலரால் இரண்டு ரூபாய் டாக்டர் என்ற அடையாளப்படுத்தப்படுகிறார்,காரணம் அதுதான் நீண்டகாலமாக அவர் மக்களிடம் வாங்கிய மருத்துவ கட்டணம்.

டாக்டர் ஜெயச்சந்திரன் ஏழை எளியவர்களிடம் இவ்வளவு இரக்கமாக இருக்கக்காரணம் அந்த நிலையில் அனுஅனுவாக வாழ்ந்தவர்.



சென்னை-புதுச்சேரி ரோட்டில் கல்பாக்கம் பக்கம் உள்ள கொடைப்பட்டினம் கிராமம்தான் இவரது சொந்த ஊர்.படிப்பு வாசனையே இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்தவர்,சின்ன வைத்தியம் பார்த்தால் கூட பிழைத்துக்கொள்ளக்கூடிய பலர் அந்த வாய்ப்பு கூட இல்லாமல் இறந்ததை பார்த்து வருந்தியவரின் அடிமனதில் விழுந்ததுதான் டாக்டர் கனவு.

கிராமத்தில் படிக்க வசதி இல்லாததால் சென்னை வந்து அத்தை-மாமா வீட்டில் படித்தார்.உணவு என்பதே பழைய கஞ்சிதான்.கல்லுாரியில் படிக்கு போகும்போதுதான் இவருக்கு செருப்பே அறிமுகமானது.நல்ல உணவு நல்ல உடை என்பதெல்லாம் பிறகுதான்.



மருத்துவக்கல்லுாரியில் படிக்கும் போது கூட முதல் இரண்டு வருடம் நடந்துதான் போயிருக்கிறார் பிறகுதான் நண்பர் ஒருவர் தயவில் சைக்கிள் பயணம் சாத்தியப்பட்டது.

இப்படியாக மருத்துவரான இவர் படிப்பை முடித்ததும் எடுத்துக்கொண்ட முதல் உறுதி யாரிடமும் வேலை பார்க்கக்கூடாது எளிய மக்களின் இருப்பிடத்திற்கே சென்று இலவசமாக வைத்தியம் பார்க்கவேண்டும் என்பதுதான்.



இதற்காகவே இன்றும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கும் வடசென்னைக்கு சென்றார் அங்கு கிளினிக் வைக்க கையில் காசில்லை, தன்னுடன் படித்த நண்பரின் தந்தை கிளினிக் வைத்துக் கொடுது கூடவே ஒரு கண்டீசனும் போட்டார், இலவசமாக வைத்தியம் பார்த்தால் மரியாதை இருக்காது இரண்டு ரூபாயாவது வாங்குங்க என்றார்.

அதன்படி இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு வைத்தியம் பார்க்கத்துவங்கினர்.கொஞ்சநாளில் இவரிடமே கிளினிக்கை ஒப்படைத்துவிட்டு நண்பர் வெளிநாடு போய் செட்டிலாகிவிட்டார்.இரண்டு ரூபாய் வைத்தியர் என்ற பெயரில் இவர் பிரபலமானார்.மருந்து பிரதிநிதிகள் தரும் மருந்து மாத்திரைகள் மட்டுமின்றி இவரே மருந்து கம்பெனியிடம் குறைந்த விலைக்கு வாங்கி அந்த மருந்து மாத்திரைகளை நோயாளிகளுக்கு இலவசமாக கொடுத்துவிடுவார்.



ஸ்கேன்,எக்ஸ்ரே எடுப்பது எலும்பு முறிவு இதய நோய் போன்ற கொஞ்சம் பெரிய பிரச்னை என்றால் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் பேசி அப்பாயிண்மெண்ட் வாங்கி குணமாகும் வரை பார்த்துக்கொள்கிறார்.

இவரது ராசி காரணமாக எழை எளியவர்கள் மட்டுமின்ற வசதி படைத்த பலரும் இவரிடம் வைத்தியம் பார்த்து ஒரு சில நாளில் குணமாகிவிடுவர், அப்போது எங்களால் நிறைய பணம் கொடுக்கமுடியும் வாங்கிக்கொள்ளுங்கள் என்பார்கள் பதிலுக்கு இவர் 'அப்படியானால் நீங்கள் கொடுக்க விரும்பும் பணத்திற்கு பதிலாக மருந்து மாத்திரைகளாக வாங்கிக்கொடுத்துவிடுங்கள்,மருந்து மாத்திரை வாங்க முடியாத நோயாளிகளுக்கு நான் அவற்றை தந்துவிடுவேன் என்பார்'.அப்படி வாங்கிய மருந்து மாத்திரைகள் வீடுமுழவதும் நிறைந்து இருக்கிறது.

இப்படியே கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்களை கடந்துவிட்டார்.வயது 68 ஆகிவிட்டது ஆனாலும் ஆரம்பத்தில் இருந்த அதே அன்பு அக்கறை சுறுசுறுப்பு கொஞ்சமும் குறையவில்லை.

