இந்தியாவின் ஆன்மாவைத் தனது கேமரா லென்ஸ் மூலம் உலகிற்குக் காட்டிய புகைப்பட மேதை ரகு ராய், டெல்லியில் நேற்று காலமானார். அவரது உடல் டெல்லியில் உள்ள லோதி தகன மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.
புகைப்படக் கலையைத் தனது சுவாசமாகக் கொண்டிருந்த ரகு ராயின் இறுதிச் சடங்கு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தகனம் செய்யப்படுவதற்கு முன், அவர் உயிராய் நேசித்த அவரது கேமராவும், ஒரு பிலிம் ரோலும் அவரது உடல் மீது வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. வாழ்நாள் முழுவதும் எதைச் சுவாசித்தாரோ, அதையே தனது இறுதித் துணையாகவும் கொண்டு அவர் விடைபெற்றார்.
-இல் பிறந்த ரகு ராய், அடிப்படையில் ஒரு சிவில் இன்ஜினியர், 23-வது வயதில் தற்செயலாக ஒரு கழுதைக் குட்டியைப் படம் பிடித்தார். அந்தப் புகைப்படம் லண்டனின் 'தி டைம்ஸ்' பத்திரிகையில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுவே அவரது அரை நூற்றாண்டு காலப் புகைப்படப் பயணத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டது. 1966-இல் 'தி ஸ்டேட்ஸ்மேன்' பத்திரிகையில் தலைமைப் புகைப்படக் கலைஞராகப் பணியைத் தொடங்கிய அவர், இந்தியாவின் மிக உயரிய காட்சி அடையாளங்களைச் செதுக்கினார்.
ரகு ராயின் கேமரா அழகை மட்டும் தேடவில்லை; அது இந்தியாவின் வலிகளையும் போராட்டங்களையும் ஆவணப்படுத்தியது.1971 வங்கதேச அகதிகள் நெருக்கடி, 1984 போபால் நச்சுவாயுக் கசிவு போன்ற வரலாற்றுத் துயரங்களை இவரது லென்ஸ் உலகிற்கு உரக்கச் சொன்னது.அன்னை தெரசா முதல் எம்.எஸ். சுப்புலட்சுமி வரை, இந்திரா காந்தி முதல் தலாய் லாமா வரை இவர் புகைப்படம் எடுக்காத ஆளுமைகளே இல்லை.கருப்பு - வெள்ளை நிழற்படங்களில் இவர் வடித்த கவிதைகள் உலகத் தரம் வாய்ந்தவை.
புகழ்பெற்ற 'மேக்னம் போட்டோஸ்' அமைப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் இவரே. உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ஹென்றி கார்டியர்-பிரெஸன் என்பவரால் பரிந்துரைக்கப்பட்ட பெருமை இவருக்கு உண்டு. 1972-இல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், 'கேமரா இல்லாமல் நான் ஒன்றுமில்லை; ஒரு புகைப்படம் ஒருபோதும் பொய் சொல்லாது' என்பதில் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டிருந்தார்.
'க்ளோஸப்' படங்களின் காதலரான இவர், 'உன்னால் ஒரு விஷயத்திற்கு மிக நெருக்கமாகச் செல்ல முடியவில்லையெனில், உனது புகைப்படம் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது' என்பார். பிலிம் ரோல் காலம் முதல் இன்றைய டிஜிட்டல் காலம் வரை தன்னை வியக்கத்தக்க வகையில் தகவமைத்துக் கொண்டவர். இன்று நாம் ரசிக்கும் 'இந்தியா டுடே' போன்ற இதழ்களின் காட்சித் தரத்தைத் தீர்மானித்தவர் இவரே.