மண்சரிவு நடந்த நீலகிரி மலையில் நமது நிருபரின் திக் திக் அனுபவம்
மண்சரிவு நடந்த நீலகிரி மலையில் நமது நிருபரின் திக் திக் அனுபவம்
PUBLISHED ON : அக் 27, 2026 07:27 PM

மண்சரிவு நடந்த இடத்தில் நமது நிருபரின் திக் திக் அனுபவம்
நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் பகுதி 'தினமலர்' புகைப்படக் கலைஞர் (Photo Journalist) உன்னி.


போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் வாகனங்கள் ஆங்காங்கே நின்றிருந்தன. எனவே, மோட்டார் பைக்கில் சக நிருபர் ஒருவருடன் சேர்ந்து, அதிகம் பாதிக்கப்பட்ட பர்லியாருக்குப் புறப்பட்டார். அங்குதான், கற்பனைக்கும் எட்டாத வகையில் 24 செ.மீ மழை பெய்து பெரும் பிரளயமே வெடித்திருந்தது.

அன்றைய பணிகளை முடித்துவிட்டு இரவு குன்னூர் திரும்பியதும்தான் அவருக்குச் சிக்னல் கிடைத்தது. உடனடியாகத் தன்னிடம் இருந்த படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பிவிட்டு வீடு திரும்பினார். விடிந்ததும், நிலைமை இன்னும் மோசமாக இருந்த ஹில்க்ரோவ் ரயில் நிலையத்திற்கு, மற்றொரு பத்திரிகைத் நண்பரான சத்யமூர்த்தியுடன் சேர்ந்து மீண்டும் களத்தில் இறங்கினார்.
வழியெங்கும் பல இடங்களில் தண்டவாளங்கள் மண் மற்றும் ராட்சதப் பாறைகளால் மூடியிருந்தன. ஐந்து பாலங்கள் மற்றும் ஒரு குகையைக் கடந்து ஹில்க்ரோவை அவர்கள் அடைந்தபோது, அங்கு கடமையே கண்ணாக ஸ்டேஷன் மாஸ்டரும் கேன்டீன் நடத்துபவரும் மட்டுமே இருந்தனர்.
'நேற்றை விட இன்றைக்கு மண் சரிவு இன்னும் அதிகம்; இங்கு நிற்பதே ஆபத்து. காட்டின் வழியாகக் குறுக்கே நடந்து சென்று, குரும்பாடி என்ற இடத்தை அடைந்து பஸ் பிடித்து ஊருக்குத் திரும்பி விடுவோம்' என்றார்கள் அவர்கள். இவர்களும் வேறுவழியின்றி அவர்களுடன் இணைந்து கொண்டனர். எங்கு புதைமணல் இருக்கும், எங்கு கால் சறுக்கிவிடும், எப்போது பாறை உருண்டு வந்து விழும் என்று எதையுமே கணிக்க முடியாத திக் திக் பயணம அது. இதில் நடுநடுவே வெறித்தனமான மழையும் அவர்களை வாட்டியெடுத்தது.
சம்பவம் நடந்து மூன்று நாளாகியும் இயல்பு நிலைக்குத் திரும்பாத பர்லியாரில், தனது மூன்றாம் நாள் பயணத்தைத் தொடர்ந்தார் உன்னி. மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் தங்கள் கைப்பேசியை ரீசார்ஜ் செய்யக்கூட முடியாமல், நடந்த விவரங்களை வெளியில் பகிர்ந்து கொள்ள இயலாமல் கடுமையாக அவதிப்பட்டனர். அவர்களின் அத்தனை சிரமங்களையும் பதிவு செய்துகொண்டு அங்கிருந்து திரும்பினார்.
நான்காவது நாள்... கோவையில் இருந்து நிருபர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் அடங்கிய பெரிய குழுவுடன் மீண்டும் ஒரு மலையேற்றம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது வழியில், வீடியோ நிருபர் மகேஷ் எதிர்பாராதவிதமாகப் பாறையிலிருந்து வழுக்கி விழுந்து காயமடைந்தார்.
அவரைத் தாங்கிக் கொண்டு பாதுகாப்பாகத் திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென மிகப்பெரிய சப்தம் கேட்டது! அனைவரும் யானைதான் வந்துவிட்டது என்று அச்சத்தில் உறைந்துபோனார்கள். ஆனால், அது மலை மீது இருந்து உருண்டு விழுந்த பாறைகளின் சப்தம் என்பது பின்னர் தெரியவந்தது. அந்த ஐந்து நிமிடப் பயத்திற்குப் பிறகு, மிகுந்த எச்சரிக்கையுடன் தாழ்வான பகுதிக்கு வந்து குன்னூர் வந்து சேர்ந்தனர். அதோடு அந்த நான்கு நாள் கடினமான பயணமும் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இயற்கையின் கோரத்தாண்டவத்தையும், ஒரு நிருபராக இவர் எதிர்கொண்ட அந்த அச்சுறுத்தலான தருணங்களையும் தன் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்கிறார் உன்னி.
இந்தச் சூழலில், பொக்லைன் இயந்திர ஓட்டிகளின் உழைப்பை நாம் நிச்சயமாகப் பாராட்டியே ஆக வேண்டும். மண் சரிவைச் சீரமைப்பதற்காக ஆபத்தான பல பகுதிகளிலும் தனி ஆளாக நின்று அவர்கள் தீவிரமாகப் பணியாற்றினர். குடிப்பதற்குத் தண்ணீர் கூட இல்லாமல் தவித்த ஒருவரிடம், தாங்கள் கொண்டு சென்ற குடிநீரைக் கொடுத்தபோது, அவர்களுக்கு உயிர் வந்தது போன்ற உணர்வை முகத்தில் காட்டியதை அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
நீலகிரி மலையில் முன்பை விட இப்போது இயற்கை அடிக்கடி சீறுகிறது. அதற்குக் முக்கியக் காரணம் மனிதர்கள்தான். பல்வேறு காரணங்களைச் சொல்லிக்கொண்டு இயற்கையைத் தொடர்ந்து நாம் சீரழித்துக் கொண்டே இருக்கிறோம். அதற்கான ஒரு சிறு எச்சரிக்கை மணிதான் இந்த நிலச்சரிவு. இனியாவது நாம் இதனை உணர்ந்து கொண்டால் சரி!
படம்,தகவல்:குன்னுார் உன்னி
-எல்.முருகராஜ்
