முல்லைப் பெரியாறு அணைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் இன்று
முல்லைப் பெரியாறு அணைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் இன்று
PUBLISHED ON : செப் 21, 2026 07:34 PM

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (குறிப்பாக 1876--1877 காலகட்டத்தில்) தக்காணப் பீடபூமிப் பகுதியில் பெரும் தாது வருடப் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது சென்னை மாகாணத்திற்கு உட்பட்ட மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் பகுதிகள் போதிய மழையின்றி வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் உணவின்றியும் குடிநீரின்றியும் பரிதவித்தனர்.
அதே வேளையில், மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவில் பெய்யும் மழைநீர், 'பெரியாறு' மற்றும் 'முல்லையாறு' என்ற நதிகளாகப் பெருகி, அரபிக்கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருந்தது.
மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் வீணாகும் தண்ணீரை, கிழக்கு நோக்கித் திருப்பி வறண்ட மதுரைப் பகுதிக்குக் கொண்டு வர வேண்டும் என்ற திட்டம் முன்வைக்கப்பட்டது.
பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுவிக் என்பவரிடம் இந்த அணையைக் கட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 1886-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, கட்டுமான பணியை (1987 செப்., 21) தொடங்கினார்.
அணை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டு நிதி ஒதுக்க மறுத்ததுடன். திட்டம் கைவிட்டு பென்னி குக்கை ஊர் திரும்பவும் உத்திரவிட்டது.
ஆனால், மக்களின் துயரத்தைக் கண்ட பென்னிகுவிக் பின்வாங்கவில்லை. இங்கிலாந்திற்குச் சென்ற அவர், அங்குள்ள தனது சொத்துக்கள், வீடு மற்றும் மனைவியின் நகைகள் வரை அனைத்தையும் விற்று பணத்தைத் திரட்டி இந்தியா திரும்பினார். மீண்டும் அணை கட்டும் பணியைத் தீவிரமாகத் தொடங்கி, 1895-ஆம் ஆண்டு வெற்றிகரமாக அணைக் கட்டுமானத்தை நிறைவு செய்தார்.
சிமெண்ட் இல்லாத அந்த காலத்தில், கருங்கல், சுண்ணாம்பு மற்றும் சுர்க்கி (சுட்ட செங்கல் பொடி) கலவையைக் கொண்டு 176 அடி உயரத்தில் இந்த ஈர்ப்பு அணை கட்டப்பட்டது.
முல்லையாறும் பெரியாறும் இணையுமிடத்தில் அணை கட்டப்பட்டு, மலையைக் குடைந்து குகை வழிப் பாதை மூலம் தண்ணீர் தமிழகத்தின் வைகை ஆற்றுப் படுகைக்குத் திருப்பப்பட்டது.
இதன் மூலம் தமிழகத்தின் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.,குடிநீர் பஞ்சமும் தீர்ந்தது.
தனது சொந்தச் சொத்தை இழந்து தமிழ்நாட்டு மக்களுக்கு உயிரளித்த கர்னல் ஜான் பென்னிகுவிக்கை, தென் தமிழக மக்கள் இறைவனுக்குச் சமமாகப் போற்றுகின்றனர்.
இன்றும் தேனி, மதுரை மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வீடுகளின் சுவர்களிலும், கடைகளிலும் பென்னிகுவிக்கின் படத்தைக் காணலாம். பல குடும்பங்களில் தங்களின் குழந்தைகளுக்கு 'பென்னிகுவிக்' என்று பெயர் சூட்டித் தங்களின் நன்றியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
-எல்.முருகராஜ்
.
