தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/20 ஆண்டுகள்; அரை மணி நேரம்!

20 ஆண்டுகள்; அரை மணி நேரம்!

20 ஆண்டுகள்; அரை மணி நேரம்!


PUBLISHED ON : ஜூன் 24, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“இன்னிக்கும் அம்மாகிட்ட திட்டு வாங்கினியா?”

ஓவியா கேலியாகக் கேட்டது எனக்கு என்னவோ போல் இருந்தது. என் வீட்டு விஷயங்கள் எல்லாம் ஓவியாவுக்கு எப்படியோ தெரிந்துவிடுகின்றன!

விடுமுறை விட்டதன் பலனோ என்னவோ, என்னால் காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அப்பாவும் அம்மாவும் என்னைத் திட்டிக்கொண்டே இருந்தார்கள். விடுமுறை நாட்களில் காலை 8 அல்லது 9 மணிக்குத்தான் எழுந்தேன். அப்புறம் மெதுவாக பல் தேய்த்து, டி.வி. பார்த்து, டிபன் சாப்பிட்டுக் குளிக்கப் போகும்போது 12 மணி ஆகிவிடும். மதியம் சாப்பிட்டுவிட்டு, வெளியே விளையாட போகச் சரியாக இருக்கும்.

இப்போ நிலைமையே வேறு. காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, பள்ளி வாகனத்தை நோக்கி ஓடவேண்டும். இதன் நடுவே, முடிக்க வேண்டிய வீட்டுப்பாடங்களை எழுதி முடிக்கவேண்டும். எடுத்துச் செல்லவேண்டிய நோட்டுகளை மறக்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும் பாடு! ஓடிப் போய் வாகனத்தில் ஏறினபிறகுதான், நான் எடுத்துக்கொள்ள மறந்துபோன விஷயங்கள் ஞாபகம் வருகின்றன.

இரண்டு நாட்கள் அப்பா பள்ளிக்கு வந்து, சாப்பாட்டுக் கூடையைக் கொடுத்துவிட்டுப் போனார். ஒரு நாள் அம்மா வந்து, வீட்டில் மறந்துவிட்டு வந்த நோட்டுப் புத்தகத்தைக் கொடுத்துவிட்டுப் போனார். இருவர் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்தன. எனக்கே வெட்கமாக இருந்தது. ஆனால், என்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

இன்றைக்கு அம்மாவிடம் திட்டு. அதைத்தான் ஓவியா புரிந்துகொண்டுவிட்டாள். உமா மிஸ்ஸும் இதைக் கேட்டுக்கொண்டே அருகில் வந்தார். என்ன விவரம் என்று கேட்க, என் பிரச்னைகளைச் சொன்னேன்.

“சும்மா, சும்மா ஒரே வேலையைச் செய்யறது போரடிக்குது மிஸ். எழுந்துக்கணும், குளிக்கணும், ஹோம் ஒர்க் செய்யணும், ஸ்கூல் ஓடிவரணும்...கொஞ்சம்கூட நிதானமே இல்லாம இருக்கு மிஸ்.”

உமா மிஸ் என் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார். அவரது பார்வை கூர்மையாக இருந்தது.

“இதே வார்த்தைய நான் சொன்னா எப்படி இருக்கும் கதிர்? தினமும் உங்க முகங்களையே பார்த்துக்கிட்டு இருக்கணும், ஒரே பாடத்தை ஒவ்வொரு ஆண்டும் சொல்லிக் கொடுக்கணும், ஆன்ஸர்பேப்பர கரெக்ட் செய்யணும், மார்க் போடணும், எக்ஸ்கர்ஷன் கூட்டிக்கிட்டுப் போகணும்...இதெல்லாம் போரடிக்குதுன்னு சொன்னா என்ன ஆகும்? உங்கம்மா சொன்னா என்ன ஆகும்? உங்கப்பா சொன்னா என்ன ஆகும்?”

