தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/திருநங்கை ரபியாவின் நெகிழ்ச்சிப் பயணம்

திருநங்கை ரபியாவின் நெகிழ்ச்சிப் பயணம்

திருநங்கை ரபியாவின் நெகிழ்ச்சிப் பயணம்


PUBLISHED ON : நவ 18, 2026 09:24 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2026 09:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிறப்பால் ஏற்படும் மாற்றங்களைச் சமூகம் ஏளனமாகப் பார்க்கும் சூழலில், கேலி, கிண்டல்களைப் படிக்கட்டுகளாக்கி உலகளவில் பிரபஞ்ச அழகியாக வலம் வருகிறார் நாகை மாவட்டம் நாகூரைச் சேர்ந்த 30 வயதான திருநங்கை ரபியா. தற்போது தேசிய அளவில் நடைபெறவுள்ள 'பெமினா ஸ்டார்' (Femina Star) அழகிப் போட்டிக்குத் தமிழகத்தின் சார்பாகத் தேர்வாகி, மீண்டும் ஒருமுறை நம் மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கக் காத்திருக்கிறார்.

பொதுவாகத் திருநங்கைகளுக்கு முதல் எதிரியாக மாறுவது அவர்களின் சொந்தக் குடும்பமும், அக்கம்பக்கத்துச் சமூகமும்தான். உடலில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் பதின்ம வயதில், வீட்டை விட்டுத் துரத்தப்படுவதும், படிப்பைப் பாதியிலேயே இழப்பதும், பிழைப்புக்காகப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதும் இன்றளவும் தொடரும் அவலமாக உள்ளது.Image 1647210ஆனால், ரபியாவின் வாழ்வில் அவரது குடும்பமே அவருக்குக் கவசமாக நின்றது. விவசாயி முத்துகிருஷ்ணன் - தமிழரசி தம்பதியரின் ஐந்து குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்த ரபியாவுக்கு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது உடலில் மாற்றம் ஏற்பட்டது. இதைப் புரிந்துகொண்ட பெற்றோர், உள்ளூரில் இருந்தால் சமூகத்தின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகித் தங்கள் குழந்தை மனதளவில் உடைந்துவிடுவார் என்பதை உணர்ந்தனர். உடனடியாக, ரபியாவைக் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பிப் பாதுகாத்தனர்.

சிறுவயது முதலே அழகுக்கலையில் தீராத ஆர்வம் கொண்டிருந்த ரபியா, பெங்களூருவில் அழகுக்கலை டிப்ளமோ பயின்று, அங்கு இரண்டு ஆண்டுகள் பியூட்டிஷியனாகப் பணியாற்றினார். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளையும் சரளமாகக் கற்றுக்கொண்டார். 'பாக்சர்', 'ராமாச்சார்யா' ஆகிய கன்னடத் திரைப்படங்களிலும், ஒரு இந்தித் திரைப்படத்திலும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துத் தனது நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும், மாடலிங் துறையின் மீதே அவருக்குத் தீராத காதல் இருந்தது.Image 1647211-ம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற அழகிப் போட்டியில் முதலிடம் பிடித்தது, ரபியாவின் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல அழகிப் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்களைக் குவிக்கத் தொடங்கினார்.பெண்களுக்கான உலக அழகிப் போட்டியில் பங்கேற்று, மூன்று முறை மூன்றாம் இடம் பிடித்து அசத்தினார்.

கம்போடியா நாட்டில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சர்வதேச அழகிப் போட்டியில் 'உலக அழகி' பட்டத்தைத் தட்டிச் சென்றார்.இன்று ரபியாவின் வீடு முழுவதும் அவர் வென்ற பதக்கங்களும், கோப்பைகளும் நிறைந்து அவரது உழைப்புக்குச் சாட்சியாக நிற்கின்றன.

இந்திய அளவில் ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் 'பெமினா ஸ்டார்' போட்டியின் திருநங்கையர் பிரிவில், தமிழகத்தின் சார்பாக ரபியா தேர்வாகியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் டிசம்பர் மாத இறுதியில் நடைபெறவுள்ள இப்போட்டியில், நாடு முழுவதிலுமிருந்து 100 திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர். இதில் மகுடம் சூட ரபியா தீவிரமாகத் தயாராகி வருகிறார்.

கடினமான சூழல் ஒருபோதும் லட்சியத்திற்குத் தடையாக இருக்க முடியாது என்பதை நிரூபித்துள்ள ரபியாவுக்குப் பாராட்டுகள் குவிந்தாலும், அவரது மனதில் ஒரு ஆழமான ஏக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.

இதுகுறித்து ரபியா பகிர்ந்துகொண்டதாவது:

'என்னை அரவணைத்து, தைரியமூட்டிய எனது குடும்பத்தினரால்தான் என்னால் சுதந்திரமாகச் சிந்திக்கவும், சாதிக்கவும் முடிந்தது. ஆனால், சர்வதேச அளவில் நம் நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்க்கும் மற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்ட பல உதவிகள் கிடைக்கின்றன. நான் ஒரு திருநங்கை என்பதால், எனக்கு உதவ யாரும் முன்வருவதில்லை. பியூட்டிஷியன் மற்றும் மாடலிங் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தைச் சேமித்து வைத்தே, வெளிநாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். எனக்கும் போதிய பொருளாதார ஆதரவு கிடைத்தால், இன்னும் பல உயரங்களைத் தொட்டு நாட்டிற்குப் பெருமை சேர்ப்பேன்.'

சமூகத்தின் புறக்கணிப்புகளையும், பொருளாதாரத் தடைகளையும் தாண்டித் தன்னம்பிக்கையால் ஒளிரும் ரபியா போன்ற சாதனையாளர்களுக்கு அரசு மற்றும் தனியார் அமைப்புகள் கைகொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

படங்கள்,கட்டுரை:மிட்டல்ராஜ்,நாகை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us