PUBLISHED ON : ஜன 19, 2024 12:00 AM
![]() |
நான் டாக்டர் சொக்கலிங்கம், இதய நோய் நிபுணர்.
இப்போது எனக்கு 80 வயதாகிறது, இன்று வரையில் நான் எந்த மாத்திரையும் சாப்பிட்டதில்லை.
எனது ஆரோக்கியத்தின் ரகசியத்தை உங்களுக்கு சொல்கிறேன்.
அது எளிதில் யாரும் பின்பற்றக்கூடிய ரகசியம்தான்.
அந்த ரகசியத்தை சொல்வதற்கு முன் ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
ஜப்பானில் ஒரு கருத்தரங்கு.
'நுாறு வயது வரை வாழ்வது எப்படி என்ற தலைப்பில் நான் பேசுவேன்' என்று மேடையில் அறிவித்தனர்
நான் பேச எழுந்ததும் அந்த கருத்தரங்கில் அமர்ந்திருந்த கொஞ்சம் பேர் சட்டென எழுந்து வெளியே சென்றனர்.
![]() |
ஆரோக்கியமான தலைப்பில்தானே பேசப்போகிறோம்! ஏன் எழுந்து போகின்றனர்? என்று அருகில் இருந்தவரிடம் கேட்டேன்
'அது ஒண்ணும் இல்ல சார், அவங்க எல்லாம் நுாறு வயதைத் தாண்டியவர்கள், அவர்களுக்கு எதற்கு நுாறு வயது வரை வாழ்வதற்கான ஆலோசனை, அதுதான் எழுந்து செல்கின்றனர்' என்றார்.
ஜப்பானில் நுாறு வயதிற்கு மேல் வாழ்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம்
இப்போது ரகசியத்திற்கு வருகிறேன்
எப்போதும் சந்தோஷமாக இருங்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள், கொடுத்து பழகுங்கள், எந்த வயதானாலும் ஏதாவது ஒரு காரியத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள், லிப்டை தவிர்த்து படியேறி பழகுங்கள், எளிமையான நேர்மையான வாழ்க்கையை தேர்ந்தெடுங்கள், உங்களுக்கு சந்தோஷம் தரும் விஷயத்தை தொடர்ந்து செய்யுங்கள், அமைதியாகவும் பதட்டமில்லாமலும் வாழப்பழகுங்கள்,உணவும் உடையும் எளிமையாக இருக்கட்டும்,உறவுகளை நட்பாக்கிக் கொள்ளுங்கள்,நட்டை உறவாக்கிக் கொள்ளுங்கள்,எங்கே உட்கார்ந்தாலும் நிமிர்ந்து உட்காருங்கள்,நல்ல விஷயத்தைக் கேட்டால் பலமாக கைதட்டுங்கள், அது உங்கள் உள்ளங்கை நரம்புகளை துாண்டிவிட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.இப்படி இருந்தால் நுாறு வயதென்ன நுாறைத்தாண்டியும் வாழமுடியும் என்றார்.
சென்னை பிரண்ட்ஸ் போரம் வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு டாக்டர் சொக்கலிங்கம் இப்படி பேசியதைக் கேட்டவர்கள் நன்றாக 'கைதட்டி' ரசித்தனர்.
-எல்.முருகராஜ்.