நான் மிரண்டு போனேன். யோசிக்கவே அச்சமாக இருந்தது. அமைதியாக ஓடிக்கொண்டு இருக்கும் நதியைக் கலக்கிவிட்டது போலாகிவிடுமே! என் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்த உமா மிஸ்,

“தொடர்ச்சியா ஒரு விஷயத்தைச் செய்யறதுங்கறது சுமையல்ல, எரிச்சல் அல்ல, 'போர்' அல்ல. அப்படி நினைச்சிருந்தா, இன்னிக்கு அசோகமித்திரன்ங்கற மாபெரும் எழுத்தாளரைக் கொண்டாடியிருக்கவே முடியாது.” என்றார்.

அசோகமித்திரன் பெயரை அப்பா பலமுறை வீட்டில் சொல்லியிருக்கிறார். தமிழின் முக்கியமான எழுத்தாளர். '18வது அட்சக்கோடு', 'தண்ணீர்', 'மானசரோவர்' என்றெல்லாம் அவரது நாவல்களை அப்பா நூலகத்தில் பார்த்திருக்கிறேன்.

“அவர் என்ன செஞ்சாரு மிஸ்?” ஓவியா கேட்டாள்.

“1968இல அவர் ஜெமினி ஸ்டூடியோஸ்லே பார்த்துக்கிட்டு இருந்த வேலையை விட்டுட்டார். முழுநேர எழுத்தாளராக ஆகணும்னு முடிவு பண்ணிட்டார். அதுக்கப்புறம் ஒரு வேலையை ரெகுலரா செஞ்சார். அவர் தி.நகர்ல தாமோதர ரெட்டித் தெருவுல குடியிருந்தார். காலையில எழுந்தவுடனே, நேரா, பக்கத்துல இருந்த நடேசன் பூங்காவுக்குப் போய் உட்கார்வார். வெளிச்சம் இருக்கும், வெயில் 'சுள்'னு உறைக்காது. பூங்காவுல இருந்த பெஞ்சுமேல் உட்கார்ந்துக்கிட்டு எழுத ஆரம்பிப்பார். வெயில் உறைக்க ஆரம்பிச்சவுடனே, அங்கே இருந்து கிளம்பிடுவார். அதிகபட்சம் போனா, அரை மணிநேரம் தான் அங்கே உட்கார்ந்து எழுத முடியும்... ஆனால், அதை எத்தனை ஆண்டுகள் செஞ்சார் தெரியுமா?”

“எத்தனை ஆண்டுகள் மிஸ்?” நான் ஆவல் தாளாமல் கேட்டேன்.

“20 ஆண்டுகள்.”

நான் வியந்து போனேன். ஒரு மனிதர் ஒவ்வொரு நாளும் வெறும் அரைமணி நேரம், தொடர்ச்சியாக எழுதினார் என்பதே என்னைத் திக்குமுக்காட வைத்தது.

“இன்னிக்கு தமிழ் இலக்கியத்தில் நாம கொண்டாடுற பல நாவல்களையும் சிறுகதைகளையும் அசோகமித்திரன் இப்படித்தான் எழுதினார். இதுதான் 'கன்சிஸ்டன்சி'ன்னு சொல்லப்படற சீரான 'தொடர்முயற்சி'யோட வெற்றி.

''அதாவது, ஒரு வேலை எப்போதும் 'போர்' அடிப்பதில்லை. அதைத் தொடர்ச்சியாக செய்யச்செய்ய, மெருகு கூடும். தேர்ச்சி பெருகும். நுட்பம் பிடிபடும். செதுக்கிச் செதுக்கிச் செய்யப்படும் சிற்பம் போல், எழுத்து உறுதியாகும்.

''அசோகமித்திரன் மட்டுமல்ல, நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான காப்ரியல் கார்சியா மார்க்குவேஸ் கூட இப்படிப்பட்டவர்தான். ஒழுங்கு, தொடர் முயற்சி, ஈடுபாடு தான் இவர்களுடைய அடிப்படைப் பண்புகள்.

''பெரிய சாதனையாளர்கள் அனைவருமே இத்தகைய ஒரு தொடர்முயற்சியை செய்து வந்திருக்கிறார்கள். அதனால் தான் அவர்களால் சாதனையே செய்ய முடிந்தது.”

உமா மிஸ் சொல்லி முடித்தபோது, சட்டென ஒரு பூட்டு திறந்துகொண்டது போல் இருந்தது. அதுதான் வெற்றிக்கான பூட்டு.

(தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us