தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/ஆனைமங்கலம் செப்பேடு என்ற தமிழர்களின் பெருமை

ஆனைமங்கலம் செப்பேடு என்ற தமிழர்களின் பெருமை

ஆனைமங்கலம் செப்பேடு என்ற தமிழர்களின் பெருமை

1


PUBLISHED ON : மே 22, 2026 03:13 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2026 03:13 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழப் பேரரசின் மாபெரும் பராம்பரியமிக்க சின்னமான வரலாற்று சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடுகளை மீட்டெடுத்தது மகிழ்ச்சி இந்த செப்பேடுகள் வெறும் தொல்பொருட்கள் மட்டுமல்ல. தமிழர்களின் செழுமையான பண்பாட்டு மரபு சிறந்த நிர்வாகத்திறன் அறிவியல் முன்னேற்றம் மற்றும் மதநல்லிணக்க உணர்வின் உயிரோட்டமான சான்றுகளாக விளங்குகின்றன.

நாட்டின் இழந்த பராம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பதில் பிரதமர் மோடியின் முயற்சி பாராட்டத்தக்கது.இந்த வரலாற்றுச் சாதனை தமிழகம் மட்டுமின்றி முழு நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும், இளைய தலைமுறை இந்தியாவின் இந்த செழுமையான நாகரிக பராம்பரியத்தை மதித்து பாதுகாக்க வேண்டும்.Image 1579303தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 985 முதல் 1014 வரை மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சி புரிந்தார். அவரது ஆட்சிக் காலத்தில், ஸ்ரீவிஜயப் பேரரசை (தற்போதைய இந்தோனேசியா) ஆண்ட சைலேந்திர குல மன்னரான மாறவிஜயோத்துங்கவர்மன், தன் தந்தை சூளாமணிவர்மனின் நினைவாக நாகப்பட்டினத்தில் 'சூடாமணி விகாரம்' (சூளாமணிவர்ம விகாரம்) என்ற பிரம்மாண்ட பௌத்த வழிபாட்டுத் தலத்தைக் கட்டினார். அந்த விகாரையின் பராமரிப்புச் செலவுகளுக்காக, நாகப்பட்டினம் அருகிலுள்ள 'ஆனைமங்கலம்' கிராமத்தின் மொத்த நில வருவாயையும் தானமாக வழங்க ராஜராஜ சோழன் வாய்மொழியாக உத்தரவிட்டார்.

அதன்பின், ராஜராஜ சோழனின் புதல்வர் முதலாம் ராஜேந்திர சோழன், தன் தந்தையின் வாய்மொழிச் சாசனத்தை செப்புத் தகடுகளில் நிரந்தரப் பதிவாகப் பொறித்து வழங்கினார். இதுவே வரலாற்றுப் புகழ்பெற்ற 'ஆனைமங்கலம் செப்பேடு' ஆகும். மொத்தம் 21 செப்பேடுகளைக் கொண்ட இந்த ஆவணத்தில், 16 செப்பேடுகள் தமிழிலும், 5 செப்பேடுகள் சமஸ்கிருதத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன. சுமார் 30 கிலோ எடைகொண்ட இந்தச் செப்பேடுகள் அனைத்தும் சோழர்களின் அரச முத்திரை பதிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட வெண்கல வளையத்தில் கோர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு செப்பேடும் 14 இன்ச் நீளமும், 5 இன்ச் அகலமும் கொண்டவை ஆகும். இச்செப்பேடுகளில் சோழர் காலத்துக் கல்வி, அரசியல், கட்டடக்கலை, கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் நிர்வாக முறை பற்றிய அரிய குறிப்புகள் உள்ளன.

கி.பி. 1700-களில், டச்சு கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த புளோரெண்டியஸ் காம்பர் என்ற டச்சு மதபோதகர், இந்தச் செப்பேடுகளைக் கண்டெடுத்துத் தன் சொந்த நாடான நெதர்லாந்திற்கு எடுத்துச் சென்றார். பின்னர், கடந்த 1862-ஆம் ஆண்டு பேராசிரியர் எச்.ஏ. ஹமேக்கர் குடும்பத்தினரால், நெதர்லாந்தின் புகழ்பெற்ற 'லைடன் பல்கலைக்கழக' நூலகத்திற்கு இந்தச் செப்பேடுகள் வழங்கப்பட்டு, கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக அங்குப் பாதுகாக்கப்பட்டன. இவை உலகளவில் 'லைடன் பட்டயங்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்தச் செப்பேடுகளை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வர மத்திய அரசு கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், சமீபத்தில் நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தச் சோழர் கால செப்பேடுகளை அதிகாரப்பூர்வமாகத் திரும்ப ஒப்படைத்தார். இச்செப்பேடுகள் விரைவில் இந்தியா வரவுள்ள நிலையில், இந்த வரலாற்றுச் சாதனையை ஆய்வாளர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது 'சூடாமணி விகாரம்' நாகப்பட்டினத்தில் இல்லை, காலப்போக்கிலும், பிற்காலப் படையெடுப்புகளாலும், ஐரோப்பியர்களின் வருகையாலும் அந்தப் பிரம்மாண்ட பௌத்த விகாரம் சிதைந்து போனது.

இன்னும் இந்த செப்பேடு டில்லி வந்து சேரவில்லை. பிரதமர் வெளிநாட்டு பயணத்தை முடித்து வரும்போது அவருடன் அந்த செப்பேடும் டில்லி வந்து சேரும். டில்லியில் உள்ள மத்திய தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் இதனை தீவிரமாக ஆராய்ந்து அதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வர். பின்னர் இதனை எங்கு வைத்து காட்சிப்படுத்துவது என்று முடிவெடுப்பர்.

இதற்கு இடையே தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், 'ஆனைமங்கலம் செப்பேடுகளை, சோழர்களின் வரலாற்றுத் தலைநகரமான தஞ்சாவூரின் பெருமையைப் போற்றும் வகையில், பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்களின் பார்வைக்காகத் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் வைப்பதே மிக பொருத்தமானதாக இருக்கும்; இதனை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

---தஞ்சை சுந்தர்ராஜன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us