இப்போது இருக்கும் வீடு முழுவதும் மருந்துகளும் மாத்திரைகளும் புத்தகங்களுமாக நிரம்பிக்கிடக்கின்றது.நோயாளிகள் உறவினர்கள் போல வீடு முழுவதும் சுதந்திரமாக சென்றுவருகின்றனர்.தாத்தாவிற்கு பார்த்து அப்பாவிற்கு பார்த்து இப்போது பேத்திக்கும் என்று மூன்று தலைமுறையாக இவரிடம் வைத்தியம் பார்ப்பவர்கள் நிறைய பேர்.

நான் உலகத்திலேயே அதிகம் நேசிப்பது என் மருத்துவ தொழிலைத்தான் இதன் மூலம் ஒரு உயிரை காப்பாற்ற முடியும் எனும் போது அதில் கிடைக்கும் ஆனந்தமும் மனதிருப்தியும் கோடி கோடியாய் கொடுத்தாலும் கிடைக்காது 'ஐ லவ் மை ஜாப்' என்று அவர் சொல்லும் போதே கண்களும் முகமும் அப்படி மலர்கிறது.

காலையில் ஆறு மணிக்கு எல்லாம் அவசர நோயாளிகள் வந்து எழுப்பிவிடுவார்களாம் , லுங்கி பனியனுடன் வைத்தியம் பார்க்க ஆரம்பிப்பவர் பிறகு சாப்பாட்டைக்கூட மறந்து அப்படியே வைத்தியம் பார்த்தக்கொண்டு இருப்பாராம்,நோயாளிகள் பலர் அவரைப்பற்றி பெருமையாகச் சொல்லும் போது மறக்காமல் சொன்ன விஷயம் இது.

இது போக கணக்கு வழக்கு இல்லாமல் இலவச மருத்துவமுகாம் நடத்தியுள்ளார், இப்போதும் நடத்தி வருகிறார். ரத்ததானம் செய்ய ஒரு பெரிய தொண்டர் படையே வைத்துள்ளார்.மெட்ரோ ரயில் திருவொற்றியூர் வரை வரவேண்டும் என்பதற்கான போராட்டத்தை முன்நின்று நடத்தி வெற்றி கண்டவர்,ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்க போராடிக்கொண்டு இருப்பவர்.

சிறுவயதில் அன்னை வேளாங்கண்ணி கோயிலில் இருந்து கொடுக்கப்பட்ட மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்ததால் அந்த நன்றிக்காக , நாற்பது வருடங்களுக்கு மேலாக நாகை வேளாங்கண்ணி கோயில் விழாவின் போது பெரிய அளவில் இலவச மருத்துவமுகாம் நடத்தியவர்.

இவரைப்பிடிக்காதவர்கள் என்று ஒருவரைக்கூட சொல்லமுடியாது வடசென்னை பகுதியில் யார் எந்த சமூக பணி செய்தாலும் அதில் இவரது பங்களிப்பு கொஞ்சமாவது இருக்கும் இவருக்காக எதையும் செய்யத்தயரான நண்பர்கள் நிறைய பேர் இவரைச் சுற்றியுள்ளனர் அவர்கள்தான் இவருக்கு ஷிப்ட் முறையில் வரும் நோயாளிகளுக்கு கம்பவுண்டர்களாக உதவியாளர்களாக இருந்து செயல்படுகின்றனர்.

தமிழ் ஆர்வலர் 'மகப்பேறும் மாறாத இளமையும்,'குழந்தை நலம் உங்கள் கையில்','தாய்ப்பால் ஊட்டுதலின் மகத்துவம்','உடல் பருமன் தீமைகளும் தீர்வுகளும்' என்பது போன்ற நுால்களை எளிய தமிழில் எழுதியுள்ளார்.

தன்னை நம்பி வந்த நோயாளியை எப்படி தேற்றுவது என்பதற்கு பதிலாக தன்னிடம் வந்துவிட்ட நோயாளியிடம் இருந்து எவ்வளவு தேற்றுவது என்ற அளவிற்கு மலினப்பட்டுவிட்ட மருத்துவர்கள் உலகில் மருத்துவம் என்பது மக்களுக்கு தொண்டு செய்யக்கிடைத்த மகத்தான பணி என்று கருதி செயல்படும் மாமனிதரான டாக்டர் ஜெயச்சந்திரனை சந்தேகமில்லாமல் மக்கள் மருத்துவர்தான்.

அவரது தொடர்பு எண்;9444117247,9176785795 (இரண்டு எண்கள் இருந்தும் எடுக்கவில்லை என்றால் மக்களோடும் மருத்துவத்தோடும் ஐக்கியமாகி இருக்கிறார் என்று அர்த்தம்)

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us