PUBLISHED ON : செப் 12, 2024 12:00 AM

ஆனால் அன்று நடந்த ஆர்ப்பாட்டம் வித்தியாசமானது
இத்தனைக்கு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் யாரும் தங்களுக்காக எந்த வித கோரிக்கையும் வைக்கவில்லை
அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கும் புதியவர்கள்
யாரும் பேச்சாளர்களோ பிரமுகர்களோ கிடையாது
அனைவரும் மக்கள் சேவையே மகத்தான சேவை என்று பெருநகரில் ஆங்காங்கே மருத்துவம் பார்த்துக் கொண்டு இருக்கும் மூத்த மருத்துவர்கள்
அவர்களில் நிறைய பேர் பெண் மருத்துவர்கள்
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அவர்களில் ஒருவரான டாக்டர் ஜெயஸ்ரீயின் பேச்சு இருந்தது.
சிபிஐ விசாரணை,உச்சநீதி மன்ற நேரடி தலையீடு என்றெல்லாம் வந்த செய்தியைப் பார்த்துவிட்டு நியாயமான தீர்ப்பும், தீர்வும் கிடைத்திருக்கும் என்று நம்பினோம், ஆனால் கிணற்றில் போட்ட கல்லாக விஷயம் ஒரு மாத்திற்கு மேலாகியும் இருப்பதுதான் வருத்தம் தருகிறது.
நேற்று கூட கொல்கத்தாவில் உள்ள இளம் பெண் மருத்துவர்கள் கடல் அலை போல திரண்டு வீதிகளை அடைத்துக் கொண்டு நீதி கேட்டு பேரணியாகச் சென்றார்கள் என்றால் அவர்கள் ஒவ்வொருவருமே எதிர்காலத்தை அல்ல தங்களின் நிகழ்காலத்தை எண்ணி பயப்படுகிறார்கள் என்றே அர்த்தம்.
என் மகள் டாக்டராகப் போகறாள் என்று டாக்டர் படிப்பு படிக்கப் போகும் மகளை நினைத்து பெற்றோர் உற்றோரிடம் பெரிதும் பெருமைப்பட்டுக் கொள்வர்.ஆனால் படிக்கப் போன இடத்தில் தன் மகள் படும்பாட்டை ஒரு முறை நேரில் வந்து பார்த்தால் போதும் டாக்டர் படிப்பே வேண்டாம் என்று சொல்லி வீட்டிற்கு அழைத்துவந்துவிடுவர்.
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் அனுபவித்த பனிச்சூழ்நிலை, நாங்கள் பயிற்சி மருத்துவராக இருந்த காலத்தில் இருந்தே அப்படியேதான் இருக்கிறது.அதானல்தான் இறந்த பெண்ணின் இடத்தில் எங்களை பொருத்திப் பார்த்து, 'அடடா இப்படித்தானே இந்தப் பெண் சிரமப்பட்டிருப்பாள்' என்று எண்ணி இரவெல்லாம் துாக்கம் வராமல் துடித்துப் போய் நிற்கிறோம்.
குடித்துவிட்டு அடிதடி தகராறில் அடிபட்டவர் கோபமும்,போதையும் குறையாமல் எங்களிடம்தான் சிகிச்சைக்கு வருவார், நாங்கள் யாரும் முகம் சுளித்துக் கொண்டு போய்விடுவதில்லை, எங்களைப் பொறுத்தவரை அவர் ஒரு நோயாளி, அவரைக்காப்பதுதான் எங்கள் கடமை அதைச் சரிவர செய்யவே முற்படுவோம்.
சமயத்தில் இவர் போன்ற நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படும்போது யாரையோ அனுப்பினால் வரத்தாமதமாகிவிடும் என்று எண்ணி நாங்களே ரத்தவங்கி இருக்குமிடத்திற்கு காட்டுப்பாதையில் இருட்டில் தட்டுத்தடுமாறி ஒடிப்போய் வாங்கிவருவோம்.
பயிற்சி மருத்துவப்படிப்பின் போது 12 மணி நேரம் 16 மணி நேரம் என்று பணி நீடிக்கும், வீட்டிற்கு போகக்கூட நேரமிருக்காது, அயராத உழைப்பால், அசதியால் எங்காவது கொஞ்சம் சிறிது நேரம் சாய்த்துக் கொள்ளேன் என்று முதுகு கெஞ்சும், அப்போது கிடைத்த இடத்தில் படுத்து துாங்குவோம்.,அது பலகையாகவே,நாற்காலியாகவோ கூட இருக்கும்.
அப்படித்தான் அந்த கொல்கத்தா பெண் மருத்துவரும் துாங்கியிருக்கிறார் அந்த நேரம் பார்த்து ஒரு மனிதவடிவிலான மிருகம் விழுந்து பிராண்டி கொன்றிருக்கிறது நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.அவ்வளவு பெரிய மருத்துவமனையில் கழிவறையுடன் கூடிய ஒய்வறை என்று மருத்துவர்களுக்கு இருந்திருந்தால் அவர் ஏன் இப்படி பொது இடத்தில் படுத்து துாங்கியிருக்கப் போகிறார்.
இனி எந்த தைரியத்தில் பயிற்சி மருத்துவர்கள் அசருவார், நாம் ஒரு டாக்டர் நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் நம்மை பாதுகாப்பார்கள் என்று இதுநாள் வரை எண்ணியிருந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கியுள்ளனர்.
தமிழகம் உள்பட எல்லா மருத்துவமனைகளிலும் பயிற்சி பெண் மருத்துவருக்கு என்று கழிவறையுடன் கூடிய ஒய்வறைகள் உடனே கட்டப்படவேண்டும், அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்,முதல்வர் மம்தா சொன்னது போல பெண்கள் மீது பாலியியல் குற்றம் புரிபவருக்கு துாக்கு தண்டனை தரவேண்டும்.
புனிதமான ஒரு உயிரை பலி கொடுத்துதான் இவ்வளவு பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது ஆனால் கற்றுக் கொண்டிருக்கிறாமா? என்பதை காலம்தான் பதில் சொல்வேண்டும்.
இறந்த பெண் பயிற்சி மருத்துவரோடு இந்த அவலம் முற்றுப்பெறட்டடும் இப்படியான இன்னோரு சம்பவத்தை நாடும் தாங்காது எங்களது நெஞ்சமும் தாங்காது..என்று நாத்தழுதழுக்க அவர் பேசிமுடித்தார்.
வழக்கமாக இது போன்ற உணர்ச்சிகரமான பேச்சின் நிறைவுக்கு பிறகு சுற்றியிருப்பவர்கள் கைதட்டலை பரிசாக தருவர் ஆனால் இந்த முறை இவரது பேச்சுக்கு கண்ணீர்தான் பதிலாக கிடைத்தது..
-எல்.முருகராஜ்.