PUBLISHED ON : ஜூலை 16, 2024 12:00 AM

எல்லாத்தகுதியும் இருந்தும் கொஞ்சம் உயரம் குறைவு என்பதற்காக அழகிப்போட்டியில் ஒதுக்கப்படும் பெண்களுக்காகவே நடைபெற்ற, உலக அழகிப்போட்டியில் ஹீப்ளியைச் சேர்ந்த மருத்துவரான ஸ்ருதி ஹெக்டே வெற்றி பெற்று பிரபஞ்ச அழகியாகியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் ஹீப்ளியில் பிறந்து வளர்ந்தவரான ஸ்ருதி மருத்துவக்கல்லுாரி மாணவியாக இருந்த போது பெங்களூருவில் நடைபெற்ற அழகிப்போட்டியில் கலந்து கொண்டு தோல்வி அடைந்தார்.
சரி முதலில் படிப்பை முடிப்போம் என்று படித்து முடித்து மருத்துவரானார் ஆனால் அவர் மறந்தாலும் அவரது தாயார் மகளின் கனவை மறக்காமல் அதை நிறைவேற்றுவதில் துடிப்பாய் இருந்தார்.
மீண்டும் மீண்டும் அழகிப்போட்டிகளில் பங்கேற்கவைத்தார், இதற்கெல்லாம் நிறைய செலவு பிடித்தது, மருத்துவராகி சம்பாதித்த பணத்தை அதில் செலவு செய்தார்.
கடைசி முறையாக இருக்கட்டும் என்று அந்த போட்டியில் பங்குபெற்றார், அதிர்ஷ்டம் அவருக்கு துணையாக இருந்தது, போட்டியில் வெற்றி பெற்றார். அனைவரது பார்வையும் அவர் மீது விழுந்தது, சினிமாவிலும்,சீரியலிலும் நடிக்கவாய்ப்பு கிடைத்தது.
மருத்துவப்படிப்பிற்கு இடையூறு இல்லாமல் நடிப்பை தொடர்ந்தார், வேண்டிய பணம் கிடைத்தது, வெளி மாநிலங்களில் நடைபெற்ற அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டவர் வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் கலந்து கொள்ளத் துவங்கினார்.
நிறைய போட்டிகளில் கலந்து கொண்டாலும் தான் நிராகரிக்கப்படுவதற்கு காரணம் தனது உயரக்குறைவுதான் என்பதை உணர்ந்தார், இவரைப் போன்ற உயரம் குறைவானவர்களுக்காகவே (165 செமீட்டருக்கு கிழே உள்ளவர்கள்)கொலம்பியாவில் வருடந்தோறும் பிரபஞ்ச அழகிப்போட்டி நடப்பதை அறிந்து அதிலும் கலந்து கொண்டார்.
பல்வேறு படிகளைத்தாண்டிய ஸ்ருதி கடைசியில் இந்த 2024 ஆம் வருடத்திற்காக பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்டுள்ளார்.உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.விடாமுயற்சி வெற்றி தரும் என்பதற்கான உதாரணமாக திகழ்கிறார் ஸ்ருதி.
-எல்.முருகராஜ்.

