PUBLISHED ON : செப் 11, 2025 12:00 AM

நடிகர் விஜயகாந்தை வைத்து நான் எடுத்த ரமணா திரைப்படத்தின் கதை கற்பனைக் கதையே ஆனால் நான் கற்பனையில் வடித்த ரமணாக்கள் இப்போது என் கண் முன்னே இருக்கின்றனர் என்று மிகவும் உணர்ச்சிகரமான முறையில் சினிமா டைரக்டர் ஏஆர் முருகதாஸ் கூறினார்.
“திறமைக்கு தடையாக ஏழ்மை இருக்கக்கூடாது” என்பதே இவர்களின் நோக்கம். தேர்வுகளில் சிறப்பாக மதிப்பெண் பெற்றும், உயர்கல்விக்கான செலவைச் செய்ய முடியாத மாணவர்களுக்கு, 100% நிதி உதவியை வழங்கி, அவர்கள் கனவுகளை நனவாக்கி வருகின்றனர்.
இன்றுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் - தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களில் கல்வி கற்று மருத்துவம், பொறியியல், கலை & அறிவியல் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்புற்று விளங்கிவருகின்றனர்.
ஆனந்தம் அறக்கட்டளை நிறுவனர் செல்வகுமார் மாணவர்களின் நலனுக்காகவும், மனிதநேயச் சேவைகளுக்காகவும், தமிழக அரசின் உயரிய டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை பெற்றுள்ளார்.
அவரது வழிகாட்டுதலில் தலைமையில் இந்த 2025 ஆம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ,மாணவியருக்கு ஆன்ந்தம் வெற்றிப்பாதை என்ற நிகழ்வின் மூலம் கூடுதல் பயிற்சி தரப்பட்டது.
இந்த பயிற்சியின் நிறைவு விழா சென்னை குன்றத்துார் சிஐடி வளாகத்தில் நடைபெற்றது,சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார்,அவர் பேசியதாவது..
உங்களை நான் நல்லா படிங்க என்று சொல்லப்பபோவது இல்லை ஏன் என்றால் ரொம்ப நல்லா படித்துதான் இங்க வந்திருக்கீங்க.
இதெல்லாம் சினிமாவிற்கு சரி நிஜத்திற்கு வருமா? என்றால் வரும் என்றே தோன்றுகிறது என் கண் முன்னே காணப்படும் 1537 மாணவர்களும் விஜயகாந்த் பாணியில் சொல்லப்போனால் 7 கிலோமீட்டருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் செயல்படப்போகிறீர்கள், உங்களுக்குள் நல்லது நடக்கவேண்டும் என்ற வேட்கை இருக்கிறது, நாடு நன்றாக இருக்கவேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது, இதற்காக உங்களுக்குள் ஒரு நல்ல நெட்ஒர்க்கும் இருக்கிறது, நீங்கள் எல்லாம் நிஜ ரமணாக்கள் போலவே தோன்றுகிறீர்கள், நம்பிக்கை நம்மை வாழவைக்கும் வாழ்த்துக்கள் என்றளவில் பேசினார்,அதை ஆமோதிப்பது மாணவர்களிடம் இருந்து பலத்த கைதட்டல் எழுந்தது.
-எல்.முருகராஜ்