PUBLISHED ON : டிச 12, 2024 12:00 AM

மைதானத்தின் உள்ளூம் புறமும் குளிர் நடுங்கிக் கொண்டு இருந்தது
ஆனால் அந்த குளிரிலும் சென்னை-ஹைதரபாத் அணி வீரர்கள் மிகவும் சூடாக இருந்தனர்.
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்தாட்ட போட்டியில் மோதிக்கொண்ட சென்னை-ஹைதராபாத் அணி வீரர்கள் இருவருக்குமே இந்த மேட்ச் முக்கியமானதாக இருந்தது.வெற்றிப்புள்ளிகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம்.
இதனால் ஆட்டம் ஆரம்பித்த அந்த நிமிடத்தில் இருந்தே வேகம் பற்றிக் கொண்டது.பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்ற விவரத்தை எல்லாம் நேற்றே விவரமாக சொல்லிவிட்டோம்.
இந்த செய்தியில் சொல்லவந்தது அந்த ஆட்டம் எவ்வளவு பரபரப்பாக இருந்தது என்பதைத்தான்.
இந்த போட்டியில்தான் வீரர்கள் அதிகம் மோதிக்கொண்டனர் நடுவரால் நிறைய பேருக்கு எல்லோ கார்டு என்ற எச்சரிக்கை கார்டு காட்டப்பட்டது.
சக வீரர் ஒருவர் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தாலும் விளையாட்டைத் தொடர்நதாக வேண்டும் என்பது விளையாட்டின் விதி என்ற நிலையில், ஒரு பக்கம் ஆம்புலன்சில் அடிபட்ட வீரரை ஏற்றிக்கொண்டிருக்க இன்னோரு பக்கம் அவருக்கு பதிலாக மாற்று வீரர் களத்தில் இறங்க, விளையாட்டு தொடர்ந்தது.
விளையாட்டின் முடிவில் சென்னை அணி வெற்றி பெற்றது என்பதை விட அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட வீரர் பிரச்னையின்றி இருக்கிறார் என்பதே ரசிகர்களுக்கும் மைதானத்தில் குழுமியிருந்த மற்றவர்களுக்கும் பெரும் சந்தோஷத்தைத்தந்தது.
விளையாட்டு வீரர்களுக்கு என்னப்பா கவலை நல்லா சம்பாதிக்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்பவர்களும் இருக்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள்தான் ஆனால் ஒவ்வொரு மேட்சின் போதும், அதுவும் கால்பந்து,ஹாக்கி,கபடி போன்ற விளையாட்டுகளில் விளயைாடும் ஒவ்வொரு வீரர்களும் உயிரைக்கொடுத்துதான் விளையாடுகின்றனர் என்பது தெரியவேண்டும் என்பதற்காகவே இந்த செய்தியும் படமும்...
-எல்.முருகராஜ்.