PUBLISHED ON : நவ 27, 2024 12:00 AM


சிவ சிவ என்கிலர் தீவினையாளர்சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்சிவ சிவ என்னச் சிவகதி தானே---திருமூலர்.
சாதாரண மனிதர்களாகப் பிறந்து வாழ்வின் உண்மையான உண்மையைத் தேடி அலைந்து உணர்ந்து ஞானிகளாக,மகான்களாக,யோகிகளாகப் பரிணமித்து நிற்பவர்கள்தான் சித்தர்கள்.தங்கள் அனுபவங்களாலும், சிந்தனை செயல்களாலும், மனித குலம் உய்யப் பல மகத்தான உண்மைகளை உபதேசித்து, அவர்கள் தம்மை வழிபடுவோரின் இன்னல்களைத் தீர்த்துவைத்து நல்வழி காட்டுகின்றனர்,ஆன்ம நலத்தை போதித்து உயர்த்துகின்றனர்.
அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவர்தான் ஸ்ரீலஸ்ரீ கர பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள்.
திருப்போரூரில் முத்துசாமி-- செங்கமலத்தம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் சிவப்பிரகாசம். சிறு வயதிலேயே சைவ சமயத்தின் பஞ்சாட்சரத்தை உச்சரிப்பதிலும், சிவலிங்கத்திற்கு பூஜை செய்வதிலும் தன்னுடைய சிந்தனையை செலுத்தினார்.சைவ ரத்தின தேசிகரிடம் வேதாந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். யோக பயிற்சிகளில் ஈடுபட்டு, எளிதில் சமாதி நிலையை அடைந்துவிடுவார்.
திருவொற்றியூரில் பட்டினத்தாரின் சமாதிக்கு சென்று துறவு கோலம் பூண்டார்.தாயார் வீட்டிற்கு அழைத்த போது வீடு வரை வந்தவர், வாசலில் இருந்தபடி தாயார் செய்து தந்த உணவை சாப்பிட்டுவிட்டு இனிதான் துறவு வாழ்க்கை வாழப்போவதாக சொல்லிவிட்டு வீட்டைத் துறந்துவிட்டு கிளம்பிவிட்டார்.
அதன்பின் பசி எடுக்கும் போது யாருடைய வீட்டின் வாசலிலாவது சென்று நிற்பார், அவர்கள் இடும் உணவை இரு கரங்களால் ஏந்தி வாங்கிச் சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவார்.
இப்படி தனது இரு கரங்களையே பாத்திரமாக்கி உணவு வாங்கி சாப்பிட்டதால் 'கர பாத்திர சுவாமிகள்' என்று அழைக்கப்பட்டார்,இவர் யாருடைய வீட்டில் உணவு வாங்கிச் சாப்பிடுகிறாரோ? அந்த வீட்டில் உள்ளோர் கஷ்டமெல்லாம் விலகி நன்மைகள் பல பெற்றனர்.
திருவான்மியூர், வேப்பேரி, சூளை, செங்கல்வராய தோட்டம் என தனது தவ வாழ்க்கையை பல இடங்களில் கழித்து வந்த அவர், சாதுக்களுக்காக ஒரு மடத்தை அமைக்க விரும்பினார். தொண்டர் ஒருவரது உதவியுடன் வியாசர்பாடியில் இப்போது உள்ள இடத்தை பெற்ற சுவாமிகள் இங்கு அமைத்ததுதான் 'ஆனந்தாஸ்ரமம்' காலப்போக்கில் அது சாமியார் தோட்டம் என்று அழைக்கப்பட்டது.
இந்த ஆஸ்ரமத்தில் பல சாதுககள் உருவாகினர், அவர்கள் எல்லாம் பல்வேறு ஊர்களுக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் அது தனி வரலாறு.
கர பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், 'ஆன்ம புராணம்', 'தத்துவாத சந்தானம்' என்ற நூல்களை எழுதியுள்ளார்,ஆஸ்ரமத்தினுள் அந்தக் காலத்திலேயே பெரிய நுாலகம் அமைத்து இந்த இடத்தை அறிவுத்தேடல் உள்ளவர்களின் சரணாலயமாக்கினார்,எங்கும் மரங்களும்,மூலிகை செடிகளும் நட்டு வைத்து இடத்தையே ஒரு நந்தவனமாக்கியுள்ளார்.
தன்னை நாடிவரும் அன்பர்களுக்கு அவர்களின் துன்பங்களைப் போக்கி வந்த சிவப்பிரகாச சுவாமிகள், தன்னுடைய உடலில் இருந்து ஆன்மாவைப் பிரிக்கும் காலம் நெருங்கியதை உணர்ந்தார். அந்தச் செய்தியை மூன்று நாட்களுக்கு முன்பாகவே தன்னுடைய பக்தர்களுக்கு அறிவித்தார். பின்னர் யோகத்தில் ஆழ்ந்தவர் 4.4.1918-ம் ஆண்டு சமாதி அடைந்தார். அவரது சமாதியின் மீது பாண லிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இயற்கையைப் போற்றி வாழ்ந்த கர பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மறைவிற்கு பிறகு அவரது தொண்டர்கள் இதனை சிவாலயமாக்கி பிரபலமாக்கியுள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள வடபழநி ஆண்டவர் கோவிலின் உப கோவிலாக இந்த மடாலயம் இப்போது விளங்குகிறது.வடபழநியாண்டவர் கோவில் நிர்வாகம் நன்கு செயல்படுவதால் அதன் நிதி மற்றும் மேலாண்மை உதவியுடன் இந்த கர பாத்திர சுவாமிகள் கோவிலானது, இறையன்பர்கள் விரும்பும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
வடசென்னை, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரிக்கு எதிரில் சாமியார் தோட்டம் முதல் தெருவினுள் சிறிது தூரம் சென்றால் சுவாமிகளின் ஆலயத்தை தரிசிக்கலாம்.
இன்னும் எளிதாக மெட்ரோவில் ஏறி வியாசர்பாடி ஜீவா நிலையத்தில் இறங்கி அங்கு இருந்து ஆட்டோவில் செல்லலாம்.
காலை 6 மணியில் இருந்து பகல் 12 மணி வரையிலும் பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
-எல்.முருகராஜ்

